பாம்பின் கால்

பாம்பின் கால்

       அவன் நிறம் வெள்ளை, வெள்ளையென்றால் தந்த வெள்ளையில்லை. நீலம் கலந்தடித்த  சுண்ணாம்பு  வெள்ளை,  வெளிறிப்போன  ரோஜா  வெள்ளை.

       லுகோடர்மா  வெள்ளை.

       அவன்  இடம் மூலை.  மூலையின்  இடதுபுறம்  டெஸ்பாட்ச், அவன் நிறம் கொண்டு வந்து சேர்ந்த இடம். கஸ்டமர்கள் முகம் சுளிப்பார்கள். கவுண்ட்டரில் போட வேண்டாம் என்று மேனேஜர் சொல்லியிருந்தார். அதனால்  சேவிங்ஸ்  பாங்க்,  ரெகரிங் டிபாசிட் ,  பில்ஸ் ,  கரண்ட்  அக்கவுண்ட்  என்ற  அந்த  வழவழப்பான  கவுண்ட்டரில் புடவைப் பூக்கள் சிரித்தான். இரண்டிரண்டு பேராய்ச் சேர்ந்து இயங்கும் கிளியரிங். அட்வான்ஸ்களில் ஜோடிப் பொருத்தம் அமையவில்லை. காஷ் கவுண்ட்டர் சிறைக் கூண்டுக்குள்  தள்ளிப்  பூட்ட  முடியவில்லை.  அவன் கிளார்க்காக அமர்த்தப் பட்டிருந்தான்.  பதவி  ஏணியில்  க்ளார்க்கும்  கேஷியரும்  வேறு  வேறு  உயரம்.

       அதனால் மூலை, அரக்குப்  பவழங்கள்  முடிச்சாய்  இறுகிய  மூலை, ஸ்பிரிட்லாம்ப் பூவாய் மணக்கும் மூலை, காய்ந்த கோந்துத் தடவல்கள் வரிச் சித்திரங்களாய் இழுசிய மேஜை. ப்ராங்கிங்  மிஷின்  ரத்தம் சிந்தும்  மூலை.  பித்தளை பளபளப்புகள்,  லாமினேட்  வழவழப்புகள்,  குஷன் மென்மைகள் இல்லாத மூலை. லேசாய்  இருண்ட,  கதவைத்  திறந்தால்  பாத்ரூம்  மணக்கிற  மூலை.

       அவர்கள்  மனசைப்  போல.

       அந்த மனங்கள்  ஒரு  கண்ணாடித்  தம்பளரை  நாசூக்காய்,  தனியாய்க்  கவிழ்த்து வைத்திருந்தது. தினந்தினம்  சொல்லி  வைத்தாற்போல்  அதில்தான்  டீ  வரும்.  தண்ணீர் தளும்பும். இரவல் பேனா கேட்கும்போதெல்லாம் மையில்லை என்று பொய் சிந்தியது. சாப்பாட்டு  மேஜையைப் பிரிக்க முடியாமல் தவித்தது. அந்த அண்டங்காக்கைகள் இரைந்து  கொண்டு  டிபன்பாக்ஸைத்  திறக்கும்போது  இந்த  வெள்ளைக்காக்கை  தனியே  வெளியே  பறக்கும்.

       இந்த  ஒதுக்கல்  பாஷை,  புரிந்த  பாஷை, தாய் பாஷை, தாய்க்குச் சொல்லப் பட்டுத்  தாய் தனக்குச் சொல்லிய பாஷை. கோலி விளையாட்டில் ; பள்ளிக் கூடப் பெஞ்சில் ; காலேஜ் லாப்பில் ; இப்போது ஆபீஸ் மேஜையில்.

       பாஷை புரியப் புரிய, இவனைத் தொடக் கூசியவர்களை இவனும் தொடக் கூசினான்.

       பழகிவிட்டதால்  கண்ணீர்  வருவதில்லை.  முணு  முணுப்பதில்லை.  வெள்ளைப் புலி  பாய்வதில்லை.  பாய்தல்  இல்லை  என்பதனால்  பதுங்கலும்  இல்லை.

       பாய்வதற்கும்,  பதுங்குவதற்கும்  மனசு மட்டுமல்ல, நேரமும் இல்லை. நடக்கத்தான்,  அப்பா  வைத்துவிட்டுப்  போன சுமைகளைத் தூக்கிக்கொண்டு நடக்கத்தான் நேரம். கடன்கள், அம்மா, போன வருஷம் வீட்டோடு வந்துவிட்ட அக்கா, அவளுக்கு காசி – ராமேஸ்வரம்  கனவு,  கடனுக்கும்,  கனவுக்கும்,  வயிற்றுக்கும் சரியாய்ப் போச்சு காசு. ஒரு வருஷத்தில் அக்காவின் காசி – ராமேஸ்வரம்  கைக்கெட்டும் தூரத்தில்  வந்துவிட்டது.  கை  நழுவி  விழுந்தது  கல்யாணம்தான்.

       மேஜைகள் எல்லாம் காலி. இப்படி ஒரு சேரக் காலியானால் கல்யாணம், யாருக்கோ ;  எங்கே ?  கல்யாணத்திற்கு  இவனுக்கும்  அழைப்பு  வரும். அழைப்பு மட்டும்.  அழைப்பு  பெற்ற  ஆபீஸ்  கூடி  ஓலை அனுப்பி, திருப்பதி கல்யாணமாய்ப் பணம் திரட்டி, ப்ரஷர்குக்கரை, டேபிள்ஃபேனை, வெள்ளிக் குத்துவிளக்கைத் தூக்கிக் கொண்டுபோய்  ரிசப்ஷனில்  கை  குலுக்கும்.  முண்டிக்கொண்டு  போட்டோவிற்குத் தலை  நீட்டும்.

அழைப்பைத்  தாண்டி ஓலையின் வால் இவனிடம் நீளாது. கருணைதான். இவனைப்  புண்படுத்த  வேண்டாம்  என்ற கருணைதான். இவனின் வெள்ளைக்கு, இவனின் 35 வயசுக்கு, இவன்  தூக்கிச்  சுமக்கிற  கனத்திற்கு,  பெண்  அவனுக்கு  எட்டாத உயரம். கிடைக்காத பொருள், பாவம், அவனைப் போய் கேட்டு வைக்காதே என்று சொல்லியிருந்தான் எஸ்.ஆர்.கே. ஓலையின் தலை. அதனால் ஓலை வால் இவனை எட்டாது.

ஆனால்  கருணை, கண்ணீரா ?  கண்ணீர்  அமிலமா ?  கையை  அரிக்குமா ? சிந்தும்  தோலில்  புண்மொட்டுக்  கட்டுமா ?  வெள்ளைத் தோலிலுமா ?

வழிந்து  கிடந்த ப்ராங்கிங்  இங்கைத்  துடைத்துப்  போட்டான்.  ரத்தச்  சிவப்பாய்க் கசிந்து,  கை  கசக்கலில்  கூடைக்குப்  போயிற்று  அழைப்பு.

பெண் ;  எட்டாத உயரம் ;  கிடைக்காத  பொருள்.

ஸ்பிரிட்  விளக்கை  உற்றுப்  பார்த்தான்.  நெருப்புக்  கொழுந்து  மெல்ல அதிர்ந்தது.  சுடர்  விரிந்தது.  விரிந்து  விரிந்து  ஆபீஸை  வளைத்துக் கொண்டது. ஹோம  அக்னியாய்,  கல்யாண  சாட்சியாய்.

மூலை கவுண்ட்டரில் வந்து நின்றது. ஒவ்வொருவராய் நெருங்கி நெருங்கி விலகியது. ரோஜாப்பூ கலரில் இன்விடேஷன். ஒவ்வொரு கைக்கும் ஒவ்வொரு பூவை நீட்டிச்  சிரித்தது.

இதற்கும் ஓலை விட்டது ஆபீஸ். திருப்பதி கல்யாணத்துண்டை விரித்தது. ப்ரஷர்குக்கரை வாங்கிக்கொண்டுபோய் ரிசப்ஷனில் நின்றது. கை குலுக்கவில்லை. போட்டோ பிடித்துக் கொள்ளவில்லை. பிடித்து வைத்துக் கொள்ளச் சிரித்த முகம் யாருக்குமில்லை. பெண்ணைப்  பார்த்து  எல்லாம்  வெளிறிச்  செத்திருந்தது.

வெள்ளையென்றால் தந்த வெள்ளையில்லை. நீலம் கலந்தடித்த சுண்ணாம்பு வெள்ளை.  வெளிறிப்  போன  ரோஜா  வெள்ளை.

( ஆனந்த விகடன் )

      




About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these