குடிசையிலிருந்து கூடுகளுக்கு.. . .

வீழ்வேன் என்று நினைத்தாயோ?-8

குடிசையிலிருந்து  கூடுகளுக்கு.. . .

மாலன்

லீ குவான் யூவின் கனவுதான் என்ன?

ஒரு தேசம் உறுதியாக நிற்க (Stable) வேண்டுமானால் அதில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உறுதியாக நிற்கும் வலிமை கொண்டிருக்க வேண்டும்.ஒவ்வொரு குடும்பமும் உறுதியாக இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். இது லீ யின் சிந்தனைகளில் ஒன்று.

சிந்தனை சரிதான். ஆனால் நடைமுறையில் சாத்தியமா?

நடைமுறை சாத்தியமில்லை என்றுதான் மற்ற நாடுகள் நினைத்திருக்கும். ஆனால் ஏன் சாத்தியமாக்கக் கூடாது என்று லீ நினைத்தார். சிங்கப்பூரின் வெற்றி மந்திரங்களில் ஒன்று இந்த Why not? அதாவது ‘ஏன் கூடாது’?. ஏன் என்ற கேள்வி சில நேரங்களில் சோர்வளிக்கும். ஏன் கூடாது என்ற கேள்வி ஊக்கமளிக்கும் என்பது உளவியல்

ஒவ்வொரு நாடும் வீட்டுப் பிரச்சினையை ஒவ்வொரு விதத்தில் அணுகி வந்திருக்கின்றன. சோஷலிச நாடுகள், நாடு ஒட்டு மொத்தமாகப் பொருளாதார வளர்ச்சி காணும் போது வீட்டுப் பிரச்சினை தானாகத் தீரும் எனக் கருதின..முதலாண்மை(Capitalistic) நாடுகள் தனிமனிதனின் பொருளாதாரம் மேம்படும் போது அவரவர்களே வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வார்கள் என்று கருதின.

சோஷலிஸ்ட்டாகவோ, முதலாண்மைவாதியாகவோ இல்லாத நடைமுறை வாதியான லீ, வீடுகளைக் கட்டுவது மூலம் நாட்டைக் கட்ட முடியும் என நம்பினார்.அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே அவரது சிந்தனை ‘வீட்டுடமைச் சமூகம்தான்’ (Home owning society)

குடியரசாக மலர்வதற்கு முன்பு, சுய ஆட்சி அரசு (பிரிட்டீஷ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ், குடிமைப் பணிகளை நிறைவேற்றிக் கொள்ளும் அதிகாரம் கொண்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு) உருவான காலத்திலேயே அதற்கான வேலைகளைத் துவக்கினார் லீ. சுய ஆட்சி அரசுக்கான 1959ல் நடந்த தேர்தலில் லீயின் கட்சி பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தது (மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்கள்) லீ பிரதமானார்,

அப்போது, 1960ல், அவரது அரசு வீட்டு வசதிக் கழகத்தை உருவாக்கியது தெளிவான இலக்கு, எளிதான நடைமுறை என்ற இரு அம்சங்கள் அதன் ஆணி வேர்.

ஆண்டுக்கு 10 ஆயிரம் வீடுகள் என்ற அடிப்படையில்10 ஆண்டில் லட்சம் வீடுகள் அரசு கட்டும்.  அவை தவிர ஆண்டுக்கு 2500 வீடுகள் கட்டும் பொறுப்பு தனியார் துறைக்கு  வழங்கப்படும். இது இலக்கு. வீடு கட்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவது, அனுமதி அளிப்பது, கட்டப்பட்ட வீடுகளை ஒதுக்கீடு செய்வது என அமைக்கப்பட்ட 35 கமிட்டிகளைக் கலைத்து விட்டு ஒரே அமைப்பின் கீழ் அவற்றைக் கையாள்வது. இது எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறை.

திட்டம் காகிதத்தில் பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆண்டுக்குப் பத்தாயிரம் வீதம் பத்தாண்டில் லட்சம் வீடுகள் கட்டுவது என்றால் நிலத்திற்கு எங்கே போவது? டைமண்ட் வடிவத்தில் உள்ள சிங்கப்பூரில் மிக விலகிய இரு இடங்களுக்கிடையே தூரம் 52 கிலோ மீட்டர்கள்தான்.

நிலமில்லாவிட்டால் என்ன? வானம் இருக்கிறதே! அகலமாக வளர்வதற்கு பதிலாக உயரமாக வளரலாம் என முடிவெடுக்கப்பட்டது. 12 மாடி 16 மாடி என அடுக்குமாடி வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டது.

பிரமிக்கத்தக்க விதத்தில் வீ.வ.க. செயல்பட்டது. உருவாக்கப்பட்ட இரண்டாண்டுகளில் 26168 வீடுகளை அது கட்டி முடித்தது. வீவக உருவாவதற்கு முன் வீடுகள் கட்ட  ‘சிங்கப்பூர் வளர்ச்சி அறக்கட்டளை ‘ (Singapore Improvement Trust- SIT) என்ற அரசு ஆதரவு பெற்ற நிறுவனம் ஒன்றிருந்தது. 32 ஆண்டுகளில் SIT  கட்டிய வீடுகளின் எண்ணிக்கையை வீவக இரண்டாண்டுகளில் கட்டி முடித்தது! ஐந்தாண்டுகளில், அதாவது சிங்கப்பூர் குடியரசாக மலர்ந்த 1965ல், அதன் இலக்கான 50 ஆயிரம் வீடுகள் என்பதைத் தாண்டி, 53 ஆயிரம் வீடுகளை கட்டி முடித்திருந்தது.

1965 உலக அளவில், சோவியத் யூனியன், ஜெர்மெனிக்கு அடுத்தபடியாக வீட்டு வசதி விஷயத்தில் முன்னணியில் நின்றது சிங்கப்பூர். அமெரிக்காவைவிடவும் மேலான நிலையில். பிரான்ஸ், நெதர்லாந்து, மற்ற ஐரோப்பிய நாடுகளைவிடவும் சிறப்பான நிலையில் அது இருந்தது.

சரி, வேக வேகமாகக் கட்டப்பட்ட வீடுகளின் தரம் எப்படி இருந்தது? கம்பத்திலிருந்து அடுக்கு மாடி வீடுகளுக்கு குடிபெயர்வதில் இருந்த உளச்சிக்கல்களைப் பின்னணியாகக் கொண்ட நினைவுகளின் கோலங்கள் நாவலை எழுதிய சிங்கை இளங்கண்ணன் அந்த அடுக்கு மாடி வீடுகள் பற்றியும் எழுதியிருக்கிறார்:

“வானோங்கி  வளர்ந்திருந்த  கட்டிடங்களை நெருங்கியதும்   ஊர்தி நின்றது

 

வேலும் எழிலரசியும் இறங்கிக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தனர். முத்தம்மாள் “அதோ புடவை காயுதே பத்தாவது மாடி,  அதுதான் நம்ப வீடு. அடுத்தாப் போலவே நம்ப மரகதத்திற்கும் வீடு கிடைச்சிருக்கு”  என்றவாறு நடந்தாள். சொல்லி வைத்தாற்போல் மின் தூக்கியும் வந்து நின்றது மின் தூக்கி வழி எல்லோரும் வீட்டை அடைந்தனர்.

 

வீடு அழகாக இருந்தது. சல்வைக்கல் பதிக்கப்பட்டிருந்தது. புதிய தொலைக்காட்சிப் பெட்டியும் வாங்கிப் போட்டிருந்தனர். சாமான் சட்டு முட்டுகள் அது இது என்றிருந்தன.

 

சமையல் கட்டு தூய்மையாகவும் அது இருக்க வேண்டிய இடத்திலும் இருந்தன. வேலு சமையலறையைப் பார்த்துவிட்டு, “என்ன இது நம்ம சமையலறைதானா?” என்று பகடி மேலிடக் கேட்டான்.

 

அரசு கைபணத்தைப் போட்டோ, கடன் வாங்கியோ, மூலதனம் திரட்டியோ ஆயிரக் கணக்கில் வீடுகளைக் கட்டிவிடலாம். ஆனால் அவற்றை இலவசமாகக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் மக்களுக்கு அதன் அருமை புரியாது என்பது மட்டுமல்ல, தொடர்ந்து அரசால் வீடுகள் கட்ட முடியாது. பொருளாதாரம் முடங்கி ஒரு இடத்தில் மொத்த திட்டமும் தடைப்பட்டு முடங்கி நிற்கும். ஆண்டுக்குப் பத்தாயிரம் வீடுகள் என்ற இலக்கை அடையமுடியாது.

இதற்குத் தீர்வு கட்டப்பட்ட வீடுகளை விற்பதுதான். விற்கலாம்தான். ஆனால் யார் வாங்குவார்கள்?  குடிசைகளில் வாழுகிற மக்களிடம் வாங்கும் சக்தியிருக்குமா?

அங்குதான் ஒரு புரட்சிகரமான அணுகுமுறையை அரசு மேற்கொண்டது. அதுதான் மற்ற பல நாடுகளில் வெற்றி காணாத வீட்டு வசதித் திட்டம், சிங்கப்பூரில் வெற்றி கண்டதற்குக் காரணம். அது-

வீடுகளுக்குக் குடிபெயர்வோர், வீட்டின் விலையில் 20 சதவீதம் முதல் தவணையாகக் கொடுக்க வேண்டும் வீட்டின் மதிப்பு 4000 வெள்ளி (சிங்கப்பூர் டாலர்) என்றால் 800 வெள்ளி முதலில் கட்ட வேண்டும். மீதமுள்ள தொகையை வீ.வ.க. மிகக் குறைந்த வட்டியில் கடனாகக் கொடுக்கும். அந்தக் கடனுக்கு மாதா மாதம் தவணை கட்டி வர வேண்டும், வாடகை செலுத்துவதைப் போல.

சரி கையில் ரொக்கம் இருந்தால்தானே கொடுக்கமுடியும்? கையிலிருந்து கொடுக்க வேண்டாம். சேமிப்பாக இருக்கும் வருங்கால வைப்புத் தொகையிலிருந்து (பிராவிடண்ட் பண்டிலிருந்து) அந்த 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லலாம். மாதத்தவணையைக் கூட அதில் பிடித்துக் கொள்ளச் சொல்லலாம். இதற்கு வகை செய்யும் விதமாக பிராவிடண்ட் பண்ட் சட்டம் 1968ல் திருத்தப்பட்டது. 1970ல் நாற்பதாயிரம் குடும்பங்கள் சொந்த வீடு வாங்கியிருந்தன!

அப்படியானால் தவணை சுலபமானதாக இருந்ததா?

சிங்கப்பூர் வானொலியில் தொடர்ந்து 52 வாரங்கள் ஒலிப்பரப்பான நாடகம், அடுக்கு வீட்டு அய்யாசாமி. அதை எழுதியவர் சிங்கப்பூரின் முன்னணி எழுத்தாளரான புதுமைதாசன் என்ற பி.ஏ. கிருஷ்ணன்.  அதிலிருந்து ஒரு சிறிய துண்டு உங்களுக்கு இதற்கான விடையைச் சொல்லும்:

“சாந்தம்மாள்: இந்த வீடு எவ்வளவு வசதியா இருக்கு பாத்தீங்களா?  ஹாலு சமையலறை பாத்ரூமு எல்லாம் இருக்கு. நம்ப பழைய எடம் கம்பம். அந்தக் கம்பத்து வீட்டிலதான் இருப்பேன்னு பிடிவாதம்  பிடிச்சீங்களே, இப்ப இந்த இடம் எப்படி இருக்கு?

ஆரோக்கியசாமி (இருமல்) அங்கே எவ்வளவு வாடகை கொடுத்த? பதினைச்சி வெள்ளி . இங்கே எவ்வளவு? நாற்பத்தி ஆறரை. தண்ணிக் காசு, விளக்குக் காசையெல்லாம் சேர்த்து அம்பத்தி அஞ்சைத் தாண்டிடும்

 

சாந்தம்மாள்: இது அடுக்கு மாடி வீடுன்னதாலா வாடகை நாற்பத்தி ஆறரையோட போச்சி. இந்த மாதிரி வீடுங்களுக்குத் தனிப்பட்டவங்க என்ன வாடகை சொல்றாங்கனு கேட்டுப் பாருங்க. எம்பது  நூறுனு சொல்லுவாங்க.

 

ஆரோக்கிய சாமி: வசதினா எம்பது நூறுதான் கொடுக்கணுமா?  அதைப் பதினஞ்சோட வைச்சுக்கப்படாதா?”

 

நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும் என்பதுதான் உலகம் முழுதும் நாம் காணும் காட்சி

சரி, ஒரு முக்கியமான கேள்வி. பிஎஃப்பிலிருந்து வீட்டுக் கடனுக்குப் பணத்தை எடுத்துக் கொள்ள விதமாக சட்டம் திருத்தப்பட்டது என்று சொல்கிறீர்களே, தொழிற்சங்கங்கள் சண்டைக்கு வரவில்லையா?

அங்குள்ள தொழிற்சங்கங்களின் அணுகுமுறையே தனி. அது-

–    அடுத்த வாரம்

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these