இறங்கியது இடி

வீழ்வேன் என்று நினைத்தாயோ -1

ஆகஸ்ட் ஒன்பது 1965. பகல் பத்துமணி. வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சிகள் திடீரென ஒரு கணம் நிறுத்தப்பட்டன. அடுத்து ஒலித்தது ஒரு குரல். அது வெறும் அறிவிப்பாளரின் குரல் அல்ல.அது வரலாற்றின் குரல். ‘

‘’தற்சார்ந்தும், சுதந்திரமாகவும் வாழ மனிதருக்குள்ள பிரிக்க முடியாத உரிமையினால் இன்று முதல் மலேசியாவிலிருந்து பிரிந்து தனித்த இறையாண்மை கொண்ட, சுதந்திரமான, ஜனநாயகக் குடியரசாக மலர்கிறது சிங்கப்பூர்’’ என்ற லீ குவான் யூவின் அறிவிப்பு ஒலித்தது.

தன்னைத் தானே ஆண்டு கொள்கிற உரிமையை, ஒரு துளி ரத்தம் சிந்தாமல், எந்த விதப் போராட்டமும் இல்லாமல், ஒரு உயிரிழப்புக் கூட இல்லாமல் ஒரு தேசம் பெறும் போது அங்கே குதூகலமும் கொண்டாட்டமும்  தானே கரை மீறிப் புரளும்?

ஆனால்-

அறிவிப்பைக் கேட்ட தேசம் திடுக்கிட்டது.  திகைப்பில்  விக்கித்துப் போய் நின்றது. வெடிகள் இல்லை வேட்டுக்கள் இல்லை. வாணவேடிக்கைக் கொண்டாட்டங்கள் இல்லை. விருந்து கேளிக்கை ஏதும் இல்லை. திகிலும் திகைப்பும் தேசத்தைச் சூழ்ந்து கொண்டது. கண்ணீர் மல்க அறிவிப்பை வெளியிட்ட லீ க்வான் யூ யாரையும் சந்திக்காமல்,எவர் கண்ணிலும் படாமல், குடும்பத்தோடு சிங்கப்பூரின் புறநகர்ப் பகுதி ஒன்றில் மறைந்து கொண்டார்.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதன் காரணமாக, அது நாள் வரை மலேசியக் கூட்டமைப்பில் பெரும்பான்மைச் சமூகமாக வாழ்ந்த மலாய் இனத்தவர் திடீரென்று  அந்த முற்பகலில் சிறுபான்மையினராக மாறிப் போனார்கள். ஓராண்டிற்கு முன்னர்தான் (ஜூலை 21. செப்டம்பர் 2 1964 ) அவர்கள்  இரு முறை இனக்கலவரத்தைச் சந்தித்திருந்தார்கள் “ வரலாற்றின் எந்த ஒரு நிகழ்வையும் விட சிங்கப்பூர் வாழ் மலாய் இனத்தவரின் மனதில் நேர்ந்த கடுமையான அடையாளச் சிக்கல் மலேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த போதுதான் ஏற்பட்டது என்று கார்னல் பல்கலைக்கழகத்தில் சமர்பித்த தனது பி.எச்டி ஆய்வில் ஸ்டான்லி சாண்டர்ஸ் பெட்லிங்டன் என்ற ஆய்வாளர் எழுதுகிறார்.

தமிழர்கள் திகைத்துப் போனார்கள். மலேசியாவோடு அவர்கள் மனதால் நெருங்கியவர்கள். சிலர் அங்கிருந்து இங்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள் அவர்களது உறவினர்களும் நண்பர்களும் அங்கிருந்தார்கள். சிங்கப்பூர் தனி இறையாண்மை பெற்ற நாடாக மலர்ந்த மறுநாள் தமிழ் முரசு நாளிதழ் தனது தலையங்கத்தில் “மலேசியர் அனைவருக்கும் திகைப்பையும் வியப்பையும் அளித்தது“ என்று எழுதியது. இன்னொரு நாளேடான தமிழ் மலர் “திடீர் அரசியல் மாற்றத்தின் விளைவாக தங்களின் எதிர்காலம் பற்றிச் சிறுபான்மை மக்களிடையே காரணம் இல்லாத பீதி ஏற்படுவது இயல்புதான்” என எழுதியது.

சீனர்களும் மகிழ்ச்சியோடு இல்லை. இப்படி ஒரு நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கைக்கெட்டுகிற தூரத்தில் இருந்த இந்தோனீசியாவோடு முரண்பாடுகள் இருந்தது. அது ஒரு இஸ்லாமிய நாடு. அது மட்டுமல்ல, சிங்கப்பூரைச் சுற்றிலும் இஸ்லாமிய நாடுகள். அவற்றுக்கு நடுவே பல மதங்கள் கொண்ட சிங்கப்பூர். சில மாதங்களுக்கு முன்னர்தான் (மார்ச் 10 1965) சிங்கப்பூரின் புகழ் பெற்ற ஆர்ச்செட் வீதியில் அமைந்திருந்த ஹாங்காங் ஷாங்காய் வங்கிக் கட்டிடத்தில் இந்தோனீசியாவைச் சேர்ந்த இரு கடற்படை வீரர்கள் ஒரு டைம் பாமை வெடிக்கச் செய்திருந்தார்கள். அந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அது ஏதோ உதிரியான ஒற்றைச் சம்பவம் அல்ல. அதற்கு முன் 37 முறை சின்னச் சின்னதாய் குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு முயற்சி நடந்திருந்தது

தனக்கென பெரிய ராணுவம் இல்லாத ஒரு சிறு தீவு எப்படி எதிர்காலத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும், பொருளாதாரம் என்ன ஆகும் என்ற கவலைகள் எழுந்தன. சிங்கப்பூரில் பெருமளவு இயற்கை வளங்கள் இல்லை. மலேசியாவோ மலை, நதி, வனம், வயல், கடல் என எல்லா வளங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. ரப்பர் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் உலகில் முதல் இடம். அன்றைய சிங்கப்பூரில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. சிறு சிறு தொழிலகங்கள் அரும்பத் தொடங்கியிருந்தன. சொல்லிக் கொள்கிறார்போல்  இருந்ததெல்லாம் ஒரு துறைமுகம் மட்டும்தான்.

எதிர்காலம் என்ன என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்து நின்றது. “சிங்கப்பூரும் மலேசியக் கூட்டமைப்பும் ஒரே பொருளாதாரமாக இணைக்கப்பட்டால்தான் சிங்கப்பூர் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் செய்வது சாத்தியம்” என டாக்டர் கோ கெங் ஸ்வீ மீண்டும் மீண்டும் கூறி வந்திருந்தார். பொருளாதர நோக்கில் மட்டுமல்ல, மலேயாவுடனான இணைப்பு “வரலாற்றுத் தேவை” என ராஜரத்தினம் பேசியிருந்தார்

ஆனால் இனி இணைப்பு சாத்தியமில்லை. பேசியாயிற்று; கடிதங்கள் பரிமாறிக் கொண்டாயிற்று; அமைச்சர்கள் பத்துப் பேரும் கையெழுத்திட்டுப் பிரிந்து வந்தாயிற்று;பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டாயிற்று. இனி இணைப்பு சாத்தியமில்லை. சுயமரியாதையை விட்டுக் கொடுத்து மண்டியிட்டாலொழிய இணைப்பு சாத்தியமில்லை.

அதுதான் அந்த ஆகஸ்ட் 9ல் இருந்த மனநிலை. ஆனால் வீழ்ந்து விடவில்லை சிங்கப்பூர். உலகப் பரப்பில் ஒருவராலும் கவனிக்கப்படாத ஒரு சிறு புள்ளியாய், பெருங்கடல் நடுவே ஒரு மணல்திட்டாய் அதன் கதை முடிந்து போகவில்லை. சீனம் போல் புலியில்லை, இந்தியா போல் யானை இல்லை, அமெரிக்கா போல்  கழுகு இல்லை, என்றாலும் உலகால் புறந்தள்ளமுடியாத ஒரு சக்தியாகத் திகழ்கிறது இந்தச் சிட்டுக்குருவி.

இத்தனை நெருக்கடியிலிருந்து எப்படி எழுந்தது சிங்கப்பூர்?

இதற்கு ஒரு வரியில் விடை சொல்வதானால் சிங்கப்பூரிய உணர்வு (Singaporeaness)  என்பது ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’

அதுதான் என்ன?

(தொடரும்)

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *