ஆங்கிலம் அவசியம்!

வீழ்வேன் என்று நினைத்தாயோ?-14

ஆங்கிலம் அவசியம்!

பாட்டாளிகளின் முயற்சியால் உருவான தமிழ்ப் பள்ளிகள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்படத் தமிழர்களே காரணமாக அமைந்தார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்திதான். ஆனால் வரலாறு மல்லிகைச் சரங்களை மட்டுமல்ல, வாழைச் சருகுகளையும் சுமந்து கொண்டு நடைபோடுகிறது

தமிழ்ப் பள்ளிகளும் சீனப்பள்ளிகளும் தத்தம் சமுதாயத்தின் மக்களின் செல்வாக்கை ஒரு காலத்தில் (1940-50) பெற்றிருந்தன. சீனச் சமுதாயம் பிரிட்டீஷ் காலனித்துவ முறைக்குப் பெரும் சவாலாக விளங்கியதால், அச் சமுதாயத்தின் அடித்தளமான பள்ளிகளைச் சீரழிக்க நினைத்தது ஆங்கிலக் காலனித்துவ அரசு. எனவே போருக்குப் பிந்திய ஆண்டுகளில் ஆங்கிலப்பள்ளிகளில் சீன மொழி ஒரு பாடமாகத் தொடங்கப்பட்டது. இதே அடிப்படையில் தமிழும் ஒரு பாடமாக அறிமுகம் பெற்றது” என்று தமிழ்ப் பள்ளிகளில் மட்டும் இருந்த தமிழ், ஆங்கிலப் பள்ளிகளுக்கு வந்த வரலாற்றை விவரிக்கிறார் பேராசிரியர் முனைவர் அ. வீரமணி

தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கிலம் இல்லாத நிலையில், ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ் இடம் பெற்றது தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது, “1950களின் இறுதியிலும் 1960களின் தொடக்கத்திலும் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்பிக்கும் உயர்நிலைப் பள்ளிகளும் தமிழ் மையங்களும் அதிகரித்தன” என்கிறார் வீரமணி

இந்த வரவேற்புக்குக் காரணம் ஆங்கில மொழிப் பயிற்சி, வேலை வாய்ப்புக்களை அதிகரித்தது. “ ஆங்கிலப் பள்ளிகளில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றவர்கள் பிரிட்டீஷ் காலனியச் சிங்கப்பூர் அரசாங்கத்தின் அமைச்சுகளில் ‘கிளார்க்குகளாக’, ‘சூப்பர்வைசர்’களாகப் பணியாற்றினர். அவர்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு மாடி வரிசை வீடுகளில், குறைந்த வாடகை செலுத்தி இடம்பட வாழ்ந்தனர்” என்று சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் இராம. கண்ணபிரான் தெரிவிக்கிறார்.அவர்கள் சம்பளம் ஐநூறிலிருந்து ஆயிரம் வெள்ளி வரை இருந்தது. “சீன மலாய் மொழி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவு” என்னும் அவர் ஐம்பதுகளில், சீனியர் கேம்பிரிட்ஜ் தேறி ‘நார்மல் டீச்சர்ஸ் டிரெயினிங்’ முடித்த ஆங்கில மீடியம் ஆசிரியர்களுக்கு நானுறு வெள்ளிக்கு மேல் சம்பளம். அது அக்காலத்தில் பெரிய ஆரம்பச் சம்பளம்” என்கிறார்.

ஐமபதுகளின் மத்தியில் ஆட்சிக்கு வந்த மக்கள் செயல் கட்சி அரசு எல்லா மொழி ஆசிரியர்களின் சம்பளத்தையும் சமமாக்கியது. ஆனால்-

சிங்கப்பூர் என்பது குடியேறிகளின் தீவு. அங்கிருந்த தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும் அவர்களது தாயகத்திலிருந்து குடியேறியவர்கள்தான். மலாய் மொழி பேசும் மக்களில் பலர் மலேயாவிலிருந்து மட்டுமல்ல, அருகில் இருந்த பல மலாய் மொழி பேசும் தீவுகளிலிருந்து குடியேறியவர்கள்தான். எனவே சிங்கப்பூரில் எல்லோருக்குமான பொது மொழி என ஒன்றிருந்திருக்கவில்லை. சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து மலேசியா உருப்பெற்ற காலத்தில் மலாய் மொழியை பொதுமொழியாக்குவதில் முனைப்புக் காட்டப்பட்டது. ஆனால் சிங்கப்பூர் பிரிந்த பின்னர் அந்த முயற்சிகள் தளவுற்றன.

பல்வேறு இனங்கள் கூடி வாழும் ஒரு நாட்டில், இனங்களிடையே சமநிலையையும், இணக்கத்தையும் ஏற்படுத்த ஒரு பொது மொழி இருக்க வேண்டும், அதே நேரத்தில் அது ஒரு குறிப்பிட்ட இனத்தின் தாய்மொழியாக இருந்துவிடக் கூடாது என லீ குவான் யூ கருதினார். அதற்காக அவர் தேர்வு செய்த மொழி ஆங்கிலம்.

சமூகத்தின் நல்லிணக்கத்திற்கு மட்டுமன்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஆங்கிலம் தேவையாக இருந்தது. இயற்கை வளங்கள் குன்றிய சிறிய தீவான சிங்கப்பூர் அதன் வளர்ச்சிக்கு உலக வர்த்தகத்தையே பெரிதும் சார்ந்திருந்தது. அதனால் அதன் குடிமக்கள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தால்தான் விரைவான பொருளாதர வளர்ச்சி சாத்தியம் என அவர் நம்பினார். “கல்வி என்பது அறிவின் திறவுகோல் என்ற 19ஆம் நூற்றண்டின் சிந்தனையாக மட்டுமே இருந்து விடக் கூடாது. வளரும் நாடுகளுக்கு அது நாட்டை, ஒரு சமூகத்தை வளர்த்தெடுப்பதற்கான ஒரு கருவி. எனவே அதை அரசு வழிநடத்தத்தான் வேண்டும்” என்பது அவரது சித்தாந்தம். அதனால் குடியரசாக மலர்ந்த ஓராண்டில்,1966ல், பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி என்ற முடிவை அவரது அமைச்சரவை எடுத்தது.

இன்னொரு பக்கம் அரசியல் நிர்பந்தங்கள் இருந்தன. 1963 தேர்தலுக்கு முன்பாக, லீயின் மக்கள் செயல் கட்சிக்கு எதிர்க்கட்சியான பாரிசான் சோசலிஸ் கட்சி மொழிப் பிரச்சினையைக் கிளப்பியது. அப்போது லீயின் கட்சி, சிங்கப்பூர் மலேயாவோடு இணைந்து மலேசியாவாக ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அப்படி இணைந்தால் சீன மொழியின் நிலை என்னவாகும் என்பது பாரிசான் எழுப்பிய கேள்வி. அந்தக் கேள்வியை முன்வைத்து அது இணைப்பை எதிர்த்து வந்தது. சீன ஆசிரியர்கள் சங்கம், சீன மாணவர்கள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் இவர்களை இணைத்து 1963 தேர்தலின் போது அது சீனமொழிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தது.

அதன் மையக் களமாக விளங்கியது நான்யாங் பல்கலைக் கழகம். அப்போது நான்யாங் பல்கலைக் கழகம் சீன மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பல்கலைக்கழகம். சீனத்திற்கு வெளியே நிறுவப்பட்ட சீன மொழியைப்  பயிற்று மொழியாகக் கொண்ட ஒரே பல்கலைக்கழகம் அதுதான். 1960களில் மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்தல், உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்துதல் என பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் லீயும் அவரது அமைச்சர்களும் ‘ஆங்கிலம்தான்’ என்ற தங்கள் முடிவில் உறுதியாக நின்றார்கள். சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தைக் காப்பாற்ற அது ஒன்றுதான் வழி என வாதிட்டார்கள். எனவே பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி, அதே நேரம் சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் ஒன்றை இரண்டாம் மொழியாகக் கற்றுக் கொள்ளலாம் என்ற கொள்கை நிலைப்பாட்டை அறிவித்தனர். 1966ல் இரண்டாம் மொழியைக் கற்பது கட்டாயமாயிற்று. 1969ல் இரண்டாம் மொழியில் தேர்வு எழுதுவதும், அதில் போதிய மதிப்பெண் பெற்று தேர்வு பெறுவதும் கட்டாயமாயிற்று.

நம் தமிழர்களில் சிலர், வீட்டில் தமிழ்தானே பேசுகிறோம், நம் குழந்தை அதிலிருந்து தமிழைக் கற்றுக் கொண்டுவிடும். ஆங்கிலத்தோடு சீனமோ, மலாயோ கற்றால் அதற்கு மூன்று மொழிகள் தெரிந்திருக்கும். வேலை பெறவும், வாழ்க்கை வளம் பெறவும் அது கூடுதலான வாய்ப்புக்களை அளிக்கும் எனக் கருதி தமிழை இரண்டாம் மொழியாக எடுக்காமல் விட்டார்கள். தமிழ்ப் பள்ளிகளில் சேருவோர் எண்ணிக்கை குன்றியதால் ஒரு கட்டத்தில் அவை போதுமான மாணவர்கள் இன்றி மூடப்படும் நிலையை அடைந்தன.

ஆங்கிலம் அவசியம், இன்னொரு மொழி இரண்டாம் மொழி என்ற லீயின் நிலைப்பாடு எத்தகைய பலன்களை அளித்தது? நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு அது பெரிதும் உதவியிருக்கிறது.அந்தச் சிறிய தீவில் 400க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. உலகின் எந்த ஒரு பெரிய நிறுவனத்திற்கும் அங்கு கிளைகள் இருக்கின்றன. மற்றொரு நன்மை பள்ளிகளில் பல இன மாணவர்கள் தங்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள மொழி தடையாக இல்லாததால், பரஸ்பர புரிந்துணர்வும் நட்பும் ஏற்பட்டு இனங்களுக்கிடையே நல்லிணக்கம் நிலவுகிறது. இந்த நட்பு காதலாகி, கல்யாணத்தில் கூடப் போய் முடிகிறது.

ஆனால் வீட்டு மொழியாகத் தாய் மொழி இல்லை. ஆங்கிலம் அந்த இடத்தை எடுத்துக் கொண்டு விட்டது. 2011 மக்கள் தொகைக் கணக்கின்படி வீட்டில் தமிழ்ப்  பேசுகிறவர்கள் 36.7% தான். ஆனால் 41.6 சதவீத இந்தியர்களின் வீடுகளில் பேசப்படும் மொழி ஆங்கிலம். இது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்கிறது புள்ளிவிவரம்

இதில் சுவாரஸ்யமான, ஆனால் கவலை தரும் ஓர் அம்சம், மற்ற இனத்தவரை விட ஆங்கிலத்தை அதிகம் வீட்டு மொழியாகக் கொண்டவர்கள் இந்தியர்கள்தான். சீன இனத்தில் இது 32.6% மலாய்க்காரர்களிடத்தில் இது 17%

தமிழை இளையரிடம் எடுத்துச் செல்லவும், நிலைப்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கப்பூர் அரசின் ஆதரவு பெற்ற வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஏப்ரல் மாதம் முழுவதும் ‘தமிழ் மொழி மாதமாக’ கொண்டாடப்படுகிறது. இதில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு அமைப்புக்கள் அந்த மாதம் முழுவதும் 50 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்துகின்றன (30 நாளில் 50 நிகழ்ச்சிகள்!) தேசிய நூலக வாரியம் இளையோர் இலக்கிய வட்டம், நூல் விமர்சனங்கள், வெளியீடுகள், எழுத்தாளர் சந்திப்பு எனப் பல நிகழ்ச்சிகளை ஆண்டு தோறும் இடைவிடாமல் நடத்திக் கொண்டே இருக்கிறது. இதுவரை பிரசுரமாகாத தமிழ்ப் படைப்புகளுக்கு தேசிய கலைகள் மன்றம் தங்க முனை விருது என்று ஒரு பெருந்தொகையை அளிக்கிறது. அதைத் தவிர இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கிறது. ஆண்டுதோறும் இலக்கிய விழாவொன்றுக்கு ஏற்பாடு செய்கிறது. தேசிய புத்தக வளர்ச்சி கவுன்சில் நூல்கள் வெளியிட மானியம் அளிக்கிறது. தேசிய பல்கலைக் கழகம் தமில் இளையோர் மாநாட்டிற்கு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்கிறது   மீடியா கார்ப் என்ற ஊடக நிறுவனம் வார்த்தை விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறது. தமிழ் எழுத்தாளர் சங்கம், கவிமாலை, வாசகர் வட்டம், தங்கமீன் இலக்கிய அமைப்பு. லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் அமைப்பு போன்ற பல அமைப்புக்கள் பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றன அனேகமாக வாரந்தோறும் தமிழுக்கு ஒரு நிகழ்ச்சி நிச்சயம். என்றாலும்

-தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதான்

.

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these