பெண்களில் ஒரு பெரியார்!

Monday, March 07, 2005

பெண்களில் ஒரு பெரியார்!
சமத்துவமும் உரிமையும் கோரிப் பெண்களிடமிருந்து கலகக் குரல் எழுந்த நாளைத்தான் பெண்கள் தினமாக உலகம் போற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நாளில் உத்தரநல்லூர் நங்கையை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாய்ச்சலூர் என்ற ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எங்கிருக்கிறது என்பதைக் குறித்து பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள்.திருச்சிக்கருகில் இருக்கிறது, திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது,

ஒட்டன்சத்திரத்திற்குப் பக்கத்தில் இருக்கிறதது என்றெல்லாம் சொல்கிறார்கள். எங்கிருக்கிறது என்பது முக்கியமல்ல. ஆனால் அந்த ஊரின் பெயரைக் கொண்ட ஓர் இலக்கியம் இருக்கிறது. புரட்சிகரமான இலக்கியம்!

15ம் நூற்றாண்டில் வெளியான நூல் பாய்ச்சலூர் பதிகம். பதிகம் என்றால் பத்துப் பாட்டுக்கள் கொண்ட நூல். கடவுள் வாழ்த்து அல்லது காப்புச் செய்யுள் என்றும் கூடுதலாக ஒன்று இருக்கும்.

ஆனால் இந்தப் பாய்ச்சலூர் பதிகத்தில் கடவுள் வாழ்த்து இல்லை! சாதாரண மக்களின் பேச்சுத்தமிழில் அமைந்த இந்தப் பாடல் எந்த சாமியின் மீதும் பாடப்பட்டதல்ல. சாதி ஆதிக்கத்தை எதிர்த்து- குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து- பாடப்பட்டது. இதைப் பாடியவர் ஒரு பெண்.

உத்திர நல்லூர் நங்கை எனபது அவர் பெயர்.

உத்திரநல்லூர் நங்கையைப் பற்றி இலக்கிய வரலாற்றாசிரியர்கள் அதிகம் எழுதி வைத்திருக்கவில்லை. ‘இவள் ஒரு பெண்கவி. பிராமணரை வசை பாடினாள்’ என்று அபிதான சிந்தாமணி குறிப்புத் தருகிறது. 1916ல் வெளியிடப்பட்ட தமிழ் நாவலர் சரிதை ‘ உத்தரநல்லூர் நங்கை இன்னாள் என்றும் இவளுக்கு பிராமணரிடத்து வெறுப்பு வந்ததற்குக் காரணம் இன்னதென்றேனும் விளங்கவில்லை’ என்கிறது.

சாதி பேதங்களை எதிர்த்துக் குரல் கொடுத்தவர், சாதிகள் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட சதி என்பதை பிராமண ஆதிக்கம் நிறைந்திருந்த காலத்திலேயே மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், அதன் காரணமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துக் கலகக் குரல் கொடுத்தவர், சடங்குகள் சாதி பேதங்களை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை என்பதையெல்லாம் அவர் பாட்டுக்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

சாதியும் ஒன்றே யாகும்

சகலமும் வேறே தாமோ

வேதியன் படைத்த தல்லால்

என்று ஒரு பாடல் கேட்கிறது.

வெவ்வேறு மரங்கள் நெருப்பில் விழுந்தால் வேறு வேறு மணம் எழும். ஆனால் மனிதரின் பிணங்கள் நெருப்பில் எரியும் போது வேறு வேறு மணம் எழுவதுண்டா? என்று கேட்கிறது ஒரு பாடல்:

சந்தனம் அகிலும் வேம்பும்

தனித் தனி வாசம் வீசம்

அந்தணர் தீயில் வீழ்ந்தால்

அதன்மணம் வேற தாமோ

செந்தலைப் புலையன் வீழ்ந்தால்

தீமணம் வேற தாமோ

பந்தமும் தீயும் வேறோ

பாய்ச்சலூர்க் கிராமத்தாரே

15ம் நூற்றாண்டுகாலத் தமிழகச் சூழலை மனதில் கொண்டு பார்த்தால் இது ஒரு சிறந்த எதிர்ப்புக் குரல்.

மனிதர்களுக்குள் சாதியின் பெயரால் வித்தியாசம் கற்பிக்கப்படுவதற்கு எதிராக மட்டுமல்ல, சமத்துவம் கோரியும் குரல் எழுப்புகிறார் உத்தரநல்லூர் நங்கை.

ஒரு பனை இரண்டு பாளை

ஒன்று நுங்கு ஒன்று கள்ளு

அறிவினில் அறிந்தவர்க்கு

அதுவுங்கள் இதுவுங் கள்ளே

ஒருகுலை உயர்ந்ததேனோ

ஒரு குலை தாழ்ந்ததேனோ

பறையனைப் பழிப்பதேனோ

பாய்ச்சலூர்க் கிராமத்தாரே

சாதி வித்தியாசத்தை சடங்குகள் மூலம் பார்ப்பனர்கள் வலுப்ப்டுத்தி நிலை பெறச் செய்தார்கள் என்பதால் சடங்குகளையும் வேதத்தையும் சாடுகிறது ஒரு பாடல்.

ஊருடன் பார்ப்பார் கூடி

உயர்ந்ததோர் சாலை கட்டி

நீரிலே மூழ்கி வந்து

நெருப்பின் நெய்யைத் தூவிக்

கார்வயல் தவளை போலக்

கலங்கிய உங்கள் வேதம்

பாரை விட்டகன்றதேனோ

பாய்ச்சலூர்க் கிராமத்தாரே

இந்தப் பாடல்கள் இப்போதும் பாடப்படுகின்றன.ஆனால் தமிழ் நாட்டில் இல்லை.

கேரளத்தில்!

திருவனந்தபுரம் நாகர்கோவில் சாலையில் திருவனந்தபுரத்திற்கு அருகில் நெடுஞ்சாலையிலிருந்து சற்று விலகி பாய்ச்சலூர் என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தின் மயானத்தில் ஒரு காளி கோவில் இருக்கிறது. அந்தக்கோவிலில் ஒரு சிலம்பை மக்கள் அம்மனாக வழிபடுகின்றனர். கேரளத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்ட ஈழவ மக்களின் கோயில் அது. அங்கு மாசி மாதம் நடை பெறும் திருவிழாவின் போது ஊர் மக்கள் கோயிலில் கூடி பாய்ச்சலூர் பதிகத்தை மலையாளத்தில் எழுதி வைத்துப்பாடுகின்றனர் என்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பேராசிரியர் தெரிவிக்கிறார்.

தமிழ்கத்துப் பெண் பெரியார் எப்படி கேரளத்திற்குப் போனார்?

யாருக்காவது தெரியுமா?

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *