சன்யாசமும் சிம்மாசனமும்

காவி உடை தரித்த ஒருவரது பெயர் உத்தரப் பிரதேச முதல்வர் பதவிக்கு முன் மொழியப்பட்ட போது வியப்பாலும் சினத்தாலும் பல புருவங்கள் உயர்ந்தன. துறவிகளுக்கு அரசியல் பதவியா என்ற ஆச்சரியக் குறிகள் முகநூல் பக்கங்களில் முளைத்தன.

‘நாடோடி மன்ன’னைப் பார்த்து விரல்களால் மூக்கை முறுக்கிப் பழகிய பால பருவத்தில், அந்தப் படத்தில் ஒரு சாமியாரை ‘ராஜகுருவாக’ப் பார்த்த போது, ‘முற்றும் துறந்தவருக்கு அரண்மனையில் என்ன வேலை? என்ற கேள்வி என் மூளையைப் பிறாண்டியதும் உண்டு

துறவிகளுக்கும் அரசியலுக்கும் ஏற்பட்ட சம்பந்தம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காந்தியாலும் காங்கிரசாலும் சுதந்திரம் வந்தது என்ற பாடப் புத்தக வரலாற்றைத் தாண்டி பார்வையச் செலுத்த முடிந்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

காந்திக்கும் முன்னால் சிந்தப்பட்ட ரத்தக் கறைகளை வரலாற்றின் பக்கங்களில் இப்போதும் பார்க்கலாம். இலக்கியத்திலும் கூட.

1770ல் நிகழ்ந்த ‘சன்னியாசிக் கலக’த்தை அடிப்படையாகக் கொண்டு பங்கிம் சந்திரர் எழுதி 1882ல் வெளிவந்த ‘ஆனந்த மடம்’ பிழையான பார்வை கொண்டது. ஆனால் பிழையான வரலாற்றை அல்ல ( சன்னியாசிக் கலகத்தில் மஜ்னு ஷா என்ற இஸ்லாமியரும் பங்களித்தார் என்பதைப் பற்றி ஆனந்த மடம் மெளனம் சாதிக்கிறது என்ற போதிலும் சன்யாசி கலகம் நடந்தது என்பது உண்மை).

அந்த ஆனந்த மடம் பலரைத் துறவின் பாலும் (சரியாகச் சொல்வதானால் பிரம்மச்சரியத்தை நோக்கி) அந்தத் துறவிகள் ஆயுதம் தாங்கி விடுதலைக்குப் போராடுவதை நோக்கியும் ஈர்த்தது.

ஆனந்த மடத்தைப் போல,ஆயுதம் ஏந்திப் போராட ரகசிய சங்கங்கள் நாடெங்கிலும் முளைத்தன. புனைவில் உருவான ஆனந்த மடத்தைப் போல் நிஜத்தில் ஒன்றை உருவாக்க அரவிந்தர் 1905ல் பவானி மந்திர் என்றொரு திட்டம் வகுத்தார். “புரட்சி நடவடிக்கைகளுக்கான கேந்திரமாக, ஒரு சமய அமைப்பை (அதுதான் பவானி மந்திர் -காளி கோயில்) மனித நடமாட்டமற்ற தொலைவில், ஓர் ஒதுங்கிய வனத்தில்கா நிறுவ வேண்டும். இது ஒரு அரசியல் சங்கத்தின் மையமாக விளங்க வேண்டும். இதில் சேர்பவர்கள் சன்னியாசிகளாகவும் இருக்கலாம்; அல்லது சன்னியாசிகளாக மாறாதவர்களாகவும் இருக்கலாம்; ஆயினும் அவர்கள் பிரம்மசரிய வாழ்க்கையையே நடத்தியாக வேண்டும்; அவர்கள் தமது குறிக்கோள் நிறைவேறிய பின்னால் மட்டுமே, இல்லற வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். அவர்களது குறிக்கோள் அன்னியராட்சியிலிருந்து விடுபடுவதுதான். இந்தியாவில் புரட்சிக்கான பாதையைத் தயார் செய்யக் கூடிய வீரர்கள் படையைக் கொண்ட அமைப்பை நிறுவுவதே மையக் கருத்து” என்று இந்தத் திட்டம் பற்றி அரவிந்தரின் நூலை அடிப்படையாக் கொண்டு வரலாற்றறிஞர் மஜூம்தார் கூறுகிறார் ( (History of the Freedom Movement in India-R. C. Mazumdar)

எழுதியது மட்டுமன்றி, அரவிந்தர் அமைப்பை உருவாக்கும் பணியில் தனது தம்பி பரீந்திரையும் ஈடுபடுத்தினார். பரீந்தர் வங்கத்தில் மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் அமைப்புகளைத் தோற்றுவித்தார்.

ரகசிய அமைப்புக்களை உருவாக்குவதில் ஈடுபட்ட இன்னொரு இளைஞர் விவேகானந்தரின் தம்பியான பூபேந்திர நாதர். அவர் அதற்காக யுகாந்தர் என்று ஒரு பத்திரிகையே நடத்தினார். ரகசிய சங்களுக்கான தேவை பற்றி அவர் “மாய்மாலப் பேச்சு எதுவும் இல்லாமல், “எது உண்மை? என்று மக்கள் மனம் விட்டுப் பேசுவதற்கு ஓரு ரகசிய இடம் தேவைப்படுகிறது. அது கொடுங்கோலன் பார்க்க முடியாத இடமாக இருக்க வேண்டும். ரஷ்யப் புரட்சிவாதிகள் தாம் இன்னது செய்ய வேண்டும் என்பதை விவாதிப்பதற்காக, ரகசியமான இடங்களில் நள்ளிரவில் சந்திப்பது வழக்கம். அவர்கள் இப்போதும் அவ்வாறே செய்து வருகின்றனர். பங்கிம் பாபுவும் தமது ‘ஆனந்த மடத்தில் வருணித்துள்ளதும் இத்தகைய விஷயம்தான். சன்னியாசிகள் நள்ளிரவில் அடர்த்தியான காட்டில் விடுதலைக்காக ஆயுதங்களைச் சேகரித்து வந்தனர்” எழுதுகிறார்

இந்து சந்நியாசிகள் மட்டுமல்ல, முஸ்லீம்களும் இது போன்ற அமைப்புக்களை உருவாக்கினர். வந்தே மாதரம் என்ற பாடல் நாட்டை ஒரு பெண்ணின் உருவமாக வர்ணிக்கிறது, நாங்கள் உருவ வழிபாடு செய்வதில்லை எனவே அந்தப் பாடலை ஏற்க முடியாது என்ற வாதங்கள், வந்தேமாதரத்தைத் தேசியகீதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைந்த அவையில் வைக்கப்பட்டன. ஆனால் 1906ல் பாரத மாதா சங்கம் ( Bharat Mata Society) என்ற அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர் அம்பா பிரசாத் என்ற சூஃபி துறவி. பஞ்சாபில் விவசாயிகளைத் திரட்டி கிளர்ச்சி செய்தவர். பிரிட்டீஷ் அரசு வேட்டையாடலைத் தொடங்கிய போது நேபாளத்திற்கும் பின் அங்கிருந்து ஆப்கானிஸ்தானம் வழி பலுச்சிஸ்தான் வந்து போராட்டத்தைத் தொடர்ந்தவர். இறுதியில் ஈரானில் 1915ல் பிரிட்டீஷார் அவரைச் சுற்றி வளைத்த போது தனது கைத்துப்பாக்கியால் அவர்களைச் சுட முயன்று பலனில்லாமல் அவர்களது துப்பாக்கிக்குப் பலியானார்.

பிரிட்டீஷார் மீது கெரில்லாத் தாக்குதல்கள் நடத்திய இன்னொரு சூஃபி துறவி நான் முன் குறிப்பிட்ட மஞ்சு ஷா. முகமது அபு தலீப் என்ற இயற் பெயர் கொண்ட இவர் முதல் இந்திய விடுதலைப் போருக்கு முன்னரே 1771ல் கிழக்கிந்தியக்கம்பெனிக்கு எதிராகப் போரிட்டவர். அந்தப் போரில் தோல்வி கண்டதால் ஒரு தர்காவில் சில காலம் ஒளிந்து வாழ்ந்து பின் 1773ல் சன்னியாசிகளுடன் இணைந்து தாக்குல்களை நடத்தினார். மறுபடியும் தோல்வி. அதன் பின் நேரிடையாகத் தாக்குவதை விட்டு கெரில்லாத் தாக்குதல்களுக்கு மாறினார். வெற்றி கிடைத்தது.1786ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் குண்டுகளுக்கு பலியானார்.

இந்தியாவின் நெடிய வரலாறு, தமிழ் நாட்டினுடையதும்தான் , துறவிகள் என்பவர்கள் காவி உடுத்தி, கையில் ஜபமாலை ஏந்தி, ராமா கிருஷ்ணா என்றோ, சிவாயநமவோம் என்றோ அரசியலில் இருந்து ஒதுங்கி வாழ்பவர்கள் அல்ல எனச் சொல்லி வந்திருக்கிறது.

சிவாய நமவோம் என்றிருந்த தமிழ்நாட்டுத் துறவி ஒருவர் அரசியலில் ஆர்வத்தோடு ஈடுபட்டு அதன் காரணமாக வழக்கை சந்தித்து நீதிமன்றத்தின் தண்டனைக்கும் உள்ளானார். அவர் குன்றக்குடி அடிகளார். (இப்போதிருப்பவர் அல்ல. அவரது ஆசான், அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள்)

1965 இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் போது, குன்றக்குடியில் ஊர்வலம் ஒன்றைத் தலைமை தாங்கி நடத்தினார். அதன் காரணமாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் அவரைக் கைது செய்ய ஆணையிட்டார். ஆனால் ரகசியம் கசிந்து விட, குன்றக்குடி அடிகளார். திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமின் பெற்றார். விஷயம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது. ஆர்.வி.சுவாமிநாதன் என்ற காங்கிரஸ்காரர் மூலம் பக்தவத்சலத்தைச் சந்தித்தார். வழக்கு திரும்பப் பெறப்படவில்லை. வழக்கில் அடிகளாருக்கு எதிராகத் தீர்ப்பு வந்தது. ரூ 350 அபராதம் விதிக்கப்பட்டது.

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் (1969) அவர் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதால் அவர் திமுக சார்பானவர் என்றொரு கருத்து பரவலாக நிலவியது. ஆனால் அவர் மடாதிபதியாகும் முன்னரே . தர்மபுரம் ஆதீனத்தில் கந்தசாமித் தம்பிரானாக இருந்த காலத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1948-49 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூரில் நடந்த மாவட்ட ஆணைய ( District board) தேர்தலில், நீதி கட்சிக்கு எதிராக, காங்கிரசிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டவர். ” “நமக்குக் காங்கிரஸ் மீது இளமையிலிருந்தே ஆர்வம். சுபாஷ் சந்திரபோஸ், பண்டித ஜவஹர்லால் நேரு ஆகிய தலைவர்கள் மீது பக்தியென்றே சொல்ல வேண்டும். . . .அன்று தொடங்கிய காங்கிரஸ்-அரசியல் ஈடுபாடு இன்று வரை குறையவில்லை. தலைவர் காமராசர் மூலமாக அரசியல் தேர்தல் ஈடுபாடு தொடங்கியது. அந்த ஈடுபாடு 1967ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தல் வரை நீடித்தது. தமிழ்நாடு முழுதும் தேர்தல் மேடைகளில் காங்கிரஸுக்காக- காமராசரின் தலைமைக்காக, வாக்குகள் கேட்ட காலம் பசுமையாக நினைவில் இருக்கிறது. 1967 பொதுத் தேர்தலில் காமராசர்தோற்றபிறகு அரசியல் தேர்தல் உலகிலிருந்தே விலகி விட்டோம்.” என்று அடிகளாரே எழுதியிருக்கிறார். (குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை)

அவர் மடாதிபதியாக இருந்த காலத்தில் குன்றக்குடி மடத்திற்கு எல்லா அரசியல் தலைவர்களும் -பெரியார், அண்ணா உட்பட- சென்றிருக்கிறார்கள். ஆனால் அதைவிட ஆச்சரியம் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவை, மாணிக்கவாசகர் பற்றியும் அப்பர் பற்றியும் உரை நிகழ்த்தச் செய்தது. “மார்க்சீயத்தின் எந்தெந்தக் கூறுகள் சைவத்திற்கு உகந்தவை என அடிகளாரும், சைவத்தின் எந்த எந்தக் கூறுகள் மார்க்க்சீயத்திற்கு உகந்தவை என ஜீவாவும் தேடித் தேடிச் சேகரித்துத் தத்தம் தத்துவங்களை செழுமைப்படுத்தினர்” என்று எழுதுகிறார் பொன்னீலன் (பொதுவுடமைப் பாலம் -பொன்னீலன்) மார்க்க்சீயர்கள் இன்று இதை மறந்திருப்பார்கள். அல்லது மறந்துவிட விரும்புவார்கள்.

திராவிட இயக்கத்தினரால் மறக்க இயலா வரலாறு பெரியாருடையது. பெரியாரின் முதல் பத்திரிகையான குடி அரசு இதழை 1925ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி தொடங்கி வைத்தவர் மழித்த தலையும், மார்பில் சிவலிங்கமும், நெற்றியில் நீறும், கழுத்தில் ருத்ராடசமும்,காவி உடையும் தரித்த சைவத் துறவி ஞானியார் அடிகள்.

வரலாறு புன்னகை செய்யும் இன்னொரு தருணம், நந்தனார் பாடசாலையைத் திறந்து வைக்க, சுவாமி சகஜானந்தா, பிரம்மஸ்ரீ கோபாலசுவாமி ஐயங்காரை அழைத்தது. தனது 17 ஆம் வயதில் துறவு பூண்டு, சிவப்பிரகாச சுவாமிகளிடம் தீட்சை பெற்ற சகஜானந்தா, 1926 முதல் 1932வரை சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். 1936 லிருந்து 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டார்.

துறவிகள் அரசியலில் கலப்பது என்பது இந்தியாவிற்கோ, தமிழகத்திற்கோ புதிது அல்ல. ‘சும்மா இருப்பதே சுகம்’ என்றிருந்தவர்கள் அல்ல அவர்கள்.

‘துறந்தபின் ஈண்டு இயற்பால பல’என்கிறது திருக்குறள். அதாவது துறந்தபின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

அரசியல் பதவிகளும்தான்.

அம்ருதா ஏப்ரல் 2017

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *