வரலாற்றின் வழித் தடங்கள்

வரலாற்றின் வழித் தடங்கள்

 பலர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவை ஒரு வில்லன் நடிகராகத்தான் அறிவார்கள்.எம்.ஜி.ஆரை அவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை மட்டும் அறிந்தவர்கள் அவரை ஒரு நிஜ வில்லனாகக் கூட நினைத்துக் கொண்டிருக்கக் கூடும்.இன்றைய தலைமுறையைப் பொறுத்தவரை அவர் ராதிகாவின் அப்பா. ஆனால் அவரிடம் ஒரு கூர்மையான நகைச்சுவை உண்டு. பகுத்தறிவிற்குப் பொருந்தாத, உணர்ச்சிகளின் அடிப்படையில் அமைந்த அசட்டுத்தனங்களை நையாண்டி செய்யும் நகைச்சுவை.அவரது கிண்டலுக்கு காதலும் தப்பியதில்லை.

 ஆனால் காதலுக்கு அவரும் தப்பியதில்லை என்பதுதான் வரலாறு. ஆதாரம்?

 கோவையின் விளிம்பில், பாலக்காடு செல்லும் வழியில், ஒரு மயானத்திற்குள், வானை நோக்கி நீட்டிய விரல் போல, ஒரு தூண் நிற்கிறது.அது எம்.ஆர்.ராதா எழுப்பிய காதல் சின்னம். அவரது காதல் மனைவிக்கு எழுப்பிய நினைவுச் சின்னம்.

 பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் நாட்டு விடுதலைப் போருக்கு நாடகம் மூலம் தொண்டு செய்து கொண்டிருந்து மறைந்த திருமதி. பிரேமாவதி நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் துணைவி அவர்களுக்கும், மகன் தமிழரசனுக்கும், திராவிடத் தோழர்கள் உண்டாக்கிய நினைவுக்குறி 1951″ என்று அந்தத் தூணின் கீழ் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்கிற்குப் பின் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை இருக்கிறது.

 நாடகங்களில் நடிப்பதற்குப் பெண்கள் பெருமளவில் முன்வராத காலம். அதிலும் ராதாவின் நாடகங்கள் சர்ச்சைக்குப் பெயர் போனவை. பல இடங்களில் நாடகம் கலவரத்தில் முடிந்ததுண்டு. அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் ராதாவின் நாடகங்களில் நடிக்க வந்த பிரேமாவதி ஒரு துணிச்சல் நிறைந்த பெண்மணியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

 பெண்மணி என்று சொல்வதால் வயது போனவர் அல்ல. நடிக்க வந்த போது அவருக்கு வயது பதினேழு.ராதாவின் ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் போன்ற நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார். வயதோ, நடிப்புத் திறமையோ, அவரது துணிச்சலோ, அல்லது தன்னைப் போல பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர் என்ற ஒத்த அலைவரிசையோ, ராதாவிற்கு அவர் மீது ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. நாளடைவில் அது காதலாகவும் மாறியது. அந்தக் காதல் திருமணத்தில் முடிந்தது.

 ராதா – பிரேமா தம்பதிகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு தமிழ் மீது இருந்த பற்றின் காரணமாக தமிழரசன் என்று பெயர் வைத்தார் ராதா. கோவையில் ராதாவின் நாடகங்கள் நடந்து கொண்டிருந்த போது பிரேமா நோய்வாய்ப்பட்டார்.உடம்பு அனல் பறந்தது. சாதாரணக் காய்ச்சல் இல்லை. அம்மை.

 மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள். அம்மை என்பதால் அதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கைவிரித்து விட்டார்கள்.உடம்பின் எதிர்ப்பு சக்தியால் அது தானேதான் குணமாக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

 அப்போதெல்லாம் நாடகக் கம்பெனிகளின் நாடகங்கள் ஒரு ஊரில் தொடர்ந்து பல நாட்கள் நடக்கும்.சினிமா போல ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள், மூன்று காட்சிகள் நடக்கும். ஊரில் உல்ள ஒருவர் நாடகக் கம்பெனிகளை காண்டிராக்ட்முறையில் அழைத்து ஒப்பந்தம் பேசிக் கொண்டு நாடகங்கள் நடக்க ஏற்பாடு செய்வார்கள். சினிமாப் பட விநியோகம் போல அது ஒரு பிசினெஸ்.எனவே நாடகங்களை ஒப்பந்தக் காலத்திற்கிடையில் பாதியில் ரத்துசெய்தால் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி வரும்.தொழில் காரண்மாக மனைவியுடன் எப்போதும் அருகிலேயே இருக்க முடியாத சூழ்நிலை ராதாவிற்கு. குழந்தைக்கு அப்படியொரு நிலை இல்லையே. அதுவும் தவிர இரண்டு மூன்று வயதுக் குழந்தை அம்மாவின் அருகில் இல்லாமல் வேறு எங்கு இருக்கும்?

 அம்மாவின் காய்ச்சல் குழந்தையையும் தொற்றிக் கொண்டது. பிஞ்சுக் குழந்தையானதால் அதன் நிலைமை விரைவிலேயே மிக மோசமானது.அம்மையின் தீவிரம் தாங்காமல் இரண்டு நாளில் இறந்து போனது.நாடக மேடையிலிருந்த ராதாவிற்குத் தகவல் போனது.பாதி நாடகத்தில் இருந்த ராதா நாடகத்தை முடித்துவிட்டு வந்து இரவில் குழந்தையை மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிட்டு வந்தார்.

 அதன் பிறகு பிரேமா அதிக நாள்கள் இருக்கவில்லை. காய்ச்சலின் தீவிரத்தாலும், தன்னிடமிருந்துதானே குழந்தைக்கு அம்மை தொற்றிக் கொண்டது என்ற சுயபச்சாதாபம் தந்த மன அழுதத்தாலும் அடுத்த சில நாள்களில் அவரும் இறந்து போனார். குழந்தையைப் புதைத்த அதே இடத்தில் அவரையும் புதைத்துவிட்டு குமுறிக் குமுறி அழுதார் ராதா. அந்த இடத்தில் அவர் எழுப்பிய நினைவுச் சின்னம்தான் அந்தத் தூண். பின்னாளில் திரைப்படத்தில் நுழைந்து மிகப் பிரபலமானவராக அவர் ஆகி விட்ட போதும், கோவைக்கு வந்து, இரவில் தனியாக அந்த நினைவுச் சின்னத்தின் அருகில் சில மணி நேரம் அமர்ந்துவிட்டுப் போவதுண்டு.

 ராதாவின் தாஜ்மகால்இப்போதும் அதே இடத்தில் இருக்கிறது. தாஜ்மகாலின் பொலிவோடும் அழகோடும், பராமரிப்போடும் அது இல்லை என்றாலும் ராதாவின் குடும்பத்தினர் அவ்வப்போது வந்து போகும் இடமாகத்தான் அது இருக்கிறது.

 இது போன்ற அறியப்படாத, ஆனால் தமிழக வரலாற்றோடும், வரலாறாக வாழ்ந்தவர்களோடும் பின்னிப் பிணைந்த இடங்களை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது தமிழகத் தடங்கள் என்ற நூல்.அண்மையில் சென்னையில் கூடிய புத்தகச் சந்தையை ஒட்டி வெளியான இந்த நூலைப் பதிப்பித்திருப்பது உயிர்மை பதிப்பகம். நூலை எழுதியிருப்பவர் மணா. மணா நீண்ட அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர். அவரது இளம் வயதில், எண்பதுகளின் துவக்கத்தில், நான் ஆசிரியப் பொறுப்பேற்று நடத்திய, திசைகள் இதழ் மூலம் இதழியலுக்குள் அடியெடுத்து வைத்தவர். அப்போது அவர் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த விழிகள் என்ற இலக்கியச் சிற்றேட்டுடன் தொடர்புடையவராக இருந்தார்.

 நல்ல இலக்கிய ரசனை கொண்டவர் என்றாலும் அவர் புத்தகங்களோடுத் தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட சம்மதிக்கவில்லை.ஊர் ஊராகப் போய், மக்களைச் சந்தித்துப் பழகி, அனுபவங்களை வாழ்ந்து பெறும் விருப்பம் கொண்டவர். அதற்கு இதழியல்தான் அவருக்கு ஏற்புடையதாகத் தோன்றியது.அவர் விரும்பும் துறைகள் குறித்த தகவல்களை சேகரிப்பதற்கு இடைஞ்சல் இருக்கக்கூடாது என்பதற்காக, எந்தப் பத்திரிகைக்கும் தாலி கட்டிக் கொள்ளாமல்சுயேச்சைப் பத்திரிகையாளராக ஆரம்ப நாள்களை செலவிட்டார்.சுயேச்சைப் பத்திரிகையாளராக இருப்பது மனதிற்கு நிறைவளிக்கும்.ஆனால் வயிற்றுக்குச் சோறு போடாது. அந்த நாள்களில், சென்னையிலிருந்து தனித்துவத்துடன் வெளி வந்து கொண்டிருந்த அசைட்என்ற ஆங்கிலப் பத்திரிகையும், துக்ளக்கும் அவருக்குக் கை கொடுத்தன. ஏறத்தாழ இருபது ஆண்டுகள் சுயேச்சைப் பத்திரிகையாளராக இருந்தவர், குமுதம் இதழின் ஆசிரியராக நான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அதில் இணைந்து கொண்டார். அதற்கு நிறையப் பங்களிப்பு செய்தார். தமிழ்நாட்டின், தமிழ்க் கலாசாரத்தின், அடையாளச் சின்னங்களாக (icon) திகழும் சிலரின் வாழ்க்கையை மறுகட்டமைத்துப் பார்க்கும் (reconstruct) ஒரு முயற்சியை அப்போது குமுதத்தில் செய்து பார்க்க நினைத்தோம். வாழ்க்கையை, வெறும் வரலாறாக எழுதாமல், இங்கு இன்னாருக்கு மகனாக/மகளாகப் பிறந்தார் என்பது போன்ற தகவல்களாகக் குவிக்காமல், அவர் குடும்பத்தினர், கூடப்படித்தவர்கள், பணியாற்றியவர்கள், ஆசிரியர்கள், ஊர்க்காரர்கள், இப்படிப் பலரிடம் பேசித் தகவல்கள் சேகரித்து, அவற்றை சரி பார்த்து, மிகை நீக்கி, தொகுத்துக் கட்டுரையாக்க எண்ணினோம். மணாதான் அந்த வேலைகளை செய்தார். எம்.எஸ். சுப்புலட்சுமி, இளையராஜா, சாலமன் பாப்பையா, ஏன் சுப்ரமணியம் சுவாமியும் கூட அந்தத் தொடரில் இடம் பெற்றார்கள்.

 அவரது இந்த நூலும் இப்படிப்பட்ட ஒரு முயற்சிதான். எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக பெரியபுராணம் சொல்கிறதே, அந்த இடம் தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா? கழுவேற்றுதல் என்றால் என்ன? அதைக் காட்டும் ஓவியம் எங்காவது உண்டா? பாரதியார் கடைசியாகப் பேசிய வாசகசாலை எங்கே அமைந்திருக்கிறது? சென்னையில் 30 வருடம் வள்ளலார் வாழ்ந்த வீடு ஒன்றிருக்கிறது தெரியுமா? திருநெல்வேலி சுலோசனா முதலியார் பாலத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெண்கள் மார்பை மறைத்து மேலாடை அணிவதற்காகத் தமிழகத்தில் ஒரு போராட்டமே நடந்தது, அதை அனுமதிக்கக் கூடாது என்று கலவரம் மூண்டது என்பதை அறிவீர்களா? பெண்களின் மார்புக்கு வரி போட்ட காலம் ஒன்றிருந்தது, அந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல், தன் மார்பை அறுத்து வீசிய நவீன காலக் கண்ணகியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.ஆனால் அவன் சிறை வைக்கப்பட்ட இடம் எங்கிருக்கிறது என்று தெரியுமா? ஆங்கிலேயர்களின் வெடிகுண்டுக் கிடங்கில் தீப்பந்தத்துடன் குதித்த கட்டபொம்மனின் தளபதியையும் அவன் காதலியையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.அந்தக் கிடங்கு எங்கே இருக்கிறது? ஈரோட்டில் பெரியார் நடத்திய மஞ்சள் மண்டி எங்கிருக்கிறது?

 இப்படி ஊர் ஊராகத் தேடி அலைந்து, தகவல் திரட்டி, படம் எடுத்து அவர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றில் சில குமுதம் வார இதழிலும், புதிய பார்வை இதழிலும் வெளிவந்தன.

 நீங்கள் அடுத்த முறை தமிழகம் வந்தால், தஞ்சைப் பெரிய கோவிலையும், மதுரை திருமலை நாயக்கர் மகாலையும், திருச்சி மலைக் கோட்டையையும், சென்னைக் கடற்கரையையும் மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பிவிடாதீர்கள்.கொஞ்சம் முயற்சி எடுத்துக் கொண்டு இந்த இடங்களையும் சென்று பாருங்கள். இந்த இடங்களில் தமிழனுடைய வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. கல்வெட்டாக அல்ல. மண்ணில் படர்ந்த புழுதியாக. இந்த இடங்களைப் பார்க்க நீங்கள் அதிகம் மெனக்கிட வேண்டியிராது. ஏனெனில் மணாவின் புத்தகம் உங்களுக்கு வழி காட்டும்.

 இந்தப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய இடதுசாரித் தலைவர் திரு.நல்லக்கண்ணு (அவரும் ஊர் ஊராக அலைந்து திரிகிறவர். இந்த வயதிலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நடந்தே 800 கீ.மீ பயணம் செய்தவர்) ஒரு கேள்வியை எழுப்பினார். அது அடிப்படையான கேள்வி. இந்த நூலில் குறிப்பிடப்படும் பல சம்பவங்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் வேறு வேறு வடிவில். அன்று மதங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அரசன் ஒத்துழைப்போடு அவர்கள் கழுவேற்றப்பட்டார்கள்; இன்று மசூதி இடிக்கப்படுகிறது. அன்று உடை விஷயத்தில் பெண்களுக்கு என்று ஒரு சமஸ்தானத்தில் தனிச் சட்டம் போட்டார்கள். இன்று ஒரு பல்கலைக் கழகம் ஆணைகள் பிறப்பிக்கிறது. இப்படி அன்று நடந்தவையே இன்றும் திரும்பட் திரும்ப, வேறு வேறு வடிவத்தில் நடக்கின்றன. அது ஏன்? என்பது அவர் எழுப்பிய கேள்வி.

 ஆமாம் அது ஏன்?

  தமிழ்முரசு சிங்கப்பூர் ஜனவரி18 2006  

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *