பொய்க்கால் கழுதைகள்

     தலைவருக்கு வயது தொண்ணூறு. தளதளவென்று பரங்கிப் பழம்போல் முகம். இட்ட அடி நோக இருவர் தாங்கி பிடித்துக் கொள்ள, மெல்ல நடந்து வந்தார். திண்டில் மடங்கிச் சாந்தார்.

       பேட்டிக்கு  நோட்டைப்  பிரித்துக்  கொண்டேன்.

       “ வாழ்த்துக்கள் ! உங்களுக்குத் தொண்ணூறு வயது இன்று.  ஆசீர்வாதத்திற்குக் கையை உயர்த்தினார்.  “ எழுதிக் கொள்ளுங்கள். ஆளும் கட்சியின் அராஜகம் நாளுக்கு நாள் …  என்ற  வழக்கமான  அரசியல்  வார்த்தைகளில்  ஆரம்பித்தார்.

       “ மன்னிக்க வேண்டும்.

                என்ன  என்று  கண்கள்  கேட்க  முகத்தை  உயர்த்தினார்.

       “ எப்போதும் போன்ற உபதேசங்கள் வேண்டாம். அடிப்படைகள் குறித்துப் பேச விரும்புகிறேன்.

                ம் ?

                எழுபது வருடமாக அரசியலில் புழங்கி வருகிறீர்கள். எத்தனையோ விநோதமான யோசனைகளை முன் வைத்திருக்கிறீர்கள். அரசுக்கு எதிராக ராணுவம் கிளர்ச்சி செய்ய வேண்டும்.  நாடு  உருப்பட  வேண்டும்  என்றால் அரசியல் கலாசார, ஆன்மிக மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்றெல்லாம் பேசி வந்திருக்கிறீர்கள். எப்போதேனும் சாதாரண  மனிதனை  நினைத்துப்  பார்த்ததுண்டா ?

                கேள்வி  முகத்தில்  அறைந்தது.  திகைத்துப் போனார் தலைவர். அரை நிமிடம்தான்.  அதற்குள்  சமாளித்துக்  கொண்டு  முறுவலித்தார்.

       “ மை டியர் ஆங்கிரி யங்மேன் … என்று ஆரம்பித்தார். சடாரென்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சரிந்தார். அம்மா என்று முனகினார். உடனே நினைவிழந்தார். பக்கத்திலிருந்த தொண்டர்கள் திமுதிமுவென்று ஓடி வந்தார்கள். டாக்டருக்கு போன் பறந்தது. முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தார் ஒருவர். பரபரவென்று உள்ளங்காலில்  சூடு  பறக்கத்  தேய்த்தார்  ஒருவர்.

       சாப்பிட  உட்கார்ந்து  சற்று  நேரம்  ஆகியிருக்கும்.  பாதிச் சாப்பாட்டில் வாசற் கதவு இடிஇடியென்று குலுங்கியது. பயமும் பதற்றமும் தெரிந்த இடிப்பு. பதிலுக்குக் காத்திராமல் சார், சார், என்று மிரண்ட குரல். முதுகுக்குப் பின்னால் கையை மறைத்துக் கொண்டு  கதவைத்  திறந்தேன்.  சந்திரசேகர்.

       “ சாப்பிடறீங்களா  சார்,  ஸாரி.

                என்ன  சேகர்,  இத்தனை  பதற்றம் ?

                சாப்பிட்டு வாங்க, போகலாம்.

                என்னப்பா ?

                நீங்க சாப்பிடுங்க சொல்றேன்.

                ப்ச்.  விஷயத்தை  சொல்லு  முதலில்.

                ரகுவிற்கு நிலைமை மோசமாயிருக்கிறது. தூக்கி தூக்கிப் போடுகிறது. அவன் அம்மாவிற்கு கையும் ஓடவில்லை,  காலும்  ஓடவில்லை.  மிரண்டு  போய்,  நடுவார்டில்  ‘ ஓ வென்று  அழுகிறாள்.  நீங்கள்  வந்து  இரண்டு வார்த்தை சொன்னால் அடங்குவாள்.

                சாப்பாட்டை  கைகழுவி  விட்டுச்  சட்டையை  மாட்டிக்  கொண்டு  புறப்பட்டேன்.

       இன்னைக்கெல்லாம் இருந்தால் ரகுநாதனுக்கு இருபது வயதிருக்கும். வெகு சூட்டிகையான பையன், வேலைக்குச் சேர்ந்த அன்றே வித்தை தெரிந்த ஆள் என்று காண்பித்துவிட்டான். சின்னப்  பையன்  என்று  டெஸ்பாட்டிச்சில் போட்டிருந்தேன், அதிகம் வேலை  இல்லாத நாற்காலி. ஆனால் உட்கார்ந்திருந்தோம். வேலை செய்தோம், வீட்டுக்குப் போனோம் என்ற நிம்மதி கிடையாது. மருந்துக் கம்பெனி ஆனதால் தினம் இருநூறு முன்னூறு கடுதாசி வெளியில் போகும். அதில் பாதி டாக்டர்களுக்கு அனுப்பும் ஞாபகக் கடிதங்கள்.  இன்ன  ஊரில், இந்த டாக்டருக்கு, இன்ன தேதியில், இன்ன ப்ராடெக்ட் என்று போக வேண்டும். ஆண் டாக்டருக்கு பிரசவ மருந்தும், குழந்தை டாக்டருக்கு கருத்தடை மாத்திரையும் போனால் தபால் செலவு தண்டம். வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் இவருக்குப் போச்சா, அவருக்குப் போச்சா என்று குடைந்து கொண்டு இருப்பார்கள். அப்படிப் போகவில்லை என்றால் அதனால்தான் விற்பனை குடி மூழ்கிப் போயிற்று என்று கூவுவார்கள். இவனை மாதிரிச் சின்ன பையனாக இருந்தால் கேட்கவே வேண்டாம். எல்லோருக்கும் கிள்ளுக்கீரை. ஆனால் ரகுநாதன் வந்த அன்றைக்கே  வேலையைப்  புரிந்து கொண்டு விட்டான். கிடுகிடுவென்று பெயர்களை அகர வரிசைப்படுத்திக் கொண்டான். இந்தத் தேதியில் இன்ன ஊர் என்று திட்டம் செய்தான். செய்தவற்றை என்னிடம் காண்பித்து  ‘ சரியா சார்  என்று ஒப்புதல் வாங்கிக் கொண்டான்.

       இதையெல்லாம் பார்த்து நான் பிரமித்துப் போனேன். இத்தனை சின்னப் பையன் இப்படித் துருதுருவென்று காரியம் செய்வதைக் காண ஆனந்தமாய் இருந்தது. இதே நேரத்தில் கூடவே ஒரு உறுத்தல். இத்தனை புத்தியும், கூர்மையும் உழைப்பும் இருந்தும் இவனுக்கு ஒரு கடைநிலை குமாஸ்தாவாகத்தான் வாழ்க்கையைத் துவக்க முடிந்திருக்கிறது.  குறுக்கே விழுந்த முட்டுக்கட்டை படிப்பு. அதற்கு உண்டான விலை, மூச்சுப் பிடித்து எஸ்.எஸ்.எல்.சி, வரை படித்தான். அதற்குமேல் படிக்க ஐவேஜ் இல்லை. அப்பா இல்லாத பையன். அம்மா சமையல்காரி. அண்ணா தாலுகா ஆபீஸ் குமாஸ்தா. பணமும் படிக்க வாய்ப்பும் கிடைத்திருந்தால் பையன் கிடுகிடுவென்று முன்னேறி இருந்திருப்பான்.  விதி  வேறுவிதமாக இருந்திருக்கும். இந்த நேரத்தில் அநேகம் பேருடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பது, திசை திருப்புவது எல்லாம் பணம், புத்தி இல்லை.  உழைப்பு  இல்லை.  இந்தப்  பரிதாபத்திற்குப்  பலியாகிப்  போனவன் ரகுநாதன்.

       மொத்தம் மூன்று மாதம் வேலை செய்திருப்பான். ஒரு வியாழக்கிழமை மத்தியானம்  விடுமுறைக்கு  விண்ணப்பம்  போட்டான்.

       “ என்னப்பா ?

                சற்று முன்னே வந்து வேட்டியை விலக்கிக் காண்பித்தான். முட்டியில் இருந்து கணுக்கால் வரை செவ செவ என்று தடித்திருந்தது. துடைப் பக்கத்தில் வீக்கம். அரையிடுக்கில்  நெறிகட்டிக்  கொண்டு  இருக்கிறது  என்று  கூசிக்  கூசிச்  சொன்னான்.  “ விஷக்கடி போலிருக்கிறது  சார்.  மந்திரிக்கணும், மாரியம்மன் கோவில் போக வேண்டும்.

                நிமிர்ந்து முகத்தைப் பார்த்தேன். நீர் கோர்த்துக் கொண்டிருந்தது மாதிரி ஒரு உப்பல்.  இது  விஷக்கடி  இல்லை.  வேறுவிதம்  என்று  பார்த்ததும்  தெரிந்துவிட்டது.    

       “ சாமி வேண்டாம். டாக்டரை பாரப்பா  என்ற சொல்லி அனுப்பி வைத்தேன். மறுநாள் வரவில்லை. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருப்பதாக செய்தி வந்தது. அதற்கடுத்த  நாள்  பதறிக்  கொண்டு  சேகர்  வந்து  நிற்கிறான்.

       லைவர் கண் விழித்ததும்  டாக்டர்  முகத்தைப்  பார்த்தார்.  முறுவலித்தார்.        “ களைப்பாய் இருக்கிறது என்றார்.  யாரோ  சில்லிட்ட  பழரசம்  கொண்டு  வந்தார்கள்.  “ வேண்டாம் என்று நிறுத்தினார் டாக்டர்.  “ அதிகம் தண்ணீர் கொடுக்க வேண்டாம். கிட்னி  செயலிழக்கத்  துவங்கி  இருக்கிறது. நல்ல வேளையாக ஒரு கிட்னி மட்டும். உடனே  ஆஸ்பத்திரியில்  சேர்ந்து  கொள்ளுங்கள்.

                “ ஆஸ்பத்திரி.  அவசியம்தானா ?

            இடைவிடாத  கண்காணிப்பு  வேண்டும்.  இங்கு  அது  சாத்தியமா? 

                முடியும் டாக்டர்.  கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள முடியும். இன்றைக்கு நீங்கள் இங்கு தங்கி விடலாமே.

                இங்கேயா ?  அரசாங்க  டாக்டர்  நான். ஒரு அவசரத்திற்கு பரவாயில்லை. ஆனால்  இங்கேயே  தங்கி  விடுவது …

                அதற்கான  பெர்மிஷன்தானே… இதோ வாங்கி விடுகிறோம்  அந்தரங்க உதவியாளர் முதல்விரிடம் அவசரக் கால் போட்டுப் பேசினார். ‘ அடடே  என்று பதறினார் முதல்வர். உடம்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி அறிவுரை சொன்னார். டாக்டர் விஷயத்திற்கு,  தாமதமின்றி,  சரி  என்றார்.

       கேஷுவாலிட்டி வாசலின் வழியே புகுந்து கிடுகிடுவென்று வார்டுக்குப் போனேன். பொது வார்டு படுக்கையிலும்,  தரையிலும்  முனகிக்  கொண்டிருந்த  வியாதிகள்.

       ரகுவைச்  சுற்றி  சின்னக்  கூட்டம். கையும்,  காலும்  கிடுக்காய்  பின்னிக்  கொள்ள வாயில் நுரை தள்ளி இருந்தது. பல்லுபட்டு, நாக்கிலும், உதட்டிலும் ரத்தம். நர்ஸுகளோ, டாக்டர்களோ யாரும் காணோம். வார்டு பையன் யாருக்கோ காபி வாங்க கடைக்குப்  போயிருப்பதாகத் தகவல். நான் வேகமாய் நகர்ந்து மேஜை மீது பேப்பர் வெயிட் போலிருந்த ரப்பர் துண்டைக் கழுவி, பற்கள் மோதிக் கொள்ளாதபடி வாயில் திணித்தேன். கையையும், காலையும் சூடுபறக்க தேய்த்தேன். உடலின் துள்ளல் அடங்கிற்று.  ஒரு  அரை  நிமிடம்  கண்ணை விழித்துப் பார்த்தான். உடம்பு முழுக்க ஊதிக் கிடந்தது.

       எப்படியோ செய்தி போய் எங்கிருந்தோ ஒரு நர்ஸ் வந்தாள். ‘ விலகிப் போங்க என்று  அதட்டல்  போட்டாள்.  இதை  யார்  வைத்தது ?  என்று உறுமினாள்.

       “ டாக்டர்  யாரும்  இல்லையா ?

                யாரு நீங்க ?

                இதற்கு  பதில்  சொல்வது  அநாவசியம்  என்று  நினைத்தேன்.

       இது  யார்  யூனிட் ?

                நீங்க  யாரு,  ஸ்டூடண்டா ?

                கட்டிலில் மாட்டி இருந்த சார்ட்டிலிருந்து யூனிட் சீஃப்பின் வீட்டு நம்பரையும் தெரிந்து கொண்டேன். வார்டிலிருந்த போனை எடுத்தேன். தஞ்சாவூரில் ஒரு சௌகரியம். டயல் கிடைக்காது.  நம்பர்  ப்ளீஸ்  தான்.  சிஸ்டர்  பாய்ந்து  வந்தாள்.

       “ போனைத்  தொடாதீங்க.

                சீஃப்போட பேசணும்.

                மறுபடியும்  “ யார் நீங்க ?

                சீஃப்பின்  வீட்டில்  விடாமல்  மணி  அடித்துக்  கொண்டிருந்தது.  இருபது  முப்பது ரிங் அடித்ததற்குப் பின்னால் வேலைக்காரி மறுமுனையில் பதில் சொன்னாள். “ சீஃப் வீட்டில்  இல்லை.  சினிமாவிற்குப்  போயிருக்கிறார்.

                நர்ஸ் போய் ஹவுஸ் சர்ஜனை அழைத்து வந்தாள். சின்னப் பெண். கண்ணாடி ஃபிரேமில்,  காலர்  வைத்த  ப்ளவுஸில்  நாகரிகம்  ததும்பியது.  நர்ஸ் கேட்ட கேள்வியை  அவள்  ஆங்கிலத்தில்  கேட்டாள்.

       என்  பார்மஸி  பட்டம், பார்க்கும் உத்தியோகம் பற்றி இரண்டு வரியில் சொன்னேன்.

       “ எங்கள் அனுமதி இல்லாமல் போனை உபயோகிப்பது நாகரிகக் குறைவான செயல்.

                நாகரிகம்  பார்க்கும்  நேரம்  இல்லை  இப்போது.

                மருத்துவக் கல்லூரியில் நான்கு வருடம் படித்து இருக்கிறீர்கள். நமது ஆஸ்பத்திரிகள்,  சீஃப்கள்  பற்றி  உங்களுக்குத்  தெரியும். நான் டியூட்டியில் இருக்கும் போது  என்னை மீறிக் கொண்டு சீஃப்புக்கு போன் செய்வது என் கேரியரையே நாசம் செய்து விடும்.

                ஸாரி, அது  என்  நோக்கம்  இல்லை.

                என்ன வேண்டும் உங்களுக்கு ?

                இந்தப்  பையன்,  ஃபிட்ஸ்  வர  ஆரம்பித்திருக்கிறது.

                ஐ காண்ட் ஹெல்ப் இட். கிட்னி ஃபெயிலியர் ஆகத் துவங்கிவிட்டது. இனி என்ன செய்வது என்ற முடிவை சீஃப் தான் எடுக்க வேண்டும்.

                சீஃப்  வீட்டில்  இல்லை.  இந்த  ராத்திரி  மட்டும்  தூங்க  வைக்க  முடியாதா ?

                தூக்க மருந்துகள், பூட்டிய கஃப்போர்டில் இருக்கின்றன. டி.ஏ.பி. யைப் பாருங்கள். அவர் சொன்னால் செடேட்டிவ் கொடுக்கிறேன்.

                டி.ஏ.பி.  என்றால்  யார் ?

                ட்யூட்டி  அஸிஸ்டெண்ட் பிஸிஷன், மூன்றாவது மாடியில் அவர் அறை இருக்கிறது.

                நான்  வேக  வேகமாகப்  படியேறினேன். டி.ஏ.பி. அறை திறந்திருந்தது. அங்கே உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க  இங்கு ஐந்து நிமிடம் முள் மீது நின்றேன். பொறுமை இல்லாமல் காரிடாரின் முனை வரை நகர்ந்தேன். அங்கு அரைத்  தூக்கத்திலிருந்த கடைநிலை  ஊழியரை  உலுப்பினேன்.

       “ ஸ்கூட்டர் கீழே இருக்கிறதா பாருங்க. இருந்தால் ஐயா ரவுண்ட்ஸ் போயிருக்கிறார்  என்று  அர்த்தம்.

                என்ன பார்த்தீங்களா ?  என்றார்  ஹவுஸ்  சர்ஜன்.

       “ அவர்  இல்லை.  வேறு  யாரைக்  கேட்பது ?

                ஆர்.எம்.ஓ. வைப் பாருங்கள்.

                அவசர  நோயாளியின்  மருந்துக்கு  முன்னால்  ஆயிரம்  அரசாங்கச்  சட்டங்கள்.

       ரகு, அவன் புத்திசாலித்தனம், அவன் வயது, வாழ்க்கை அவனுக்கு விட்டிருக்கிற சவால் எல்லாவற்றையும்  நினைத்தபோது  இந்தச்  சட்டங்களை உடைத்தெறிய வேண்டும்  என்ற  வெறி பொங்கிற்று.  

       ஆர்.எம்.ஓ.  வீடு  பூட்டி  இருந்தது.

       லைவர்  முகம்  கோணியது.  கால்கள்  இழுத்துக்  கொள்ள  கைகள்  உதறிற்று.

       “ இனிமேல்  தாமதிக்கக்  கூடாது. நகரத்தில் இருக்கும். பெரிய ஆஸ்பத்திரிக்குத் தான்  எடுத்துச்  செல்ல  வேண்டும்  என்றார்  டாக்டர்.

       “ ஆபத்தான  நிலைமையா  டாக்டர் ?

                டயலைஸிஸ்  செய்தால்  காப்பாற்றலாம்.

                அதை  இங்கேயே  செய்ய  முடியாதா  டாக்டர் ?

                சாத்தியமில்லை. டயலைஸர் வேண்டும். நுணுக்கம் தெரிந்த நிபுணர்கள் வேண்டும்.

                டயலைஸர் ? ’‘

                ஆமாம், உடம்பிற்கு வெளியே வேலை செய்யும் செயற்கைச் சிறுநீரகம். ரத்தக் குழாயிலிருந்து அதற்கு ஒரு இணைப்பு கொடுத்துவிடுவோம். கழிவு ரத்தம் டயலைஸரில் வடிகட்டப்பட்டு சுத்தமாகி மறுபடியும் …

                டாக்டர்  பேசி  முடிப்பதற்குள்  ஆம்புலன்ஸ் வந்து நின்றது. உள்ளிருந்து ஸ்ட்ரெக்சர்  இறங்கிற்று.  பயணத்தின்போது துன்பமின்றி இருக்க தூக்க மருந்து ஏற்றினார்  டாக்டர்.  இரண்டு மணி நேரத்தில் பக்கத்து நகரம். அங்கிருந்து தலைநகருக்குத் தனி விமானம். தலைவரின் கை, டையலைஸருடன் பிணைக்கப்பட்ட போது  இரவு  மணி  இரண்டு.

       ந்த  நேரத்தில்  இங்கு எங்கு சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் ?  திரும்பிப் பார்த்தேன். செந்தமிழன். டாக்டர் செந்தமிழன். எனக்குத் தெரிந்த ஹவுஸ் சர்ஜன். விஷயத்தைச் சொன்னேன்.

       “ கிட்னியா,  அடப்பாவமே ?

                டயலைஸிஸ்  செய்தால்  காப்பாற்றலாமே  டாக்டர் ?

                விளையாடறீங்களா ?  தஞ்சாவூரில் ஏது டயலைஸர் ?  வேலூர் போகணும், இல்லே மெட்ராஸ் போகணும். போறவரைக்கும் தாங்குமா ? போனாக்கூட செலவைத் தாக்குப்  பிடிக்க  முடியுமா ?  ஒருதரம்  பண்றதுக்கு  ஆயிரக்கணக்கில  ஆகும்.

                இப்ப  என்ன  பண்ணலாம் ?

                முதல்ல  பையன்  ராத்திரி  தூங்கட்டும்.  யாரு  ட்யூட்டி  ஹவுஸ்  சர்ஜன் ?

                பெயர் தெரியாது.

                தோற்றத்தை  வார்த்தைகளில்  ஸ்கெட்ச்  போட்டேன்.

       “ அதுவா ?  ஊசியைத் தொடுவதற்கு நூறு தரம் யோசிக்குமே  என்று சொல்லி என்னுடன் வார்டுக்கு நடந்தார் செந்தமிழன்.

       “ என்ன டாக்டர் ?  என்ன கேஸ் ?

                பெண்  ஹவுஸ்  சர்ஜன்,  அதிருப்தியோடு  என்னைப்  பார்த்தார்.

       உலர்ந்த  குரலில்  விவரிக்கத்  தொடங்கினார்.

       “ யூரேமியா, கிட்னி செயலிழக்க ஆரம்பித்து விட்டது. என்ன செய்வது என்ற முடிவை சீஃப் எடுக்க வேண்டும்.

                சீஃப் வீட்டில் இல்லை.  என்று குறுக்கில் விழுந்தேன் நான்.

       “ இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்க ஏதாவது செடேட்டிவ் கொடுங்களேன்  என்றார் செந்தமிழன்.

       “ ஆர்.ஆம்.ஓ. வைக்  கேட்க  வேண்டும்.

                ஒன்றும் பேசாமல் நான் விடுவிடென்று கப்போர்டை நெருங்கினேன். கீழே கிடந்த இரும்புத்  தடியால்  பூட்டை  உடைத்தேன்.

       “ என்ன பண்றீங்க ?    என்று பதறிக்கொண்டு வந்தார் டியூட்டி ஹவுஸ் சர்ஜன்.

       “ உங்கள்  விதிகளைவிட  அந்த  இருபது  வயதுப்  பையனின் உயிர் அதி முக்கியம்.

                உஸ்  என்று தோளில் தட்டினார் செந்தமிழன்.

       நிதானமாக  ஸிரிஞ்ஜை  எடுத்து  அதில் மருந்தை ஏற்றிக் கொண்டார்.

       “ டாக்டர்  பெண் ஹவுஸ் சர்ஜன் பதற்றமும், கோபமும் பொங்கி எழ, குறுக்கே நின்றார்.

       “ இது என் பேஷண்ட். இன்றிரவு ஏதாவது நடந்தால் சீஃப்பிற்கு பதில்  சொல்ல வேண்டியவள்  நான் ;  நீங்கள் இல்லை. ப்ளீஸ் மைண்ட் யுவர் பிஸினஸ்.

                உன்னுடைய சீஃப் கேட்டால் சொல்.  இதைப் போட்டது  செந்தமிழன்  என்று.

                மருந்து உள்ளே போன கொஞ்ச நேரத்தில் வலிப்பு நின்றது. ரகு நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தான்.

       மறுநாள் காலை கொக்கி கொக்கியாய் கேள்வி விழுந்தது. யாரைக் கேட்டு உள்ளே நுழைந்தாய் ? யாரைக் கேட்டு பூட்டை உடைத்தாய் ? அனுமதி இல்லாத நேரத்தில் ஆஸ்பத்திரியில் நுழைந்து அமைதியைக் குலைத்ததாக, அரசாங்கப் பொருளைத் திருடியதாக ஏழெட்டு செக்ஷன்களில் வழக்குப் பதிவு செய்தார்கள். செந்தமிழனுக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் வந்தது.  பகல்  முழுவதும்  ஆர்.எம்.ஓ. விடம்  டீன்  அலுவலகத்தில், போலீஸ் ஸ்டேஷனில், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பதில் சொல்வதில் கரைந்து  போனது.

       மாலையில் ரகுநாதன் செத்துப் போனான். இருபது வயதில் உலகத்தை ஜெயிக்கக்கூடிய ஒரு அலெக்ஸாண்டர் அரசாங்க விதிகளில் மூச்சுத் திணறி செத்துப் போனான். செத்தற்குப் பிறகும் சட்டம் விரட்டி விரட்டித் துரத்தியது. உடம்பை ’அகெய்ன்ஸ்ட்   மெடிக்கல் அட்வைஸ் என்று எழுதிக் கொடுத்துவிட்டு எடுத்துப் போகச் சொன்னார்கள். நோயாளி உடல்நிலை முற்றிவிட்டது. எடுத்துப்போக வேண்டாம் என்று டாக்டர்கள் சொன்னதாகவும், அதை மறுத்து அவனை எடுத்துக் கொண்டு போனதாகவும் இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம். முழுதாக ஒருவனை மூச்சு திணற கொன்றுவிட்டு அதை இப்படிப் பூசி மெழுகுவது ஆஸ்பத்திரி வழக்கம்.

இதற்குச் சம்மதிக்கவில்லை என்றால் உடனடியாக உடம்பு கிடைக்காது. போலீஸ் சார்ஜெண்ட், போஸ்ட் மார்ட்டம் என்று போய் துண்டு துண்டாகப் பிணம் திரும்பும். என்ன செய்வதென்று தெரியாமல் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு ரகுவின் அம்மா சடலத்தை எடுத்துப் போனார். அவள் கதறிய கதறல், அதற்குப் பின்னால் தொனித்த அவள் நிர்கதி, எல்லாம் என் காதில் இன்னமும் ஒலிக்கிறது.

       ந்து  மாதம் போயிருக்கும். பதினைந்து, இருபது கதர் சட்டை ஆசாமிகள் உண்டியல்  குலுக்கிக்கொண்டு  வந்தார்கள்.  விஷயம்  என்னவென்று  விசாரித்தேன்.      தேசத் தலைவருக்கு கிட்னி ஃபெயிலியர். டயலைஸிஸ் பண்ணுகிறார்கள். ஆயுள் முழுசுக்கும் அது தேவை என்பதால் பல லட்சம் மதிப்புள்ள டயலைஸரை அரசாங்கம் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறது. ஆனாலும் ஒரு நாளைக்கு ஒன்பதாயிரம் செலவாகிறது. உங்களால் முடிந்ததை உதவுங்கள். தொண்ணூறு வயதுத் தலைவரைக்  காப்பாற்றிய புண்ணியம்  என்று  விவரித்தார்  வழுக்கைத்  தலை அண்ணாச்சி.

       எனக்குள் உடைந்தது என்னவென்று தெரியவில்லை. வயிற்றில் அமிலம் பொங்க உண்டியலைப் பிடுங்கித் தெருவில் வீசினேன். அது உடைந்து விரிய நாலாபுறமும் நாணயங்கள் சிதறி ஓடின.

( தாய் )

About the Author

6 thoughts on “பொய்க்கால் கழுதைகள்

  1. // என் பார்மஸி பட்டம், பார்க்கும் உத்தியோகம் பற்றி இரண்டு வரியில் சொன்னேன்.
    //

    auto fiction 🙂 🙂 ??

    1. ஆமாம். ஒரு வகையில் இது முழுவதும் என் அனுபவம். அதில் குறிப்பிடப்படும் தலைவரும் நிஜமாக வாழ்ந்து மறைந்தவர்தான்

  2. //உடம்பை ’அகெய்ன்ஸ்ட் மெடிக்கல் அட்வைஸ் ’ என்று எழுதிக் கொடுத்துவிட்டு எடுத்துப் போகச் சொன்னார்கள். நோயாளி உடல்நிலை முற்றிவிட்டது. எடுத்துப்போக வேண்டாம் என்று டாக்டர்கள் சொன்னதாகவும், அதை மறுத்து அவனை எடுத்துக் கொண்டு போனதாகவும் இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம். முழுதாக ஒருவனை மூச்சு திணற கொன்றுவிட்டு அதை இப்படிப் பூசி மெழுகுவது ஆஸ்பத்திரி வழக்கம்.

    இதற்குச் சம்மதிக்கவில்லை என்றால் உடனடியாக உடம்பு கிடைக்காது. போலீஸ் சார்ஜெண்ட், போஸ்ட் மார்ட்டம் என்று போய் துண்டு துண்டாகப் பிணம் திரும்பும்//

    சில விஷயங்கள்

    MLC – Medico legal Case என்றால் மட்டும் தான் பிணப்பரிசோதனை செய்வார்கள்

    Non MLC – பிற நோயாளிகளுக்கு பிணப்பரிசோதனை கிடையாது
    எனவே AMAல் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை

    நோயாளி இறந்தால் நான் AMAல் அனுப்புவது கிடையாது. உறுதியாக மறுத்து விடுவேன். (நோயாளிகளின் உறவினர்கள் எவ்வளவு கேட்டாலும்)

    மருத்துவமனையில் இறப்பை உறுதி செய்து சான்றிதழ் அளித்தால் அவர்களுக்கு இறுதி சடங்குகள் முதல் பல விஷயங்களுக்கு உதவியாக இருக்கும்

    இல்லை

    அவர்கள் இறப்பு சான்றிதழுக்காக அலைய வேண்டும்

  3. என் பெயர் சிவக்குமரன், வசிப்பது புதுவையில். மனைவியின் சொந்த ஊர், விழுப்புரம் அருகில் ராதாபுரம் என்ற சிறு கிராமம். மனைவி இப்போது கர்ப்பவதி(8வது மாதத்தின் இறுதியில்), அவர் பிரசவத்திற்காக தாயின் வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் வரக்கூடாத உயர் ரத்த அழுத்தம் வந்ததாக உள்ளூர் சுகாதார நிலையத்தில் தெரிவிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனையான விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அங்கு வழக்கம்போல அவசரம் என்பதை பற்றியெல்லாம் கவலைப் படாமல் அவர்கள் போக்கில், நிதானமாக பரிசோதனைகள் முடித்து உள் நோயாளியாக அனுமத்தனர். பிறகு ஒரு நாள், அவர்கள் எங்களை நடத்தியதை ஒரு வாழ்நாளுக்கும் போதுமானது. சிகிச்சை என்று எதுவும் முறையாக அங்கு கிடையாது. உயர் ரத்த அழுத்த நோய்க்காக அங்கு போனால், நோயாளியின் உடன் வந்திருப்பவருக்கு உயர் ரத்த அழுத்தத்துடன் இன்னும் சில நோய்கள் இலவசமாக வழங்கப்படும். 115ஏ, என்ற வார்டில் என் மனைவியை அனுமதித்திருந்தேன். அது ஒரு நோய் உற்பத்தி வார்டு என அறிந்தேன். அங்கிருக்கும் கழிவறை, என் மனைவியின் வார்த்தைப் படி, ஒரு முறை கழிவறையினுள் போய் வந்தால் நோய் உறுதி. என்னிடம் பணமில்லாத கஷ்டத்திலும், பணம் கடன் வாங்கி வேறு ஒரு மருத்துவரிடம் காட்டலாம் என எண்ணி, டிஸ்சார்ஜ் செய்ய கேட்டேன். அங்கிருக்கும் அனைத்து செவிலியர்களுமே, நாங்க அனுப்ப முடியாது. வேணும்னா நீங்களே கிளம்பி போங்க. நாங்க நோயாளி காணாமல் போயிட்டார்னு எழுதிக்குவோம்.(வெளியில் வந்து விசாரிக்கும்போதுதான் தெரிஞ்சது, அது தினமும் நடக்கிற ஒரு விஷயம்தான்னு). ஒட்டு மொத்த மருத்துவமனை வளாகமே, நோய் உற்பத்தி கூடம் மாதிரி இருக்கு. என்னை மாதிரி ஒரு சில பேர் சண்டை போட்டுட்டு வரோம். ஆனாலும் ஒண்ணும் பெரிசா நடந்துட போறதில்லை. இத்தினிக்கும் ஒவ்வொருத்தருக்கும் 25000 30000 இந்த ரேஞ்சிலதான் சம்பளம். ஆனாலும் வாங்கற சம்பளத்துல பாதிக்கு கூட வேலை பாக்கறதில்ல. என்ன செய்ய, பணம் சம்பாதிக்க வக்கில்லாத என்னை மாதிரி கீழ் நடுத்தரவர்க்க மக்களுக்கு இவங்களை விட்டா வேற வழியில்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these