படித்திருக்கிறீர்களா?

புத்தகங்களை படிக்கத் தக்கவை, மேலோட்டமாக மேயத்தக்கவை தூக்கிக் கடாச வேண்டியவை (Read, Skim, Toss) என மூன்று விதமாக வகைப்படுத்துவது டைம் வார இதழின் வழக்கம். நான் அந்த RST அளவுகோலில் கூடுதலாக ஒரு P (preserve) பாதுகாக்கத் தக்கவை என்பதையும் சேர்த்துக் கொள்வதுண்டு. நான் இங்கே பகிர்ந்து கொள்ளப்போவது நான் பாதுகாத்து வரும் சில புத்தகங்கள் பற்றி:

காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதியார் படைப்புக்கள்:
(பதிப்பும் தொகுப்பும்: சீனி.விசுவநாதன்)

‘தீப்பெட்டியிலும் சாதாரணமாக’ தனது படைப்புக்கள் தமிழ்மக்களைச் சென்றடையவேண்டும் என விரும்பியவர் பாரதி. அதற்கான நிதி ஆதாரங்களைக் 20 சதவீத வட்டி கொடுக்கும் கடன்பத்திரங்களை எழுதிக் கொடுக்கவும் முன் வந்தார். பாரதியின் மறைவுக்குப் பின் அவரது நூல்களைப் பலரும்-செல்லம்மா பாரதியிலிருந்து காலச்சுவடு வரை- பதிப்பித்து வந்திருக்கிறார்கள். ஆனால் அவற்றைக் காலவரிசையில் தொகுப்பது என்ற கடினமான முயற்சியை மேற்கொள்ள முன்வந்தவர்கள் அநேகமாக யாரும் இல்லை.

பாரதி நூற்றாண்டில் எம்.ஜி.ஆர் அரசின் ஆணைக்கிணங்க தமிழ்ப் பல்கலைக்கழகம் பாரதியின் பாடல்கள், கதைகள் கட்டுரைகள் ஆகியவற்றைக் காலவரிசைப்படுத்தி 3 தொகுதிகளாக வெளியிடும் முயற்சியை மேற்கொண்டது. ஆனால் பாடல்கள் தொகுதியை மட்டும் வெளியிட்டுவிட்டு அது அந்த முயற்சியைக் கை விட்டுவிட்டது.

பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை தனி ஒரு மனிதராக சீனி.விஸ்வநாதன் செய்து வருகிறார்.இதுவரை எந்த ஒரு நூலிலும் இடம் பெறாத புதிய செய்திகள் அவற்றிற்கான ஆதாரங்களோடு திரட்டப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பாரதியின் இதழியல் பார்வை குறித்து ஒரு விளக்கமான பார்வை இந்த நூல்களை ஊன்றிப் படிப்பவர்களுக்குக் கிடைக்கும் நல்லி திரு. குப்புசாமி அவர்களின் ஆதரவோடு நான்கு வால்யூம்கள் வந்துள்ளன. கனமான நூல்கள். மின்நூலாகக் கொண்டுவர இயலுமாயின் அயலகத் தமிழர்களுக்கு உதவும். நவீன சிந்தனையுள்ள பதிப்பகங்கள் இது குறித்து சிந்திக்கலாம்.

The Insider:
(Viking வெளியீடு)

முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் சுயசரிதைச் சாயல் கொண்ட நாவல்.அவரே சொல்வது போல இது வழக்கமான சுயசரிதை அல்ல. முழுக்க முழக்க கற்பனை கல்ந்த புனைகதை அல்ல. கதாநாயகனின் அனுபவங்கள் என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து பெறப்பட்டவை என்ற அவர் சொல்வதால் ஒவ்வொரு பாத்திரம் அறிமுகமாகும் போகும் போதும் இது யாராயிருக்கும் என்று ஒரு ஆர்வக் குறுகுறுப்பு ஏற்படுகிறது. ஓர் உதாரணம்: கதாநாயகன் ஆனந்த்திற்கு முதன் முறையாக அமைச்சராக வாய்ப்புக் கிட்டும் போது அதற்குக் குறுக்கே நிற்பது அருணா என்ற பெண்ணுடன் அவனுக்கு இருக்கும் நட்பு. ஆனந்த் நட்பிற்காகப் பதவியைத் தூக்கி எறியப் போகிறானா என்ற கேள்வி நம்முள் எழுவதில்லை (ஏனெனில் பள்ளிக் கூடம் கூட இல்லாத ஒரு சிற்றூரில் வாழ்க்கையைத் துவக்கிய சிறுவன் எப்படி இந்தியாவிற்கு பிரதமராகிறான் என்பதுதான் கதையே) ஆனால், அருணா யார் என்று கேள்வி எழுகிறது. நாவலில் ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி எல்லாம் அந்தப் பெயரிலேயே பாத்திரங்களாக வந்து போகிறார்கள்.

ஆர்.கே.நாராயணன் பாணியில் சுவாரஸ்யமாக எழுதிக் கொண்டு போகிறார் ராவ். ஒருவகையில் இது இந்தியாவின் 50 ஆண்டுகால பதவி அரசியலின் உள்புறத்தை படம் பிடித்துக் காட்டும் நாவல்.

அங்கே இப்ப என்ன நேரம்? :
(பதிப்பு: தமிழினி.)

கனடாவில் வாழும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் வாழ்க்கை அனுபவங்கள், அவர் சந்தித்த மனிதர்கள், எடுத்த பேட்டிகள், அனுபவக் கதைகள், வாசித்த புத்தகங்கள் பற்றிய விமர்சனங்கள், சிந்தனைக்கு வீசும் பொறிகள் என்று அவரையே உரித்துக் கொண்டு வந்திருக்கிறது புத்தகம்.

சுந்தர ராமசாமியுடன் நேர்ந்த ஒரு சந்திப்பில், சு.ரா எழுப்பும் ஒரு கேள்வி சாட்டையை சொடுக்கியது போல விழுகிறது: ” புத்தகங்கள் வாசித்தோம். எழுதினோம். விவாதித்தோம். கூட்டங்கள் போட்டோம். எழுதினதையே திருப்பித் திருப்பி எழுதினோம். பேசினதையே திருப்பித் திருப்பி பேசினோம். கடைசியில் என்ன சாதித்து விட்டோம்?”

அந்திப் பொழுதிலுள்ள ஒருவர் முன் வந்து விழுகிற அவருடைய நிழலே எழுப்புகிற கேள்வி என்று இதை இடதுகையால் இளைஞர்கள் ஒதுக்கித் தள்ளி விடலாம். ஆனால் அப்படித் தள்ளிவிடாமல் யோசிக்கலாம். யோசித்தால் எனக்கு ஒரு பதில் கிடைக்கிறது. உங்களுக்கும் ஒரு பதில் கிடைக்கலாம். பதில் அல்ல முக்கியம். யோசிப்பது முக்கியம்.

கொல்லிமலை மக்கள் பாடல்கள்:
(பதிப்பு: ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்)

சங்கப்பாடல்கள் பலவற்றில் கொல்லிமலைத் தேனைப் பருகலாம். சங்ககாலத்திலிருந்து இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கொல்லிமலை இப்போதும் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறது.அங்கு வாழ்ந்து வரும் பழங்குடி மக்களின் மரபார்ந்த பாடல்களின் தொகுப்பு இந்நூல். பாரம்பரியச் செய்திகள், கருத்துக்கள், அனுபவங்கள், சமூக நிறுவனங்கள் இவற்றின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கை இவற்றை அறிந்து கொள்ள  இன்று நமக்கு உதவுபவை வாய்மொழி இலக்கியங்களாக வழங்கும் நாட்டுப்புற இலக்கியங்கள். சென்னையில் உள்ள ம,சா,சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் கொல்லிமலையில் வாழும் மக்களிடமிருந்து திரட்டிய வாய்மொழி இலக்கியத்தின் இந்தத் தொகுப்பு ஒரு அரிய பொக்கிஷம்.

It Happened Tomorrow
பதிப்பு: National Book Trust)

அறிவியல் புனைகதைகள் இந்திய மொழிகளில் எப்போது எழுதப்பட்டது என்பது இன்றும் விவாதிக்கப்படும் கேள்வி. ஜெகதீஸ் சந்திர போஸ் வங்க மொழியில் எழுதியதுதான் முதல் அறிவியல் புனைகதை என்று வங்காளிகள் சொல்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் மராத்தியிலும் அறிவியல் புனைகதை எழுதப்பட்டுவிட்டது என்பது மராட்டியர்களின் வாதம். இன்றும் மராத்தியில் அறிவியல் புனைகதைப் பிரிவு வலுவாகவே இருக்கிறது. இந்திய மொழிகளில் எழுதப்பட்ட அறிவியல் புனைகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருக்கும் நூல் இது. இந்தத் தொகுப்பின் இன்னொரு சிறப்பு இதில் கதை எழுதியுள்ளவர்களில் பலர் விஞ்ஞானிகள். மராத்தியில் எழுதும் ஜெயந்த் நார்லிகர் ஒர் உதாரணம். தமிழ்க் கதையை எழுதியுள்ள சுஜாதா இன்னொரு உதாரணம். ஏனோ தெரியவில்லை இந்தத் தொகுப்பில் மலையாளக் கதையைக் காணோம். மலையாளத்தில் அறிவியல் புனைகதைகள் இருக்கிறதா? அறிந்து கொள்ள ஆவல்.

*

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *