உள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி

ஆகாயத்தைக் கத்தரித்து ஆடையாக உடுத்தியதைப் போல, என் ஜன்னலுக்கு வெளியே, நீல வண்ணச் சீருடை அணிந்து அந்தக் குழந்தைகள் காத்திருக்கின்றன. பாதையோர மின் கம்பிகளில் அணி வகுத்திருக்கும் பறவைகள் போல வரிசை கட்டி நிற்கின்றன.. பள்ளிக்கு அவர்களை அள்ளிச் செல்ல, மன்னிக்கவும் அழைத்துச் செல்ல, ஆட்டோ வருகிறதா எனக் கைபேசியில் காட்சி தரும் கடிகாரத்தையும் தெருவையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு அம்மாக்களும் அத்தைகளும், அக்காக்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்

அப்போது அழுது கொண்டே வருகிறது அந்தக் குழந்தை. அதிகம் போனால் அதற்கு நான்கு வயதிருக்கும். மழலையர் வகுப்பில் படிக்கிறது போலும். அதை அரட்டிக் கொண்டே பின் வருகிறார் அதன் தாய்..பட்டாசைக் கண்ட பசுவின் கன்று போல, அரட்டலைக் கண்டோ, அல்லது பள்ளியை எண்ணியோ மிரள்கிறது அந்தக் குழந்தை. அடுத்த அடியை அம்மா எடுத்து வைக்கும் முன் அவரை அசையவிடாமல் காலைக் கட்டிக் கொள்கிறது.  அது காலில் விழுந்து கெஞ்சுகிறது எனக் கற்பனை கொள்கிறது என் கவிமனம்.

அந்தக் கவிமனத்தைச் ‘சுள்’ளென்று சொடுக்கியது ஓர் அறை. திடுக்கிட்டுப் பார்த்தேன். அடி வாங்கியது அந்தக் குழந்தைதான்.அதன் ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தாயார் தந்த பரிசு. பிட்டுக்கு மண் சுமக்க வந்த பெம்மான் பட்ட பிரம்படி போல் அந்த அடி என்மீதும் பட்டு வலித்தது

அண்ணல் காந்தி மண்ணில் பிறந்த அந்தக் குழந்தை, அடி கண்டபின்னும் தன் அறப்போரட்டத்தைக் கைவிடவில்லை. சப்பென்று சாலையில் அப்படியே அமர்ந்து விட்டது. துவைத்துத் தேய்த்த ஆடையில் தெருப்புழுதி படிகிறதே எனப் பதறினார் தாய். அறப்போராட்டத்திற்கு எதிராக அடக்குமுறையில் இறங்கினார் அம்மா.’ விலுக்’கென்று பிடித்து இழுத்து, எழுப்பி நிறுத்திப். பின்புறத்தில் இரண்டு தட்டினார். அழுக்கை அகற்றத் தட்டினாரா அல்லது ஆத்திரத்தில் அடி போட்டாரா என்பது எனக்கு இங்கிருந்து சரியாகத் தெரியவில்லை.குழந்தையின் வீறிட்ட குரல் அடிதான் அது என அறுதியிட்டது. வீறிட்ட அழுகை அடுத்து வந்த அதட்டலில் விசும்பலாகத் தேய்ந்தது.சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல் அந்தச் ‘சண்டி’க் குழந்தையின் முகம்  விம்மலில் உயர்ந்தும் வீழ்ந்தும் துடித்தது.பட்டுப் ரோஜாவில் ஒட்டிய பனித் துளிபோல் பாப்பாவின் கண்ணருகே மின்னிய முத்துக்களை வெள்ளித் துண்டோ, வைரத் துகளோ எனச் சூரியஓளி சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது-

வாடி விடாதே மலரே வன்முறைக்கும் ஒரு வரையறை உண்டு எனச் சொல்வது போல் வந்து நின்றது ஆட்டோ. கடைசிக் காட்சியில் வருகிற சினிமா காவல்துறை போல், காலம் தாழ்ந்து வந்தது கடவுளின் கருணை

அரை வட்டமடித்துத் திரும்பி நின்ற ஆட்டோவைக் கண்டதும்,. பொரியை வீசியதும் விரைந்து வருகிற குளத்து மீன்களைப் போலக் குழந்தைகள் அதை நோக்கி ஓடின. அழுத குழந்தையை அதன் அம்மா தூக்கி தானிக்குள் திணித்தார். கண்ணில் நீரும்,மனதில் வலியுமாகப் பாப்பா என் பார்வையில் இருந்து மறைந்தது.

பார்வையிலிருந்து மறைந்ததே தவிர நெஞ்சுக்குள் கேள்வியாய் நிறைந்தது. கசங்கிய மனமும், கண்ணில் குளமுமாகக் கல்விக்கூடம் செல்லும் அந்தக் குழந்தை அந்தப் பள்ளிக் கூடத்தை என்னவென்று எண்ணும்? சிறைக்கூடம் என்றவோர் சித்திரம் அதன் சிந்தையில் தோன்றுமோ? உறக்கத்திலிருந்து எழுப்பி, உதை கொடுத்து தன் விருப்பத்திற்கு மாறாகக் கொண்டு அடைக்கப்பட்ட இடத்தை ஒரு கொட்டடி எனக் கருதுமோ? மலை வாழை எனப் பாரதிதாசன் சொன்ன கல்வி அதற்குக் கொலை வாளாகத் தெரியுமோ? அல்லது விவரம் தெரியாமல், வீட்டுக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட அந்தப் புதுமலர் வெளி உலகே இப்படி வெப்பம் நிறைந்த்துதான் என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெறுமோ?

எங்கோ படித்த ஒரு கதை, என்றோ படித்த ஒரு கதை நீரில் புதைத்த பந்தைப் போல் நெஞ்சில் மேலெழுந்து வந்தது.

அவர்கள் அண்ணன் தம்பிகள். மூத்தவன் முரடன்.மோசமான மதுப் பிரியன். சாராயம் உள்ளே போகாமல் சாயங்கலம் போகாது. உள்ளே குடி புகுந்தால் எவர் எதிரே வந்தாலும் அடிதான். நலமா என விசாரிப்பவர்கள் கூட நாலு மொத்து வாங்கிக் கொண்டுதான் போகவேண்டும்.. அவன் எதிரில் வந்தால் ஊரே ஒதுங்க ஆரம்பித்தது. உள்ளே ஒடுங்க ஆரம்பித்தது. அத்தனை பயம் அவன் மேல்.

தம்பி தளராத உழைப்பாளி. தன் முயற்சியால் மேல் உயர்ந்து வந்தவன். போதையில்லாத வாழ்க்கையால் பொருளும் புகழும் ஈட்டிப் பொலிவாக வாழ்ந்து வந்தான்.உதவி எனக் கேட்டு வந்த எவரையும் ஏமாற்றம் கொள்ளச் செய்ததில்லைஅவன்.

ஒரே குடும்பத்தில், ஒரே காலத்தில்  ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இருவர் இருவேறு இயல்பினராக இருப்பது எப்படி? சமூக இயலாளர் ஒருவர் சந்தேகத்தைத் தெளிவித்துக் கொள்ள இருவரையும் அணுகிக் கேட்கத் தீர்மானித்தார். முதலில் மூத்தவனிடம் போனார்

“அதுவா? அப்பாதான் காரணம்.” என்றார் அண்ணன்.

“அப்பாவா?”

“ஆம் அவர் பெருங் குடிகாரர். குடித்தால் அடி விழும். அவரைக் கண்டு ஊரே அஞ்சியது. என்னைப் பார்த்து எல்லோரும் நடுங்க வேண்டுமானால் குடிக்க வேண்டும் எனப் புரிந்து கொண்டேன். அதன் பின் கோப்பையில்தான் என் குடியிருப்பு”

இரண்டாவதாக இளையவரிடம் போனார். “உங்கள் வெற்றிக்குக் காரணம்?”

“அப்பாதான்!”

“அப்பாவா? அவர் பெரும் குடிகாரர் என்று அண்ணன் சொன்னாரே!”

“ஆம். அவர் குடிப்பார். குடித்தால் அடிப்பார்.அதனால் அவ்ரிடம் எல்லோருக்கும் வெறுப்பு. அம்மாவும் குழந்தைகளும் கூட  அதற்கு விலக்கல்ல. ஊர் ஒதுங்கிக் கொள்ளும். அதை அவர் அச்சம் எனக் கருதினார். ஆனால் அது வெறுப்பு. அவரைப் போல நான் ஆகிவிடக் கூடாது என்று நினைத்தேன். போதையைத் தவிர்த்தேன். புத்தி தெளிவாக இருந்தது. யோசிக்க முடிந்தது. உடல் ஆரோக்கியமாக இருந்தது. உழைக்க முடிந்தது. அனைவரிடமும் அன்பும் உதவியும் கிடைத்தன. ஒருவர் உயர இவை போதாதா?”

அடிக்கும் ஆல்கஹாலுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.சின்னக் குழந்தைகள் மீது நாம் செலுத்தும் வன்முறை அவர்களை முரடர்கள் ஆக்கலாம். அல்லது கோழைகள் ஆக்கலாம். வன்முறைதான் வாழ்க்கையில் வெற்றிக்கு வழி என்று அவர்கள் தங்கள் வருங்காலத்தை அதன் வசம் ஒப்புவிக்கலாம். அல்லது தன்னம்பிக்கை இழந்து தயங்கித் தயங்கி மலராத மொக்குகளாகவே மடிந்து போகலாம். அடித்து வளர்க்கப்பட்ட குழந்தை விரக்த்தியில் வெந்து விகாரமாகிப் போகலாம். அல்லது சாதிக்கும் ஆசையில்லாத சப்பாணிகளாக முடங்கி ஒடுங்கி விடலாம்.

உங்கள் குழந்தை மீது உங்களுக்கு அக்கறை உண்டு. வாழ்வில் அவன்/அவள் வெற்றி பெற்று வலம் வரத்தான், வளம் பெறத்தான் கடுமை காட்டுகிறீர்கள். புரிகிறது. பத்திரமாகப் பாதுகாக்கக் கருதி உள்ளங்கைக்குள் உட்கார்த்தி வைத்திருக்கும் பட்டாம் பூச்சியை இறுக்கிப் பிடித்தால் இறந்து போகும். அல்லது அதன் இறகுகள் முறியும். நலம் நாடி நீங்கள் உயர்த்தும் குரல், ஓங்கும் கரம் நாளை விஷமாகக் மாறிவிடும் விபத்து உண்டு

அடியாத மாடு படியாது என்று தமிழ் சொலவம் உண்டே? ஆம் அதே தமிழ்தான் கடிதோச்சி மெல்ல எறியவும் நமக்குக் கற்பித்தது.. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்கிறார்களே? அதிக பாரம் ஏற்றிய வண்டியில்  கூடுதலாக ஒரு மயிலறகைப் போட்டால் அச்சு இற்றுப் போகும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர்.

என்ன செய்யப் போகிறீர்கள்  உங்கள் குழந்தைகளை?     . .

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *