அண்டை வீட்டாரும் சண்டைக் குரல்களும்

வீழ்வேன் என்று நினைத்தாயோ?-4

ஜேம்ஸ்க்கு நியூ ஜெர்சிக்குச் செல்ல வேண்டியிருந்தது.  இந்த ஜேம்ஸ்- முழுப் பெயர் ஜேம்ஸ் ஏ காரிஃபீல்ட்- அமெரிக்க ஜனாதிபதி. தன் பரிவாரம் புடை சூழ ரயில் ஏறுவதற்காக வாஷிங்டனில் உள்ள பொட்டாமக்-பால்டிமோர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். தன்னை வழி அனுப்புவதற்க்காக வந்த அமைச்சருடன் மும்மரமாக பேசிக் கொண்டு வந்த அவரை பெண்கள் கழிப்பறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டார். முதுகில் ஒரு குண்டு பாய்ந்து விலா எலும்பைப் பெயர்த்துக் கொண்டு வயிற்றில் போய் உட்காந்து கொண்டது.. மற்றொன்று கையில் பாய்ந்தது. ஜனாதிபதி பக்கத்தில் இருந்தவர் மீது ஜனாதிபதி சரிந்தார். அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள். காப்பாற்றி விட்டார்கள். அப்படித்தான் பலரும் நினைத்தார்கள். ஆனால் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக மூன்று மாதத்தில் இறந்து போனார்.

அவரை சுட்டவர் ஓர் எழுத்தாளர்.  துணை ஜனதிபதியாக இருந்த ஆர்தருக்குத் தேர்தல் வேலை பார்த்தவர். ஜேம்ஸ் இறந்து போனால், துணை ஜனாதிபதி ஆர்தர் பதவிக்கு வருவார். வந்தால் தனக்குப் பதவி தருவார் என்பது அவரது திட்டம். பாரீஸில் உள்ள் அமெரிக்க தூதரகத்தில் வேலைக்குப் போக வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் அவருக்கு ஃபிரஞ்ச் மொழியில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது!

ஜனாதிபதி ஜேம்சின் படுகொலை அமெரிக்காவில் கடும் விவாதத்தை எழுப்பியது. பதவிக்கு வரும் அரசியல்வாதிகள் சற்றும் தகுதி இல்லாத தங்கள் ‘செல்லப்பிள்ளைகளுக்கு’ப் பதவி தருவது நியாயமா என்ற கேள்வி எழுந்தது. செல்லப்பிள்ளைகளுக்குப் பதவி தரும் “spoils system” த்திற்கு பதிலாக திறமைக்கு முக்கியத்துவம் தரும் திறன் நாயகம் எனும் ‘மெரிட்டோக்ரசி’ (Meritocracy) முறை வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதெல்லாம் நடந்தது 1883ல்.

நம் நாட்டிலும் ‘செல்லப்பிள்ளை’ முறை இருக்கிறதா என நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அல்லது தலைமையை அல்ல திறமையைத் தேடுங்கள் என்று சொல்லும் கமலஹாசனிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்

ஆனால் எல்லா ஜனநாயக நாடுகளும் இந்தத் தகுதியைப் பின் தள்ளி செல்லப்பிள்ளைகளை முன்னிறுத்தும் பிரச்சினையை எதிர் கொண்டு வந்திருக்கின்றன.

“திறமையற்ற பலருக்குப் பதிலாக ஊழல்வாதிகள் சிலரைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து நிர்வாகத்தை ஒப்படைக்கும் முறைதான் ஜனநாயகம்” இதைப் படிக்கும் போது நம் ஊரை மனதில் வைத்துக் கொண்டு எழுதப்பட்ட வாசகம் போலத் தோன்றலாம். ஆனால் இதைச் சொன்னவர் வின்ஸ்டன் சர்ச்சில். ஆம். ஜனநாயகத்தின் தொட்டில் எனச் சொல்லப்படும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர்ச்சில்தான்.

ஜனநாயகத்தின் சிறப்புக்கள் சில. ஆனால் அதன் பலவீனங்கள் பல. எந்த நாட்டிலும் எல்லோரும் விரும்புவது நல்லாட்சி. ஆனால் அதை உருவாக்கும் தேர்தலில் களம் காணத் தகுதியுள்ள பலருக்கும் விருப்பமில்லை.அவர்களது திறமை வேறு எங்கோ அங்கீகரிக்கப்படுகிறது. அதில் ஊதியமும் கிடைக்கிறது. அதன் மூலம் சமூக அந்தஸ்தும், பாதுகாப்பும் கூடக் கிடைக்கிறது. நம்ம வேலையை நாம பார்த்துக்கிட்டு போவோம், நமக்கெதற்கு வம்பு? என்று அவர்கள் ஒதுங்கி விடுகிறார்கள். இதனால் ‘வேறு வேலை வெட்டி இல்லாத’ திறமை எங்கும் நிரூபிக்கப்படாதவர்கள் தேர்தல் களத்தில் இறங்கி அதிகாரத்தில் அமர்ந்து விடுவதுண்டு.

எந்த சமூகத்திலுமே அரசியல் அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர்கள் மக்கள் தொகையில் சிலர்தான். அதிகாரத்திற்கு ஆசையில்லாத பலரை ஆள்வதும் இந்தச் சிலர்தான்

அதே போல நிர்வாகத் திறமை கொண்டவர்களும் சிலர்தான். ஆனால் நாட்டின் நிர்வாகம் அவர்கள் கையில் இருப்பதில்லை. இழப்பு நாட்டுக்குத்தான்

எனவே ஜனநாயகத்திற்கு மாற்று திறன் நாயகம் (meritocracy) என சிலர் நினைத்தார்கள். சிங்கப்பூர் முன்னணித் தலைவர்கள் பலரும் அப்படித்தான் நினைத்தார்கள் ஏற்கனவே கடந்த அத்தியாயத்தில் சொன்னது போல அவர்களில் பலரும் எளிய குடும்பங்களில் பிறந்து கல்வி உதவித் தொகை பெற்று அயல் நாட்டில் படித்து நல்ல வேலைகளில் இருந்தவர்கள் என்பதால் திறமைதான் நமது செல்வம், நாட்டினுடைய செல்வமும் அதுதான் என்று நம்பினார்கள்

அந்தத் திறமைக்குக் காத்திருந்த சவால்களில் முக்கியமானது நாட்டின் பாதுகாப்பு

குடியரசாக மலர்ந்த சிங்கப்பூர் இரண்டு பெரிய நாடுகளிடையே ‘சிக்கி’க் கொண்ட குட்டித் தீவாக இருந்தது. ஒரு பக்கம் மலேசியா. கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து வந்தாயிற்று.இன்னொரு புறம் இந்தோனீசியா.. மலேயாவும் சிங்கப்பூரும் இணைந்து மலேசியாவாக ஆனதிலிருந்தே அது கறுவிக் கொண்டிருந்தது.

அப்போது இந்தோனீசியா சுகர்னோ ஆட்சியில் இருந்தது. அவர் சீனத்தோடும் வேறு சில கம்யூனிச நாடுகளோடும் இணைந்து ‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான் அணி’ ஒன்றை உருவாக்குவதில் முனைந்திருந்தார். மலேயாவையும் சிங்கப்பூரையும் இணைத்து ஒரே நாடாக்கியது அந்த வட்டாரத்தில் கம்யூனிசத்தை ஒழிக்க பிரிட்டீஷ் செய்யும் முயற்சி என அவர் கருதினார். அதை “நொறுக்குவேன்” என பகிரங்கமாகச் சபதமும் செய்திருந்தார். அதற்காக “ எதிர் கொள்” (ஆங்கிலத்தில் “Confrontation”, இந்தோனீசிய மொழியில் “Konfrontasi”) என்றொரு கொள்கைத் திட்டமும் வகுத்திருந்தார் அதனடிப்படையில் மிக அருகில் இருந்த சிங்கப்பூரில் சிவிலியன்களைப் போல ஊடுருவித் தாக்குதல் செய்ய முயற்சித்து வந்தார் (கஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவுவது போல)ஒரு குண்டு வெடிப்பை 1964ல் வெற்றிகரமாக செய்தும் காட்டியிருந்தார்.

சிங்கப்பூரும் மலேசியாவும் பிரிந்ததில் அவருக்கு மகிழ்ச்சி. ஆனால் சிங்கப்பூரைத் தனிநாடாக அங்கீகரிக்க வேண்டுமானால் அது மலேசியாவைச் சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் . அதற்கு சிங்கப்பூர் குடியரசு தயாரில்லை. அந்தக் கோபம் இந்தோனீசியாவிற்கு இருந்தது.

மற்றொரு புறம் அருகில் உள்ள இன்னொரு நாடான வியட்நாமில் அமெரிக்கா போர் நடத்திக் கொண்டிருந்தது.. அப்போது வியட்நாம் இரண்டாகப் பிரிந்திருந்தது. தெற்கு வியட்நாம் கம்யூனிசத்திற்கு எதிராக அமெரிக்கர்கள் ஆதரவில் இருந்தது. கம்யூனிச நாடான வட வியட்நாம் சீன, ரஷ்ய உதவியோடு அமெரிக்காவை எதிர்த்து தீரமாகப் போரிட்டுக் கொண்டிருந்தது.

சிறிய நாடுகள் பெரிய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுவிடும் அபாயம் நிலவிய காலம் அது.

இன்னொரு நெருக்கடியும் சிங்கப்பூருக்கு இருந்தது. இந்தோனீசியாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க, பிரிட்டீஷ் படைகள் சிங்கப்பூரில் முகாமிட்டிருந்தன. அந்தப் படைகளை மெல்ல மெல்ல 1970களுக்குப் பின் விலக்கிக் கொள்வதாக பிரிட்டன் உறுதியளித்திருந்தது.

ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக பிரிட்டனின் செலாவணியான பவுண்ட் செலாவணி விகிதம் குறைந்ததால் பலவீனமடைந்து பிரிட்டன் நிதி நெருக்கடியில் சிக்கியது. அதற்கு செலவைக் குறைக்க வேண்டிய கட்டாயம். அது 1970க்குள்ளாகவே தனது படைகளை விலக்கிக் கொள்ளப் போவதாகச் சொன்னது. “பிரிட்டன் தனது துருப்புக்களை விலக்கிக் கொண்டால் சிங்கப்பூரில் இருள் சூழும்” என பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்தன.

பிரிட்டன் படைகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் அன்று சிங்கப்பூரிடம் இருந்தது 1000 படைவீரர்கள் 50 அதிகாரிகள்தான்!  இரண்டு கப்பல்கள் மட்டும் கொண்ட தன்னார்வத் தொண்டர்களால் இயக்கப்பட்ட “கப்பல் படை” ஒன்றிருந்தது. விமானப் படை ஏதும் கிடையாது! படைவீரர்களில் பலர் மலாய் இனத்தவர். அவர்கள் மலேசியாவிற்குத் திரும்பிப் போக விரும்பி விலகல் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் விலகியும் சென்று விட்டிருந்தனர்

அண்டை நாடுகளோடு இறுக்கமான உறவு. சர்வதேச அழுத்தங்கள். மிக மிக மெலிந்த படை.

இவற்றைக் கொண்டு எப்படி நாட்டைப் பாதுகாப்பது? அந்தப் பெரும் பொறுப்பு இருவர் தலையில் விழுந்தது. அவர்களில் ஒருவர் தமிழர்.

அவர்கள்-

அது அடுத்த வாரம்

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these