வழியில் சில போதை மரங்கள்

ப்ரியமான நண்பர்களே –

       இது கதை அல்ல… வாழ்க்கை.

       எனவே –

       இது இனிக்காது. சற்று உரைப்பாகவே இருக்கும். உள்ளே இறங்கும்போது சுறுசுறுவென்று தகிக்கும்.

       எனினும் –

       கனவு விற்கிற தேசத்தில் மருந்து விற்பதை வாழ்க்கையாகவே மேற்கொண்டிருக்கும் நான், என் கடமையின் பொருட்டே இந்தக் கதையை உங்களுக்குச் சொல்கிறேன்.

       ‘ தென்காசியில் இருந்து சென்னை வந்த இளைஞன் ஜெகந்நாதன், குக்கர் கோடவுனில் குமாஸ்தா. ஓட்டல் சர்வராகத் துவங்கி, உருண்டு இந்த எழுநூறு ரூபாய் வேலைக்கு  வந்தவன். முன்பு வேலை பார்த்த இடத்துச் சிநேகிதம் விநோலியா. ஜெகனுக்கு அடிக்கடி போன் செய்யும் தோழி. வேலை பார்க்கிற இடத்தில் கிழவர், பெண்ணை வெறும் பொத்தல் என ஒரு காளமேகர் பாடல் மூலம் சொல்லி வீழ்ந்து விடுவாய் என பயம் காட்டுகிறார். ஜெகந்நாதனுக்குக் குழப்பம். விநோலியா நேரில் சந்தித்து ‘ ஐ லவ் யூ ’  சொல்லி  விளக்கம்  தருகிறாள்.  ஜெகந்நாதன்  பதிலுக்கு           ‘ ஐ லவ் யூ ’  சொல்கிறான்.

       இது  பாலகுமாரன்  சில  நாட்களுக்கு  முன்  எழுதிய

       ‘ நானே  எனக்கொரு  போதி  மரம் ’  கதை.

       அவர்  பாத்திரங்கள்  மூலம்  நான்  சொல்லும்  கதை  இது …

          மாலன்

“ விநோலியா, ஐ லவ் யூ  ! ”

அவன்  உதடுகள்  மெல்ல  முணுமுணுத்தன.

விநோலியா சிரித்தாள். கடைவாயில் சிங்கப்பல் தெரிகிற சிரிப்பு. சினிமா நடிகைபோல் முத்துப்பல் வரிசை இல்லை.  பி.டி.உஷா போல் சற்று முன் தூக்கிய தெற்றுப் பற்கள். சின்ன வயசில் கிளிப் போட்டு அடக்கி வைத்து இருந்தால், இதுவும் இன்றைக்கு சினிமாக்காரி பல்போல் இருந்திருக்கும். இல்லை… அன்றைக்கு அதற்குத் தேவையான  ஆதாரம்  இல்லை.  ஆம்,  பணம்…

“ விநோலியா, ஐ லவ் யூ ! ”

இந்த முறை ஜகந்நாது வாய்விட்டே சொன்னான். பிரம்மாண்டமான வெள்ளைத்தாளில்  கறுப்பு  மசியில்  காப்பி எடுத்துக் கொண்டிருந்த ஏ-2 கிளார்க், நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள். தொம் தொம் என்று ஸ்டாம்புத்தாளில் முத்திரை குத்திக் கொண்டிருந்த  பியூன் நாகப்பா, குத்துவதை நிறுத்தித் திரும்பிப் பார்த்தான். ஆஸ்திரேலியா போல் ஷர்ட் பாக்கெட்டில் இங்க் கரை படிந்திருக்க, உட்காரும் இடத்துக் கிழிசல் தெரியாதவாறு வேட்டியை மடித்து டப்பாக்கட்டு கட்டியிருந்த பத்திர வியாபாரி புன்னகைத்தான். தானே ஏதோ மணப்பெண் போல, நாணி முகம் தாழ்த்தி, அரைக் கண்ணால்  குப்பைத்  தொட்டியைப்  பார்த்துச்  சிரித்தார்  சப்-ரிஜிஸ்திரர்.

கல்யாணம்  முடிந்து  விட்டது.

மேளம் இல்லாமல், ‘ ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ’ இல்லாமல், வாழைப் பட்டையை  பிய்த்துக்  கொண்டு ஒருத்தனை ஒருத்தன் துரத்திக் கொண்டு ஓடும் வாண்டுச் சிறுவன்கள் இல்லாமல், ஆக்ஸிஜன் போல் பையனையே நம்பி இருக்கும் அம்மா  வராமல் …

வெள்ளை ஸாடின் – காகித ரோஜா இல்லாமல், ‘ ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல் ஜிங்கிள் ஆல் தி வே ’ இல்லாமல், தெய்வத்தால் கூடியவர்களை மனிதன் பிரிக்காமல் இருக்கக் கடவானாக என்ற ஆசீர்வாதம் இல்லாமல், அடிநாக்கில் இனிக்கிற சர்க்கரைக்கட்டி  இல்லாமல் –

அரசாங்கப் பேரேடுகளுக்கும், ரப்பர் ஸ்டாம்புகளுக்கும், முத்திரைக் காகிதங்களுக்கும் நடுவே, முன்பின் அறியாதவன் இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு சாட்சிக்  கையெழுத்துப்  போட –

கல்யாணம்  முடிந்து  விட்டது.

வாழ்க்கை  துவங்கியது.

தன்னடைய  திருவல்லிக்கேணி  எலிப்  பொந்தைக் காலி செய்துவிட்டு ராயபுரத்தில் ஒரு புறாக் கூட்டிற்கு ஜோடிப்புறாவோடு ஜெகந்நாது குடிபோனான். ராயபுரத்தில்  இருந்து  லஸ் கார்னர் ‘ வி ’ யைப் பிடித்தாலும், ‘ ஜெ ’  யைப்  பிடித்தாலும் ஒன்றே கால் மணி நேரப் பயணம்.  ஆறரை  மணிக்கு  வீட்டை  உதற  வேண்டும். ராத்திரி ஒன்பதரை மணிக்குக்  கூட்டை  அடைய வேண்டும்.  ஆபீஸிற்குப்  புறப்படும்போது எதிர்சாரியில் சிறுவர்கள் மலம் கழித்துக் கொண்டிருப்பார்கள். திரும்பும்போது குடிகாரர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பார்கள். எனினும் காதல் மனையாள் அருகில் இருக்க வாழ்க்கை இனித்தது. காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம். ஆதலினால் வாழ்க்கை இனித்தது – மூன்று மாதங்களுக்கு.

குடித்தனம் போட்ட மூன்று மாதத்தில் அம்மாவிற்கு இருநூறு ரூபாய் அனுப்புவது நின்று போயிற்று. திகைத்துப் போன அம்மா என்னாயிற்று, என்னாயிற்று என்று கடிதம் போட்டபோது என்னவென்று எழுதுவது என்று புரியாமல் மனது துடித்தது. பதில் வராததைக்  கண்டு,  நூறு  ரூபாய் ரயிலுக்குச் செலவழித்து, கிழிசல் புடவையோடு ஆபீஸ் வந்து, ‘ இந்த வயசில, இப்படி நட்டாத்தில் கை விட்டுட்டியே ’ என்று கட்டிக்கொண்டு அழுத போது  கண்ணில்  ரத்தம்  வந்தது.

ரோஷம் பொங்க ஜெகந்நாதன், அம்மாவைப் புறாக் கூட்டிற்குக் கூட்டிப் போனான். கோழியை நறுக்கிய கத்தி கொண்டு புடலங்காய் நறுக்கக் கூசினாள் அம்மா. பொட்டில்லாத மாட்டுப் பெண்ணின்  நெற்றி கண்டு பொருமினாள். புழுங்கல் அரிசிச் சோறு வயிற்றுக்கு ஆகாமல் வலியால் தவித்தாள், அல்லது பட்டினி கிடந்தாள்.

பொறுப்பும் அடக்கமும் பூட்டி, தான்  இருபத்தி  ஐந்து வயதுவரை வளர்ந்த பையனை அயல் ஜாதிக்காரி அபகரித்துக் கொண்ட கசப்பு, ஏமாந்து விட்டேனோ என்ற இரக்கம், தன்னுடைய எதிர்காலம் குறித்த பயம் எல்லாம் புகையாய் சுருண்டு நெஞ்சை அடைக்க  அவ்வப்போது  காறி  உமிழ்ந்தாள்.

அம்மாவின் கட்சிக்கு ஆள் வேண்டி, தங்கைக்குக் கடிதம் போயிற்று. சின்னக் கூட்டில் நாலு புறா. இரவில் அல்ல, பகலிலேயே இட நெருக்கடி. கல்யாணமாகாத தங்கையை வைத்துக்கொண்டு, காதல் மனைவியிடம் கண்ணால் கூடப் பேச முடியவில்லை.

ஒரு வீட்டில் இரண்டு சமையல் ; இரண்டு பூச்சரம் ; இரண்டு புடவை ; இரண்டு பண்டிகை ;  இரண்டு குடித்தனம் ;   இரட்டைச் செலவு.

விநோலியாவின் நகக் கலர் வரை நகர நாகரிகம் படிந்திருந்தது. பொறுப்புள்ள ஏழைதான் என்றாலும், எவருக்காவது பிறந்த நாள், திருமண தினம், வேலை மாற்றம் என்று வந்தால்,  கவிதை அச்சிட்ட  வழவழவென்று வாழ்த்துக் கார்டு தேவைப்பட்டது. ஒரு கார்டு ஐந்து ரூபாய் பதினைந்து பைசா. அரசாங்கக் கார்டில், மனசு

பூரித்த வாழ்த்தை, கைப்பட எழுத நாகரிகம் தடை போட்டது. தங்க நிறத்துச் சாவி வளையம், கவிதை எழுதிய ப்ளாஸ்டிக் தகடு, வர்ணக் காகிதத்தில் செய்த வாசல் தோரணம், லாமினேஷன் செய்த போஸ்டர் சுருள் என்று அலங்காரப் பொருட்கள் அடிக்கடி தேவைப்பட்டது. அடிக்கடி இல்லை என்றாலும், மாதத்திற்கு ஒரு முறை யாரேனும் நண்பர்களோடு ‘ சுராங்கனி ’  யில்  ஃபலூடா,  டூட்டி புரூட்டி, மில்க் ஷேக் சாப்பிட வேண்டி வந்தது. அவ்வப்போது ரூபாயை தூக்கிக்  கொடுக்கிற  தாராளம்  இருந்தது.       “ சொந்தக் ‘ கால் ’ கள் வரலாம், போடக்கூடாது ; கட்டுப்படி ஆகவில்லை ” என்று ஆபீஸ் நிர்வாகம் கட்டளை போட,  போனுக்கென்று  தனிச்  செலவாயிற்று.

வாழ்க்கை  திருப்பித்  திருப்பி  ஒன்றை  உரைத்தது – இரக்கம்  இல்லாமல் எடுத்துச் சொன்னது : “ ஆரோக்கியமாக, சந்தோஷமாக, நிம்மதியாக, கௌரவமாக, நாகரிகமாக வாழ வேண்டுமானால், கொண்டு வா பணம் ! கொண்டு வா பணம் ! ”

“ முதலாளியை  நேரில்  பார்த்து  சம்பளத்தைக் கேளுங்க. என்ன பயம் ?  நாம் சும்மா கேட்கலியே ! உழைக்கிறோம் … கேட்கிறோம்.  என்ன  தப்பு என்று உசுப்பி விட்டாள் விநோலியா.

அவள்  சொல்வது  சரிதான்  என்று  அம்மாவும்  ஆமோதித்தாள்.

ஆனால்  முதலாளி  நறுக்கென்று  சொன்னார் :

“ இதுக்கு மேலே தம்பிடி கொடுக்க எனக்குக் கட்டுப்படியாகாது. இஷ்டமில்லைன்னா நின்னுக்கோ.  நீ  இல்லைனா இன்னொரு பி.காம். ஏன், எம்.எஸ்ஸியே கிடைக்கும்.  இந்தத் தேசத்தில் ஆளா இல்லை ? ”

மறுபடியும் உடுப்பி ஓட்டல்.  ‘ இரண்டு மசாலா போடேய் … !

திடுக்கிட்டு விழித்தான் ஜெகன். முதுகுக் கால்வாயில் வியர்வை பெருகி சட்டை ஒட்டிக் கிடந்தது. முகத்தில், அக்குகளில், பிடரியில், தொடையில், உடல் முழுவதும் வியர்த்திருந்தது. என்ன பயங்கரமான கனவு ?  அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிடி கிடைத்து,  மார்புப்  பாறையில் தேய்ந்து ரத்தம் கசிய மெல்ல மெல்ல ஏறி வந்த வாழ்க்கை ; மறுபடியும் மசால் தோசை போடேய் …  என்று கிடுகிடுவென்று சறுக்கி விழுந்தது …  கனவுதானா ?  கனவுதான்.

எதிரே அடுக்கி இருக்கிற நீலத்தழல் அடுப்பு வரிசை, வண்ணத்துப் பூச்சி குக்கர் வரிகை, சரக்கு கிளியரன்ஸ், டெலிவரி நோட்புக், இன்ஸ்பெக்ஷன் ரிஜிஸ்டர், ஸ்டாக் லெட்ஜர், சர்வீஸ் ரிஜிஸ்டர் என்று தடிதடியாக  அடுக்கி இருக்கிற புத்தக வரிசை மீது நடுவிரலால் கோலம் போட்டுக் கொண்டு ‘ வாலி மடிந்ததுவும் … ’  என்று கள்ளக் குரலில் பாடிக் கொண்டிருக்கும் சதாசிவம், கறுப்புப் பூனை மாதிரி டெலிபோன் …  எல்லாம் நிஜம். அது  கனவுதான்.  ஆனால்  என்ன  மாதிரி  கனவு !

நல்ல வேளை … பகற்கனவு ! பலிக்காமல் போகக் கூடிய பகற்கனவு. வேலை பார்க்கிற இடத்தில் எப்படிக் கனவு வந்தது ?  வெயில். வெளியே வெள்ளை வெயில். முழித்துக்  கொண்டே  காண்கிற  கனவா ?

டெலிபோன்  பூனை  சிணுங்கிற்று.

விநோலியாவா ?

இந்தக் கனவை அவளிடம் சொல்லலாமா ? சொல்ல முடியுமோ என்னவோ ? அவளுக்குக் கனவு வருமோ ? இந்த மாதிரிக் கனவு?அவளுக்கு மட்டும் வருகிற கனவெல்லாம் ரோஜா பூவும், ஜரிகைத் தோரணமும், வெள்ளைக் குதிரையும், ராஜகுமாரனுமாகவே வருகிறதே ஏன் ?

இருந்த இடத்தில் இருந்தே இரைந்தார் சதாசிவம். எத்தனை கோரோசனை தின்றாரோ ?  எட்டுக்  கட்டை  சுருதி.

“ ஜெகந்நாது …  அப்பா ஜெகந்நாதூ … ”

“ முதலாளி  கூப்பிடறார்  உன்னை.  ஷோரூமிற்கு bbsp;ஒரு  நடை  போய்ட்டு  வா … ”

முதலாளியா ? என்னையா ? 

“ முதலாளியா … இப்போ சரக்கு வருமே சார் … ”

“ வந்தா நான் போன் அடிக்கிறேன். இப்பதான் கொஞ்சம் ஒழிவா இருக்காம். உங்கிட்ட  பேசணுமாம்.  போய்ட்டு  வாம்மா  கண்ணு … ”

‘ பேச வேண்டுமா ? என்னிடத்தில் என்ன பேச்சு ? கிழவன் ஏதாவது ஒன்றுக்குப் பத்தாக வத்தி வைத்து விட்டானா ? ’

‘ வேற என்ன விஷயம் ?  சினா தானாதான் … வாலி மடிந்ததுவும் … ” – கிழவர் பாட்டில்  இறங்கி  விட்டார்.

முதலாளியின் முகத்தில் முறுவல் இருந்தது. தொற்றிக் கொள்ள வைக்கும் தோழமை முறுவல்.

“ வா ஜெகந்நாது, உட்கார் ”  என்றார்  முதலாளி.

“ இல்லை  சார் … ”

“ பரவாயில்லை உட்கார் … ”

அரைவட்டம் திரும்பி பொத்தானை அமுக்க அடுத்த விநாடி கண்ணாடிக் கதவைத் திறந்து  கொண்டு  சிப்பந்தி  நுழைந்தார்.  காஷியரை  வரச்  சொல்லி  ஆணை  போனது…

“ சரக்கு இறக்க வந்தவங்களுக்குக்  கையில்  இருந்து  டீ  காசு கொடுத்தீங்களா … ”

“ அது வழக்கம்தான் சார் … ”

“ தப்பு இல்லையே. சுமையை இறக்கினவன் கஷ்டம் புரிஞ்சு சுணங்காம, சாக்கு சொல்லாம, சம்பளம்தான்  வாங்குறியேன்னு  சட்டம் பேசாம, அப்புறம் வாய்யான்னு எரிஞ்சு விழாம சடக்னு பர்ஸை எடுத்து காசு கொடுத்த பாரு, அதற்காக நான் பெருமைப்பட்டேன். எனக்கு என்னோட இருபத்தி  ஐந்து  வயது  ஞாபகம்  வந்திச்சு !

காஷியர் எடுத்து வந்த ஐம்பது ரூபாய்த் தாளை ஜெகந்நாதுவிடம் நீட்டினார் முதலாளி.

“ வேணாம் சார். நான் பதினெட்டு ரூபாய் அறுபது காசுதான் கொடுத்தேன் … ”

“ தெரியும் …  வைச்சுக்க. ”

“ இந்த நேர்மைதான் உன்கிட்ட என்னைப் பிடிச்சு இழுத்த விஷயம். டிப்ஸ் வாங்குறது  உனக்கு  புதுசு  இல்லை.  பார் அட்டெண்டரா இருந்தபோது வாங்கினவன் தான்.  கருணையினால்  செய்த  காரியத்திற்கு  டிப்ஸ் வாங்குறது தப்புனு நினைக்கிற பார் … நீ  பெரிய  மனுஷன்யா … ”

ஐஸ் பாளம் பாளமாக மேலே அடுக்கிக் கொண்டு போகிறவரிடம் என்ன பேசுவது என்று  புரியாமல்  மேஜை  விளிம்பைக்  கீறிக்கொண்டு  இருந்தான்  ஜெகந்நாதன்.

“ உன்கிட்ட உழைப்பு இருக்கு … நாலு லட்ச ரூபாய் சரக்கை நாங்க நம்பி ஒப்படைக்கிற நாணயம் இருக்கு … பொறுமை இருக்கு … சர்வர் வேலை, சாராய பணியாள், குக்கர் கோடவுன் எந்த வேலையானாலும் சட்டென்று புரிந்து கொண்டு பளிச்சென்று செய்கிற புத்திசாலித்தனம்  இருக்கு … எளிமை கண்டு இறங்குகிற காருண்யம் இருக்கு. இதெல்லாம் ஒரு மனுஷனை உயரத்திற்குத் தூக்கிக் கொண்டு போகிற இறக்கைகள் … ஆனால் … ”

“ ஆனால் … ? ”

“ உனக்குக் காதல் வேண்டாம் ஜெகன். உனக்கு மட்டுமில்லை. நம்ப தேசத்து ஏழை இளைஞர்களுக்குக் காதல், அரசியல், இலக்கியம், ரசிகர் மன்றம் எல்லாம் அதிகம். அவர்களால் தாங்க முடியாது. தே கெனாட் அஃப்போர்ட் இட். முதல் தரம் கேட்கும்போது முதலாளி பேசுகிற பேச்சாகத் தோணும். பணக்காரன் பேச்சாகத் தோணும். ‘ பூர்ஷ்வா தாயோளி ’  என்று  புஸ்க்னு  ஆத்திரம்  கொப்புளிக்கும். நிதானமா யோசித்துப் பாரு. நிஜம் புரியும். ”

“ மாமா  சொன்னதையே மாற்றி மாற்றி வேறு வார்த்தைகளில் சொல்கிறேன் என்று  நீ  நினைக்கக் கூடும். இல்லை ஜெகன். இது வேறு. அவர் சொன்னது கசப்பில். கோடி கோடியாய் புரட்டிய  பணத்தைப்  புடவைத்தலைப்பில் தொலைத்த வெறுப்பில். நான் சொல்வது கவலையில். உன்மீது இருக்கிற கரிசனத்தில், பொம்பளையை வெறும் பொத்தல் என்று அவர் சொல்லலாம். ஆனால் காளமேகம் சொன்னதற்கு அது அல்ல அர்த்தம். பொம்பளை உடம்பே சகலமும், பொத்தலே சொர்க்கம் என்று அலைகிற பசங்களுக்குச்  சொன்ன  பாடல்  அது. ”

“ புரிகிறது  சார் … ”

“ துரதிஷ்டவசமாக  நம்  குழந்தைகளுக்கு, உடம்பையும் மனசையும் பிரித்துப் புரிந்து கொள்கிற புத்தி வளரவில்லை. பொத்திப் பொத்தி வளர்க்கிறோம் என்று ஒரு தலைமுறை செய்த தவறு.  ரகசியம் என்று சொல்லி கற்பனை தறிகெட்டுப் போக வைத்த தவறு. நாற்பது வயதிலும் புடவைத் தலைப்பைப் பாரத்தாலே போதை பிறக்கிறது. போகட்டும் – இது எங்களோடு போகட்டும்.  நீ  புதுத்  தலைமுறை. புத்தியோடு எழுந்து வா. ”

“ எனக்கு  அந்தப்  பெண்ணிடம்  காதல்  இல்லை …  ஸ்நேகம். ”

“ ரொம்ப சந்தோஷம். ஆணும் பெண்ணும் ஸ்நேகமாக இருப்பதற்கு நான் எதிரி இல்லை. ஆனால் ஸ்நேகம் முத்தமிடாது. எதிரில் இருப்பவனை ‘ இம்ப்ரஸ் ’ பண்ண வேண்டுமென்ற கனலை மனத்தில் சுமந்து திரியாது. ஏழைப் பையன் நீ. உனக்கு காதல் வேண்டாம். பணம் சம்பாதி. சபையில் நீ நுழைந்தால் மற்றவர் எழுந்து நிற்கிற மரியாதையை சம்பாதி. உன் பெயரைச் சொன்னால் தமிழ்நாடு முழுவதும் புரிந்து கொள்கிற கௌரவத்தை சம்பாதி. இதைச் சம்பாதிப்பது சுலபமில்லை. ஒரு பெண்ணின் உடம்பை, மனத்தை  சம்பாதிப்பது,  இன்று சுலபம். வெகு சுலபம். காசு பணம் அப்படி அல்ல … ”

“ முயற்சிக்கிறேன் சார் . ”

“ முடியும் … உன்னால் முடியும். நான் காரக் குழம்பும் வாழைக்காய் கறியும் சம்பளமாகக்  கிடைத்த  சர்வர் வேலையில் தான் ஆரம்பித்தேன். இன்று நாலு லட்ச ரூபாய் சரக்கை கோடவுனில் வைத்து வியாபாரம் பண்ணுகிற ஐம்பது வயதுக் கிழவனாக ஆகி  இருக்கிறேன்.  எனக்கு  முடிந்தது  உனக்கும்  முடியும்.

“ பணம் பண்ணிய சினிமாக்காரர்கள், பத்திரிகைக்காரர்கள், கவிஞர்கள், காதல் பலூனை உன்னிடம் விற்பதற்குக் கடைவிரிப்பார்கள். ஒரு லட்சியத்தை ஸ்வீகரித்துக் கொண்டு  உன்னைப்  போன்ற  இளைஞர்  எழுந்து விடக் கூடாது என்பது அவர்கள் ஆசை. நீ எழுந்தால் அவர்கள் புரள்வார்கள். உனக்கு பலூன் வேண்டாம். ஆக்ஸிஜன் தருகிறேன். ”

முதலாளி நிறையப் பேசினார். ஜெகனைப் பேசவிடாமல் தானே பேசினார். சில இடங்கள் புரிந்தது. சில இடங்கள் முன்னால் சொன்னதற்கு முரண்பட்டது போல் இருந்தது. ஆனால்  அதற்குப்  பின்னிருந்த  கவலை  புரிந்தது.  கரிசனம்  புரிந்தது.

ஜெகன் எல்லாவற்றிற்கும் நன்றி சொன்னான். எழுந்து வெளியே வந்தான். அரசமரத்துக்  காற்று  சில்லென்று  நெஞ்சைத்  தொட்டது.

( இதயம் பேசுகிறது )

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these