வீழ்வேன் என்று நினைத்தாயோ-6

வீடு பேறு

 

இந்த வானுயர்ந்த கட்டிடங்கள் என்னைக் கவர்ந்துவிட்டன. நான்  உடனே இந்தக் கட்டிடங்களின் புகைப்படங்கள் கொண்ட ‘பிக்சர் கார்டை’ வாங்கி எங்கள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

சிங்கப்பூரில் உள்ள அயல்நாட்டுப் பத்திரிகையாளர்கள் உடபட அனைத்துப் பத்திரிகையாளர்களும் கூடியிருந்த கூட்டத்தில் இப்படிச் சொன்னவர் துரைமுருகன். ஆண்டு 1974 . அப்போது சட்ட மன்ற உறுப்பினராக இருந்த துரைமுருகன் சிங்கப்பூர் செல்கிறார் சட்டமன்ற உறுப்பினராக அல்ல. ‘ரைசிங் சன்’ என்ற வாரப்பத்திரிகையின் நிர்வாக இயக்குநராக. மலேசியன் ஏர்லைனஸ், கோலாலம்பூருக்கும் சென்னைக்கும் இடையே விமான சேவையைத் துவக்கியதை அடுத்துச் சில பத்திரிகையாளர்களை சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் அழைத்துச் செல்கிறது. அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவராக துரை முருகன் அந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். அவருடன் சென்ற மற்ற பத்திரிகையாளர்கள், முரசொலி செல்வம், தமிழ் முரசு ஜி.தினகரன், மக்கள் குரல் காமராஜுலு.

இந்தப் பத்திரிகையாளர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள தமிழ் நாளேடான தமிழ் மலர் ஹோட்டல் நியூ ஹாங்காங் என்ற நட்சத்திர விடுதியில் வரவேற்பு ஒன்று அளிக்கிறது. அந்த நிகழ்ச்சியில்தான் துரைமுருகன் இதைச் சொன்னார்.

துரைமுருகனுக்கு மட்டுமல்ல, சிங்கப்பூர் செல்கிற பலரும் அண்ணாந்து பார்த்து பிரமிப்பது இந்த வானளாவிய குடியிருப்புகளைத்தான்.அன்று மட்டுமல்ல, இன்றும் கூட இந்த பிரமிப்பு நீங்கிவிடவில்லை.

உள்ளூர் கவிஞர்களுக்கோ இந்தக் கட்டிடங்களைக் காணும் போது கற்பனைகள் பீரிட்டு எழுகின்றன. ஆசியான் நாடுகளில் உள்ள படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிற ஓர் மிக உயர்ந்த விருது ‘தென்கிழக்காசிய எழுத்தாளர் விருது (SEA Write Award) ஆசியான் நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழிகளில் எழுதப்படும் படைப்புகளுக்கு இந்த விருது, தாய்லாந்து அரசர் முன்னிலையில் வழங்கப்படுகிறது.ஆசியான் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் தமிழும் அதிகாரப்பூர்வ மொழியாக இருப்பதால் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்த விருது பெற்ற சிங்கப்பூர் கவிஞர்களில் ஒருவரான க.து.மு.இக்பால், “ இந்தக் கட்டிடங்களை “முகிலைத் தழுவிக் கட்டிடங்கள் முத்தம் கொள்ளும் நாடு” என்று கொண்டாடுகிறார். இதே விருது பெற்ற இன்னொரு கவிஞரான பரணன், “ கட்டிய வீடுகள் வெயில் மறைக்கும், காண்பவர் உள்ளங்கள் திறன் வியக்கும்” என்று சிலிர்க்கிறார்.

இந்தக் கட்டிடங்களுக்குப் பின் உள்ள வரலாறு உண்மையில் வியக்க வைப்பதுதான்

1960க்கு முன்னால் சிங்கப்பூரில் நூற்றுக் கணக்கில் காம்போங் என்றழைக்கப்படும் குடிசைப் பகுதிகள் இருந்தன. அவற்றைத் தமிழில் கம்பம் என்பார்கள். காம்போங் என்ற மலாய்ச் சொல்லில் இருந்துதான் காம்பெள்ண்ட் என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது. காம்போங் என்றால் பலவற்றின் கூட்டு. ஆங்கிலத்தில் அதை slum என்று மொழிபெயர்க்கிறார்கள். குடிசைகள் நிறைந்த பகுதி

ஓலைக் கூரைகள் வேய்ந்த குடிசைகள். உள்ளே ஒரு அல்லது இரண்டு அறைகள். அதில்தான் சமையல்,சாப்பாடு, உறக்கம் எல்லாம். கழிப்பறை வசதிகள் கிடையாது. திறந்த வெளியில், அல்லது வீட்டிற்குப் பின்புறம்  உள்ள மலக் குழிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்தச் சிறிய இடத்தில் பலர் குழுமி வாழ்ந்தார்கள். “அந்த கம்போங் குடிசைகளில் மக்கள் நெருக்கமாக வாழ்ந்தார்கள் . அந்தக் குடிசைகளில் பெரும்பாலும் ஓர் அறை மட்டும் இருக்கும். சமைப்பதற்குக் கூட இடம் இருக்காது. அதில்தான் சமைக்க வேண்டும். சாப்பிட வேண்டும். படுக்க வேண்டும். படுப்பதற்கு ஒரு கட்டில் கூட இருக்காது. ஒவ்வொரு குடும்பத்திலும் நாலைந்து பிள்ளைகள் இருப்பார்கள். எல்லோரும் அந்தக் குடிசையில் பயிற்றங்காய் அடுக்கி வைப்பது போல் அடுக்கிக் கிடப்பார்கள்.

இதில் அடுத்த குழந்தைக்கும் அங்கு செயல் திட்டம் நடைபெறும். இப்படியாக வாழ்க்கையை அனுபவித்தார்கள் நம் குடியரசு மக்கள் ஒரு காலத்தில்.

 

சில வசதியுடையவர்கள் கம்போங் நில உரிமையாளரிடம் நிலத்தை வாடகைக்கு எடுத்து அங்கு ஒரு வீட்டைப் பெரிதாக 4, 5, அறை கொண்ட வீட்டைக் கட்டுவார். பின் தன் குடும்பத்திற்குப் போதுமான ஒரு அறையையும் வராண்டாவையும் வைத்துக் கொண்டு, மற்ற அறைகளில் ஒரு அறையை மூன்றாகத் தடுத்து வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதிப்பார். அந்த அறை 6 அடிதான் இருக்கும். சமையல்கட்டும் பொதுவாகவிருக்கும். குளியல் அறை, கழிவறை இவைகள் எல்லாம் பொதுவாகவே இருக்கும். அதனால் தினமும் சண்டைச் சச்சரவுடன் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கும். படுத்திருக்கும் போது ஒருவர் மூச்சு மற்றவருக்கு ஏகபோகமாக இருக்கும் “ என்று ‘பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தில் வாழ்க்கை ‘ என்ற கட்டுரையில் கம்பங்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்  சி,குமாரசாமி என்ற சிங்கை எழுத்தாளர்.

சிங்கப்பூரில் கொளம் ஆயர் என்று பகுதி இருக்கிறது. கொளம் என்ற மலாய்ச் சொல்லுக்கு குளம் என்று பொருள் (மலாய் மொழியில் பல தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கின்றன. கடை என்பது அங்கு கடா) ஆயர் என்றால் தண்ணீர். (அதுவும் தமிழ்ச் சொல்லே என்று சிலர் ஆயக்கட்டு என்ற்ற சொல்லைச் சுட்டி வாதிடுகிறார்கள்) கொளம் ஆயர் என்றால் தண்ணீர்க் குளம்.  இந்தக் கொளம் ஆயர் பகுதியில் இருந்த கம்பங்கள் பற்றி சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், தமிழ் அமுதம் என்ற இதழின் ஆசிரியருமாகச் செயல்பட்ட பி.சிவசாமி “நேற்றிருந்தோம்” என்ற நூலில் எழுதியுள்ள கட்டுரையில் “ கம்பத்து வீடுகளில் எடுத்துச் செல்லக்கூடிய கழிவறைகள்தான் பெரும்பாலும் இருந்தன. சில வீடுகளில் அதுவும் இல்லை. குளிப்பதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் வீட்டின் அருகில் கட்டியிருந்த மறைவிடத்தைப் பயன்படுத்தினார்கள்….எங்கு பார்த்தாலும் குப்பைகள், வேண்டாத பொருட்கள் ஆகியவற்றைப் பார்க்க முடிந்தது.எலிகளையும் சில வேளைகளில் பாம்புகளையும் கூடப் பார்க்க முடிந்தது ஒரு சில கம்பத்து வீடுகளில் தண்ணீர் மின்சார வசதிகள் இருந்தன.ஆனால் பல வீடுகளில் அவ்வசதிகள் இல்லை. இதனால் பொது இடத்தில் உள்ள குழாய்களில் தண்ணீர் எடுத்து வந்து சேமித்துக் கொண்டார்கள்.இரவில் மண்ணெண்ணய் விளக்குகளைத்தான் பயன்படுத்தினார்கள்” என்று எழுதுகிறார்.

கம்பங்களில் பாதுகாப்பு என்பதும் பிரச்சினையாகத்தான் இருந்தது.”தெருவுக்குத்தெரு குண்டர்கள் கும்பல் இருந்தது” என்று கம்பங்களின் வாழ்க்கையைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட வேர்கள் என்ற நாவலில் நூர்ஜஹான் சுலைமான் என்ற இன்னொரு எழுத்தாளர் எழுதுகிறார்

இந்தப் பேட்டை ரெளடிகள், வாடகைக்குக் குடியிருப்போர் வீட்டைக் காலி செய்ய மறுப்போரை வன்முறையைப் பயன்படுத்திக் காலி செய்ய வைக்கப் பயன்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு அரசியல்கட்சிகளின் மறைமுக ஆதரவும் இருந்தது.

“என்னைச் சிலர் வந்து சந்தித்தார்கள். “பாரிசான் சோஷியல்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை அகற்ற நாங்கள் உதவுகிறோம் (பாரிசான் சோஷியல்ஸ் கட்சி, மக்கள் செயல் கட்சியிலிருந்து பிரிந்து அதற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கட்சி) அங்கே ‘ஆக்கிரமித்திருப்பவர்கள்’ எல்லோரும் பாரிசான் சோஷியல்ஸ் ஆட்கள்தான். நீங்கள் சரி என்று சொன்னால், குண்டர்களை அனுப்பி அவர்களைத் தூக்கி எறிந்து விடுகிறோம் என்று  வந்தவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்களிடம் நான் சொன்னேன்: “இந்த பாருங்க. இப்ப நாங்க ஆளும் கட்சியா இருக்கோம்.நீங்க சொல்ற மாதிரியெல்லாம் நாங்க பின்பற்ற முடியாது. நியாயமான இழப்பீட்டைப் பேசி முடித்தால் நாங்கள் உதவுகிறோம்” என்று பத்மநாபன் செல்வதுரை என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு நூலில் எழுதுகிறார்.

இப்படிப் பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற, இட நெருக்கடி நிறைந்த, ஓலைக் குடிசைகளில் இருந்த கம்பங்கள் அன்று நூற்றுக் கணக்கில் இருந்தன. இன்று ஒன்று கூடக் கிடையாது. அங்கிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக, நவீனமான வானுயர்ந்த கட்டிடங்களில் குடி அமர்த்தப்பட்டார்கள்.ஆம் மக்கள் மகிழ்ச்சியுடன்  குடிபெயரவில்லை, வலுக்கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டார்கள்.

ஏன்?

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *