யார் அந்தப் பத்துப் பேர்?

வீழ்வேன் என்று நினைத்தாயோ? -3

‘ஒரு கதவு மூடும் போது இன்னொரு கதவு திறக்கிறது, நாம்தான் கவனிப்பதில்லை’ என்பதை கிரஹாம் பெல் எந்த சந்தர்ப்பத்தில் சொன்னாரோ தெரியவில்லை ஆனால் அது பல நேரங்களில் சரித்திரத்தில் உண்மையாகவே நடந்திருக்கிறது.

காதல் திருமணத்தை அங்கீகரிக்காத தகப்பன், வீட்டை விட்டு வெளியே போ எனத் துரத்தியதைப் போல திடீரென்று மலேசியாவுடனான உறவு அறுந்து விட்டது. உறவு அறுந்த தம்பதிகள் முன் நிற்கும் பிரச்சினைகள் போல தேசத்தின் முன்னும் பிரச்சினைகள் நிற்கின்றன. “திகைப்பூட்டும், அச்சுறுத்தும் அளவில் பிரச்சினைகள் ‘ என்றெழுதுகிறார் சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி எனப் புகழப்படுபவரும், சிங்கப்பூரின் முன்னாள் நிதி அமைச்சருமான முனைவர் கோ கெங் ஸ்வீ. என்ன பிரச்சினைகள்?

1.உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்பு, 2.பொருளாதாரம் (முதலில் தாக்குப் பிடித்தல்,பின் வளர்ச்சி) 3.சமூக நல்லிணக்கம்

(இந்தியா விடுதலை அடைந்த போது நம் முன் நின்ற பிரச்சினைகளும் இவைதான். இவற்றை நாம் எப்படிக் கையாண்டோம் என்பது விவாதிக்கப்பட வேண்டும். விவாதிப்போம், தொடர் முடியும் போது)

இந்தப் பிரச்சினைகளை சமாளிக்க கைவசம் இருந்தது என்ன? பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள சிங்கப்பூரிடம் ராணுவம் கிடையாது. சிறிய தேசம் ஆதலால் பெரிய அளவில் ஒரு ராணுவத்தை உருவாக்கிப் பராமரிக்க இயலாது. நாடோ இயற்கை அரண் ஏதுமில்லாத, நாற்புறமும் கடல் சூழ்ந்த தீவு

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அந்தச் சின்னஞ்சிறு தீவில் பெரிதாக இயற்கை வளம் ஏதும் கிடையாது. நெடிதுயர்ந்த மரங்களோ, பரந்து அடர்ந்த காடுகளோ, நீண்ட நதிகளோ கிடையாது. கனிமவளம் கிடையாது. பெட்ரோல் கிடையாது. மலேயாவிற்கு இந்த வளங்களை ஆசிர்வதித்திருந்த இயற்கை சிங்கப்பூருக்கு அதிகம் உதவியிருக்கவில்லை மக்கள் தொகை அதிகம் இல்லை. சுமார் 18 லட்சம் பேர். (18,79,571) அவர்களில் பாதிப்பேருக்கு மேல் எழுத்தறிவு இல்லை.மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சேரிகளில் வசித்தார்கள். வறுமை பரவலாக இருந்தது. வேலை இல்லாதவர்கள் சராசரியாக 14 சதவீதம்

இத்தனை இல்லாமைகளுக்கு நடுவில் அவர்களிடமிருந்த ஒரு செல்வம், ஒரே ஒரு செல்வம் என்று கூடச் சொல்லுவேன், அவர்களது தலைவர்கள்.  எப்போதும் ஒரு கிரிக்கெட் டீமைப் போல வெள்ளைக் கால்சாராயும் சட்டையும் அணிந்து காணப்பட்ட அந்த பத்துப் பேர் – அவர்கள்தான் நாட்டின் முதல் அமைச்சரவை- அந்த நாட்டைத் தலைகீழாக மாற்றிக் காட்டினார்கள்.

இன்று சிங்கப்பூர் உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்று. சேரிகள் இல்லை. 99சதவீத மக்கள் சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள் (அங்கு ‘சொந்த வீடு’ என்பது 99 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தால் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது) வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை சராசரியாக 1சதவீதம்.

இந்த வெற்றிக்கான மகுடம் லீ க்வான் யூவிற்குச் சூட்டப்படுகிறது. சந்தேகமில்லாமல் வெற்றியின் முகம் அவர்தான். ஆனால் கனிகள் ஆடும் மரத்தைக் கண்ணுக்குத் தெரியாத வேர்கள் தாங்கி நிற்பது போல், அவருக்கு உற்ற துணையாக சுற்றி நின்றவர்கள் 9 பேர்.

உலகில் வேறு எந்தத் தலைவருக்கும் வாய்க்காத ஒரு நல்வாய்ப்பு லீ குவான் யூவிற்குக் கிட்டியது. அவரோடு சேர்ந்து சிங்கப்பூரைக் கட்டி எழுப்பியவர்களில் பலர் பதவிக்கு வரும் முன்னேரே அவருடைய நெருங்கிய நண்பர்கள். சிலரை அவர் அவரது கல்லூரி நாள்களிலிருந்தே அறிவார். அனேகமாக எல்லோரும் மெத்தப் படித்தவர்கள். அயல் நாட்டில் சென்று கல்வி பெறும் வாய்ப்புக் கிட்டியவர்கள். அங்கு கல்வியில் முன்னணி மாணவர்களாகத் திகழ்ந்தவர்கள். ஒவ்வொருக்குமே நாட்டிற்குத் தலைமை ஏற்கும் தகுதியும் திறமையும் இருந்தது. ஆனால் அவர்கள் லீயைத் தங்கள் தலைவராக ஏற்றார்கள். அந்த விசுவாசத்திலிருந்து கடைசி வரை அவர்கள் மாறவே இல்லை.

யார் அவர்கள்?

டாக்டர் தோ சின் சே. சிங்கப்பூர் குடியரசின் முதல் துணைப்பிரதமர். லீ யோடு சேர்ந்து மக்கள் செயல் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். அந்தக் கட்சியின் அமைப்பையும் அதன் கொள்கைகளையும் உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர். லீயை விட இரண்டு வயது மூத்தவர். மருத்துவர். உடலியலில் பி.எச்டி பட்டம் பெற்றதால் முனைவரும் கூட. லண்டனில் படிக்கும் போது அங்கு இருந்த மலேயன் ஃபோரம் என்ற மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர் (பின்னாளில் மலேசியாவின் பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான், சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ ஆகிய இருவரும் அப்போது அதில் உறுப்பினராக இருந்தார்கள்) லீயை சிங்கப்பூர் பிரதமராக ஆக்கியதில் மிக முக்கியப் பங்கு இவருடையது. 1959ல் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்ற போது யார் பிரதமராக ஆவது என்று கட்சியில் கடும் போட்டி நிலவியது. லீயும் அவரை எதிர்த்து ஆங் எங் குவானும் போட்டியிட்டனர். இருவரும் சமமான வாக்குகள் பெற்றனர். தலைவராக இருந்த தோ தன்னுடைய விருப்ப ஓட்டை லீக்கு அளித்தார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் லீ பிரதமரானார். லீயின் நம்பிக்கைகுரிய நண்பர் என்ற போதிலும் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிவதை எதிர்த்தவர்களில் இவர் முக்கியமான ஒருவர்.

டாக்டர் கோ கெங் ஸ்வீ: எளிய குடும்பத்தில் பிறந்து கல்வி உதவித் தொகை கிடைத்ததால், நம் மன் மோகன் சிங்கைப் போல, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். லீயை விட 5 வயது மூத்தவர். லண்டனில் மாணவராக இருக்குப் போதே, அங்கு படித்துக் கொண்டிருந்த லீ, தோ ஆகியோரின் நண்பராக ஆனவர். நிதி, பாதுகாப்பு, கல்வி ஆகிய முக்கிய துறைகளின் அமைச்சராக 20 ஆண்டுகாலம் பதவி வகித்தவர். சதுப்பு நிலமாகக் கிடந்த இடத்தில் தொழிற் பேட்டை அமைத்தது, கல்வியில் சீர்திருத்தங்கள் செய்தது ஆகியவற்றிற்காக நினைக்கப்படுபவர்.

சின்னத்தம்பி ராஜரத்தினம்:  தமிழர் என்பதைப் பெயரே சொல்லிவிடும். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தந்தை மலேயாவில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அங்கு இவருக்கு முன் பிறந்த இரு குழந்தைகள் இறந்து போனாதால் இடம் ராசியில்லை என்பதால் பிரசவத்திற்காக இவரது தாய் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்.சட்டம் படிக்க இங்கிலாந்திற்குப் போனார். ஆனால் முதல் உலகப் போர் காரணமாக அவருக்கு கிடைத்துக் கொண்டிருந்த உதவித் தொகை தடைப்பட்டது. பத்திரிகையாளராக ஆனார். ஸ்பெக்டேட்டர் பத்திரிகையில் சிறுகதைகள் எழுதினார். புகழ் பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்லின் அபிமானத்தைப் பெற்றதால் பிபிசியில் வேலை கிடைத்தது. லண்டனில் இருந்தபோது ஒரு ஹங்கேரியப் பெண்ணை மணந்து கொண்டார். ஆனால் இவரது தாயார் கடைசிவரை அவரை மருமகளாக ஏற்கத் தயாராக இல்லை. சிங்கப்பூரின் அயலகக் கொள்கைகளை வடிவமைத்ததில் முக்கியமானவர். ஆசியான் அமைப்புத் தோன்றக் காரணமானவர்

எட்மண்ட் வில்லியம் பார்க்கர்: பள்ளி மாணவராக இருந்த போதே சிங்கப்பூர் நாட்டு ஹாக்கி அணியில் இடம் பெற்றவர். இங்கிலாந்து அரசியின் கல்வித் தொகை பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து பாரிஸ்டர் ஆனவர். லீயின் சட்ட நிறுவனத்தில் பங்குதாரராகப் பணியாற்றியவர். சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். இவர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், வக்கீலாக பல கோடிகள் சம்பாதித்திருப்பார் என லீ ஒரு முறை கூறினார்.

இவர்களோடு ஆங் பாங் பூன், யாங் லின், லிம் கின்,ஜெக் யென் தாங், ஒத்மான் வோக் ஆகியோரும் சேர்ந்து லீயின் தலைமையில் நவீன சிங்கப்பூரை உருவாக்கினார்கள்.

இன்றைய சிங்கப்பூருக்கு அடித்தளமிட்ட இவர்கள் யாருக்கும் சிங்கப்பூரில் சிலை கிடையாது.அவர்கள் பெயரில் தெரு கூடக் கிடையாது! தனிமனித வழிபாட்டுக்கு சிங்கப்பூரில் இடம் இல்லை.

அது மட்டுமல்ல, முதுமை அடைந்த போது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்கள். ஓய்வு பெற்றவர்களில் சிலர் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி நிலையங்களிலும் கல்விப் பணிக்குத் திரும்பினார்கள். அரசு நிறுவனங்களின் மதியுரைஞர்களாக (advisors) வழிகாட்டினார்கள்

லீயும் அவரது அமைச்சர்கள் பலரும் அயல் நாட்டில் படித்தவர்கள் என்பது மட்டுமல்ல, படிக்கும் போது முதல் வகுப்பு, தங்க மெடல் என வாங்கி அசத்தியவர்கள். எளிய குடும்பங்களில் பிறந்து கல்வி உதவித் தொகை பெற்று முன்னேறியவர்கள். அதனால் சிங்கப்பூர் முன்னேற, டெமாக்ரசி (ஜனநாயகம்)யை விட ‘மெரிட்டோக்ரசி’ அவசியம் என நினைத்தவர்கள்

அது என்ன ‘மெரிட்டோக்ரசி’?

அது அடுத்த வாரம்

 

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these