கனவு ராஜ்யம்

பீரங்கிச் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டுப் போனேன். இந்தியானாவே அதிர்ந்து குலுங்குவது போல் முழங்கியது பீரங்கி. ஆனிக் காற்று ஆடையை உருவிக் கொண்டு போய்விடாமல்   வேட்டியை வழித்துக் காலிடுக்கில் கவ்விக்  கொண்டு இந்தியானா கப்பலிலிருந்து எதிரே தெரிந்த தீவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்  கண்ணுக்கெட்டியவரை கடும் பச்சை.. நாற்றுப் பச்சை இல்லை. காட்டுப் பச்சை. வயல் போல் இல்லை, வனம் போல் தெரிந்தது.இந்தக் காட்டில் என்ன வியாபாரம் செய்யப் போகிறேன்? கவலையில் உள்ளங்கைகளை உரசிக் கொண்டேன். அது என் பழக்கம். எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை. கவலையோ சிந்தனையோ என்னை அரிக்கும் போது  உள்ளங்கைகள் ஒன்றையொன்று பற்றிக் கொண்டு உராய்ந்து கொள்ளும்.

“நாராயணா, நகரு!” என்று என்னை இடித்து ஒதுக்கிக் கொண்டு வடத்தை இழுத்துக் கொண்டு ஒடினார்கள். நங்கூரம் பாய்ச்சப் போகிறார்கள். துரையோடு சேர்ந்து நாமும் கரையிறங்கினால்தான் பிழைத்தோம். இல்லையென்றால் கப்பலோடு சேர்ந்து அல்லாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். நாளை மதியம் சரக்கு இறக்க வரும் போது நம்மையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போவார்கள்.

துரையைப் பார்க்க படியிறங்கிய போது, எதிரே துரையே ஏறி வந்து கொண்டிருந்தார். கறுப்புக் கால் சாரய், கறுப்புக் கோட்டு, கழுத்து வரை வெள்ளைச் சட்டை, பட்டாம் பூச்சி இறக்கை விரித்தார் போல் கழுத்தை இறுக்கின ‘போ’ என கச்சேரிக்குப் போகிற உத்தியோகஸ்த உடுப்புக்கு மாறியிருந்தார்.  ஏணியில் ஏறித் திரும்பின போது தங்கப் பொத்தான்களில் மாலைக் கதிர் பட்டுக் கண்ணைச் சீண்டின.  ராபிள்ஸ் துரையே பொன்னிறம்தான். கண்கள்தான் வெளிறிப் போன பாசிப்பச்சை. நீரோட்டம் ததும்பும்  அந்தக் கண்களும் ஜொலிப்பது போல் தோன்றியது எனக்கு. துரை உற்சாகமாக இருக்கும் போது அந்தக் கண்கள் ஜொலிக்கும். பார்த்திருக்கிறேன் பலமுறை.

“பிள்ளை! இங்கு என்ன செய்கிறாய்?” என்று வாஞ்சையோடு அழைத்து தோளில் கை வைத்து இந்தியானா முகப்பிற்கு அழைத்துச் சென்றார் துரை. என்னவோ தெரியவில்லை, வந்த சில நாள்களிலேயே துரைக்கு என்னைப் பிடித்துவிட்டது. ஆனால் அந்த வாஞ்சைதான் அடுத்தவர்களது வயிற்றெரிச்சலுக்கு   வார்த்த நெய். பொறாமையின் அனல் பொறுக்கமாட்டாமல்தான் பினாங்கிலிருந்து புறப்பட்டு விட்டேன்.

“பார்த்தாயா?” என்று கையை உயர்த்திச் சுட்டினார் துரை. அவர் காட்டிய திசையில் வெள்ளையில் சிவப்பு வரிகளோடிய கும்பெனி கொடி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. ” பார்த்தாயா, சிங்கப்பூர்! கோடீஸ்வரனாக நீ கொழிக்கப் போகும் பூமி!”

‘இந்தக் காட்டிலா? என்று எனக்குள் பொங்கிய கேள்வியை விழுங்கிப் புன்னகைத்தேன்.

பூரித்துப் பொங்கிய மகிழ்ச்சியில் பேசிக் கொண்டு போனார் துரை. “காற்றில் எழுதியதைக் கூட என்னால் படிக்க முடியும் பிள்ளை.எதிரில் தெரியும் அலைக்கரையில் என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? விரிந்து கிடக்கும் வனத்தின் ரகசியத்தை வாசித்துக் காட்டுகிறேன் கேள். இந்தத் தீவில்தான் எதிர்காலம் எழுதப்பட்டிருக்கிறது. உன்னுடையது மட்டுமல்ல, என்னுடையதும்தான், இருவரும் சேர்ந்து உருவாக்கலாம் ஒரு கனவு ராஜ்யம்!”

 

கனவின் விசையில் ஒளிர்ந்த கண்களை  ஒன்றும் பேசாமல் பார்த்துக் கொண்டு நின்றேன்.

மெளனத்தைப் பிளந்து கொண்டு மறுபடியும் முழங்கியது பீரங்கி. இந்த முறை கரையிலிருந்து. ஒருமுறை அல்ல. பதினேழு முறை. என்னையும் அழைத்துக் கொண்டு கரையிறங்கினார் ராபிள்ஸ் துரை. கீழே நின்றிருந்த வில்லியம் துரை விறைப்பாக ஒரு சலாம் வைத்தார். ரத்தச் சிவப்பும் வெள்ளை உடுப்பும் அணிந்த சோல்ஜர்கள், நீலம் தரித்த அதிகாரிகள், பொன்னிற ஆடை பூண்ட மேலதிகாரிகள் என அணிவகுத்து நின்றவர்களும் சல்யூட் வைத்தார்கள்.

கறுப்பாய், குள்ளமாய், உருண்டை முகமும், உதட்டில் சிரிப்புமாய் வேட்டி யில் வீசி நடந்து வரும் இந்தத் தமிழனைப் பார்க்க அவர்களுக்கு வேடிக்கையாத்தான் இருக்கும். எல்லோர் கண்ணிலும் ஒரு கேலி தொக்கி நின்றது. வில்லியம் துரை கூட என்னைத் திரும்பிப் பார்த்து பெரிய துரையிடம் ஏதோ பேசினார். யார் எனக் கேட்டிருப்பார் போல.

துரை என்னை அருகில் அழைத்தார். வில்லியம் துரைக்கு அறிமுகப்படுத்தினார். “இவர் பிள்ளை. நாராயண பிள்ளை. நேர்மையான வியாபாரி. கம்பெனிக்கு  மிகவும் தேவைப்படுவார். கவனித்துக் கொள்ளுங்கள்”

கடைசி இரண்டு வாக்கியத்தை அவர் வேண்டுமென்றே உரக்கச் சொன்னதாக எனக்குத் தோன்றியது.  அப்படியெல்லாம் இருக்காது. அதிரப் பேசுகிறவர் இல்லை துரை. ஆனால் அழுத்தமாகப் பேசுகிறவர்.துரைமார்களின் நாசூக்கு, நறுவிசு இதெல்லாம் நமக்கு வராது.

துரை கேம்புக்குள் போனதும் நான் தீவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். சுற்றிப் பார்க்க ஒன்றுமில்லை. நான்கைந்து அத்தாப்புக் கொட்டகைகள் இருந்தன. கும்பனிக்காரர்கள் தரையில் ஆப்பு அடித்து கித்தானில் போட்ட கொட்ட்கைகளும் இருந்தன. புழங்குகிற இடத்தில் மட்டும் புல்லையும் புதரையும் செதுக்கி சமதளப்படுத்தியிருந்தார்கள்.

“கருக்கிருட்டில சுத்திக்கிட்டு திரியாதேயும். காட்டுக்குள்ள புலியெல்லாம் இருக்கு” என்றான் ஒரு சிப்பாய் மலாய் மொழியில்.

“நிசமாவா?”

“சும்மா பயங்காட்டுதான். நரி ஓடும். அங்கிட்டு இங்கிட்டு  புதைசேறு  நிறைய இருக்கு. பார்த்துக்கிடும். நேத்திக்குக் கூட ஒத்தனை கயிறு போட்டு மீட்டோம்” என்றான் இன்னொருவன்.

இவன் பயங்காட்டறானா? தெம்பூட்டறானா? புதைசேறுக்கு புலிக்கதையே தேவலாம்.

அத்தாப்புக் கொட்டாயின் ஓரமா கித்தானை விரித்துப் படுத்தேன். தூக்கம் வரவில்லை. இருட்டில் ஏதோ ஒளிர்ந்து உருள்வதைப் போலிருந்தது. புலியின் கண்ணோ? உறுமல் கேட்கிறதா எனக் கூர்ந்தேன். சீச்சீ மின்மினிப் பூச்சி. ‘தாயே மாரியம்மா, இதென்ன சோதனை!. துரையை நம்பியா வந்தேன்? உன்னை நம்பித்தானே வந்தேன், இப்படி  நடுக்  காட்ல கொண்டாந்து இறக்கி விட்டியே!’

விடிஞ்சும் விடியாததுமாய், சங்கரன் செட்டி, ஹசன் காக்கா, அவுக ஆளுங்க, நம்ப ஆளுங்கனு ஏழெட்டுப் பேர் சட்டியும் பொட்டியுமா வந்து சேர்ந்த பிறகு கொஞ்சம் தெம்பு வந்தது. ஆனால் வந்தவர்கள் வாயைத் தொறந்து மனசைக் கொட்டின போது மறுபடியும் கவலை வந்து கையைப் பிறாண்டியது.

“பிள்ளைவாள் பூராவும் காடாயிருக்கே! பாத்தீங்களா?” என கோயிந்தசாமிதான் முதல்ல பேச்சை ஆரம்பித்தார்.

“ம்,ம்”

“இங்கே என்னத்தை வியாபாரம் பண்றது ?” என்று தொடர்ந்தார் கிருஷ்ணன் செட்டி.

“காரணம் இல்லாமியா கம்பெனிக்காரன் கொட்டகை போட்டிருக்கான்?”

“அவன் கதை வேற.கப்பல் கப்பலா வியாபாரம் பண்றவனுக்கு ஈடு சோடா நம்மை நினைச்சிக்கிற முடியுமா?”

“ம்ம் அதுவும் சரிதான்!”

” சரிதான் சரிதானு தலையை ஆட்டிக்கிட்டு இருந்தா எப்படி? என்ன செய்ய இங்கே?”

நான்   உள்ளங்கைகளை உரசிக் கொண்டுமெளனம் காத்தேன். எனக்கும்தான் விடை தெரியவில்லை.

“இருநூறு சோல்ஜர் இருப்பான இங்கே?” என்றார் ஹசன் பாய்.

“அவ்வளவு இருக்காது. முன்னப் பின்ன போனா நூறு இருக்கலாம்”

“எதுக்கு இந்தக் கேள்வி? அவங்களுக்கு ஆக்கிப் போடலாம்னு நினைக்கிறீரோ?” கிருஷ்ணன் செட்டியின் கேள்வியில் இருந்த கேலி ஹசன் காக்காவைச் சுட்டிருக்க வேண்டும். காக்கா கும்பெனிக்கு இறைச்சி விற்றுக் கொண்டிருந்தவர்

“நீர் வேணா அவங்ககிட்ட லேவாதேவி நடத்துமே!” என்றார் அவர்  பதிலுக்கு சுள்ளென்று.

“எகத்தாளத்தைப் பாரு!. பட்டாளத்துக்காரன்கிட்ட பணத்தைக் கொடுத்திட்டு  திரும்ப வாங்கவா?”

“ஆனையைக் கொண்டு வந்து நிறுத்தும்,  கரும்பைக் கொடுத்து  மீட்டெடுக்கிறேன் பாரு என்று சவுடால் விடற  ஆளாச்சே நீ!”

பேச்சின்  போக்கு போகும் திசை  எனக்குப் பிடிக்கவில்லை. நான் ஹசன் காக்காவைப் பார்த்தேன். அவர் வாயை மூடிக் கொண்டார். ஆனால் கோவிந்த சாமி அடுத்த அம்பை எய்தார்.

“கம்பெனிகிட்ட வியாபாரம் செய்யலாமுனு கூட்டிட்டு வந்துட்டு இப்படிக் கழுத்தறுட்டியே! குழி வெட்டி இறக்கினா பரவாயில்லை. புதை சேத்துல இறக்கிட்டியே!”

புதை சேறு!

நேற்றுப் பார்த்த உற்சாகத்தோடு இன்றும் இருந்தார் துரை. நான் பேசத் தயங்குவதைப் புரிந்து கொண்டு அவரே கேள்வியைத் தொடுத்தார்.

“என்ன பிள்ளை! எப்ப வியாபாரத்தை ஆரம்பிக்கப் போறே?”

“ஆளே இல்லாத ஊர்ல என்னத்தை வியாபாரம் செய்வேன் நான்?”

ராபிள்ஸ் சிரித்தார். ஹாஸ்யம் கேட்டது போல கடகடவென்று சிரித்தார். “கதை சொல்றேன் கேக்றீரா?”

வழிகேட்டு வந்தால் கதை கேட்கச் சொல்கிறார் துரை.

“ஒரு தீவு. அது முழுக்க பழங்குடி மக்கள்” என் பதிலுக்காக காத்திருக்காமல் கதையை ஆரம்பித்தார் துரை. “ஒருத்தனும் துணி கட்றதில்லை. உன்னை மாதிரி இரண்டு துணி வியாபாரி தீவுக்கு வந்தான். ஊர்ல  எவனும் துணி கட்றதில்ல, இங்கே நான் எப்படி வியாபாரம் செய்வேனு ஒருத்தன்  தலையில கையை வைச்சுக்கிட்டு உட்கார்ந்திட்டான். இன்னொருத்தன், அட, அத்தினி பேரையும் துணி கட்ட வைச்சா எவ்வளவு விற்கலாம்னு கணக்குப் போட ஆரம்பிச்சான். நீ எப்படி?” என்றார் சிரித்துக் கொண்டே. “வெள்ளைக்காரன் வியாபாரம் இதுதான்” என்று தன் தோலைச் சுண்டிக் கொண்டே சொன்னார்.  ”சந்தையில் விக்காதே. சந்தையையே வித்திரு”  

சற்று மெளனித்து புரியுதா? என்றார்.

நான் மலங்க மலங்க விழித்தேன்.

” மாறாதே! மாத்து. போற இடத்தை உனக்குத் தகுந்தாப்ல மாத்து! ஊரை மாத்து, பேச்சை மாத்து, ஆளை மாத்து, அப்புறம் உலகம் உனக்குத்தான்”.

“ஆளில்லாம, எப்படி?……” நான் என் பழைய பல்லவியை ஆரம்பித்தேன்

“ஆளைக் கொண்டுவா! காட்டைப் பார்த்தீல. இன்னிக்குக் காடு. நாளைக்கு எல்லாம் கட்டிடம். உன் துணி மூட்டையைத் தூக்கிப் போடு. கட்டிடம் கட்டு. கொத்தனார், ஆசாரி எல்லாரையும் கூட்டிக்கிட்டு வா!” என்றபடி எழுந்து கொண்டார் துரை.

என்னைத் திட்டிக் கொண்டே எல்லோரும் திரும்பிப் போனார்கள். சங்கரன் செட்டியும் ஹசன் காக்காவும் என்னை நம்பி இருக்கத் தீர்மானித்தார்கள். ஊருக்குத் திரும்பியவர்களிடம்  சித்தப்பாவிற்கு கட்டிட வேலைக்கு ஆள் அனுப்பும்படி கடிதம் கொடுத்து அனுப்பினேன்.

ஆற்றோரம் இருந்த சேறு அப்படி ஒன்றும் புதை சேறாக இல்லை.சட்டி பானை செய்கிறார் போல் வெண்ணைக் களிமண்ணாய் இருந்தது. நான் சட்டி பானை செய்யவில்லை.சூளை  போட்டு செங்கல் அறுத்தேன்.  கனவு ராஜ்யம் கட்டிடம் கட்டிடமாய் முளைத்துக் கொண்டிருந்தது. கல்லுக்கு நல்ல கிராக்கி. கம்பெனி எனக்கு காட்டை அழிக்கும் காண்டிராக்ட்டும் கொடுத்தது. மரம் வெட்டவும், வெட்டின மரத்தை  அறுத்து பலகை, உத்தரம், நாற்காலி பண்ணவும் ஆள் போட்டேன்.

ஊருக்குப் போகும் முன் ராபிள்ஸ் துரை கூப்பிட்டு அனுப்பினார். ” நான் நினைக்கிற வேகத்திற்கு கட்டிடம் வரமாட்டேங்குதே! என்ன செய்யலாம் ” என்றார். நான் என்ன செய்யட்டும்? கல்லுதான் நான் கொடுக்கிறேன், கட்டற வேலையை கம்பெனி சோல்ஜர்ல செய்யறான் என்று நான் சொல்லவில்லை, நினைத்துக் கொண்டேன்.  என்னை நோக்கித் திரும்பி,  சட்டென்று, “நீ கட்டிடம் கட்டுவியா?” என்றார்.

கண நேரம் திகைத்துப் போனேன். நானா? தறியில் துணியறுத்து முழம் போட்டு விற்றவனை கல்லறுத்துக் காசு பார்க்கும்படி கடைக்கண் காட்டியவள் மகமாயி. அவள்தான் இந்தக் கட்டளையையும் அனுப்பியிருக்கிறாள் என்று அடிமனசு சொல்லியது. “ஐயா கட்டளைப்படியே ஆகட்டும்!” என்றேன்.

வேலை எங்கே சுணங்குகிறது என்பது எனக்கு இரண்டு வாரத்தில் விளங்கி விட்டது. கட்டுமானப் பொருட்களை எடுத்துப் போவதில்தான் காலதாமதம் ஆகிறது என்பதைக் கண்டுகொண்டேன். தலைச்சுமையாய் எத்தனை ஆள் எடுத்துப் போனாலும் வேலையோட வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பனி பெய்து  குடம் நிறையுமா?

யோசித்துக் கொண்டே கடற்கரைக்கு வந்தேன். மீனவர்கள் படகைக் கடலுக்குள் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அட! ஆற்றில் படகு விடலாமே என்ற யோசனை அப்போதுதான் உதித்தது.

உசரமும் தாட்டியுமா இருந்த நாலைந்து மரங்களை அறுத்து தெப்பக்கட்டை மாதிரி  ஒன்று செய்தோம். கல்லை ஏற்றினோம். முதல் முறை ஏற்றினதும் முழுகிப் போனது. மீனவ நண்பர்கள் வந்து கனமேற்றினாலும் கட்டையை மிதக்கச் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தார்கள்.  ஆற்றில் கல்லு வருவதை வேலைக்காரர்கள் அதிசயமா பார்த்தார்கள். வெள்ளைக்கார எஞ்சினீர் பிலிப்  கூப்பிட்டு ஏதோ இரண்டு வார்த்தை சொன்னார். பாராட்டாத்தான் சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன். முகத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றியது.

கட்டிட வேலை கடகடவென்று  நடந்தது. களிமண்ணுக்கும் காசில்லை. காட்டு மரத்திற்கும் காசில்லை. இரண்டிற்கும்  ஆட் கூலிச் செலவுதான். அதனால் கட்டிட வேலையில் கொஞ்சம் காசு கையில் மிஞ்சியது . ஆனால் ஆள் தேவைப்பட்டது. ஹசன் காக்கா ஊருக்குத் திரும்பி, அங்கிருந்து ஆள் பிடித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஆள்  வரத்து அதிகமானதும் அவங்களுக்குத் துணித் தேவை ஏற்பட்டதை கவனித்தேன் பழைய தொழிலையும் ஆரம்பிச்சிரலாமானு கை பரபரத்தது. வில்லியம் துரை முயற்சியில் ஒரு பஜார் உருவாகியிருந்தது. நானும் ஒரு இடம் பிடித்தேன். கம்பெனிக்காரனுக்குக் கல்லுல கட்டிடம் கட்டினவன் கடையையும் கல்லில் கட்டியிருக்கலாம். ஆனால்  நாலுபுறம் பலகை அடைத்து, அத்தாப்புல கூரை போட்டு  கடை ஓன்று ஆரம்பித்தேன்.   ஆத்தா மகமாயி வேற கணக்குப் போட்டிருக்கிறாள் என்பது  அப்போது  எனக்கு விளங்கவில்லை.

காலையில் சூளையில் நிற்பேன்.. பசியாறிக் கட்டிட வேலையைப் பார்க்கப் போவேன். கட்டைத் தொட்டிக்குப் போய்ப் பார்த்து விட்டு, கடையில் போய் உட்காருவேன். இரை தேடற எலி மாதிரி சுற்றிக் கொண்டே  இருந்தேன். கஷ்டப்பட்டது வீண் போகலை. காசு வந்தது.

பினங்கிலிருந்து வந்த காக்கா பிரமிச்சுப் போனார். “புதை சேற்றில இறக்கிட்டியேனு உன்னை ஒருத்தன் வஞ்சிட்டுப் போனான். களிமண்ணை காசாக்கி காண்பிச்சிட்டீரே! பிள்ளை, உனக்கு ஞாபகம் இருக்கா? கம்பனிகாரன் கப்பல் கப்பலா வியாபாரம் செய்யறான்.நமக்கு வக்கு இருக்கானு கேட்டான்ல, கோயிந்தசாமி”

“மறக்கமுடியுமா? புண் ஆறிடுச்சு, தழும்பு இருக்கே!”

“நீ ஏன் கப்பல் வியாபாரம் செய்யக் கூடாது?”

“கம்பனியோட மோதக் கூடாது காக்கா. விதை நெல்ல பொங்க முடியுமா?”

“அப்படிச் சொல்வேனா? உன்னை உப்புத் துரோகம் செய்யச் சொல்லி ஒரு நாளும் சொல்ல மாட்டேன்”

“பின்னே?”

“சின்னக் கப்பலைப் பிடிப்போம். கப்பல்னா கப்பல் இல்லை.வள்ளம். உனக்கு மட்டும் துணியை ஏத்தி கொண்டாந்து விப்போம்”

“வள்ளமளவுக்கு  சரக்கு கொள்முதல் செய்ய நம்மிடம் காசு வேணுமில்ல?”

“செய்யலாம் பிள்ளை. கடனுக்கு சரக்கு கிடைக்கும்”

“கடனா? வேண்டாம் காக்கா!”

“கம்பனிக்காரனே கடனுக்கு வியாபாரம் செய்றான், தெரியுமா?”

“தெரியும் நானே கை மாத்தா கொடுத்து வாங்கியிருக்கேன்”

“பின்ன என்ன?”

“வேணாம்”

காக்காவால் மாற்ற முடியாத என் மனதை கம்பெனிக்காரர்கள் மாற்றினார்கள். சொந்த முதலீட்டைக் கொண்டு மட்டும் வியாபாரம் செய்தால்  சுருங்க்கிப் போய் சூம்பிப் போய் விடுவாய் என பயம் காட்டினார்கள்.  கடன் வாங்கி கடன் வாங்கித்தான் கம்பெனி  உலகம் பூராம் கடை போட்டது  என்று கதை சொன்னார்கள்.  நீ சூரியன் ஆக வேண்டாம்,  சந்திரன் ஆக வேண்டாம் நட்சத்திரமாக ஏன் ஆகக் கூடாது என அவர்கள் ஆசை காட்டிய போது எனக்கும் சபலம் தட்டியது.

அது ஒன்றும் மோசமான முடிவில்லை. அவர்கள் கடனுக்குச் சரக்குக் கொடுத்தார்கள். தவணை தப்பாமல் கடனைக் கட்டுவது அத்தனை கடினமாயில்லை. கடையைப் பெரிசு பண்ணினேன் .மாரியம்மன் கருணையால் காலப் போக்கில் அந்த வள்ளத்தையும் சொந்தமாக வாங்கி விட்டேன்.

வாழ்கையில் வாங்க முடியாதவையும் சில உண்டு என்பதை எனக்குப் புரிய வைத்தவன் மார்கன். அயர்லாந்திலிருந்து வந்து இறங்கினான்.சரக்குகளோடு மட்டுமல்ல, அகந்தையோடும். கடைவீதியில் அவனைக் கண்டால் மிரண்டார்கள். காரணம் அவனது சரக்குகள் அல்ல. காசு.  கடன் கேட்டவருக்கு இல்லை எனச் சொன்னதில்லை. கழுத்தில் துணியைப் போட்டுக் கடனை வசூலிக்காமலும் இருந்ததில்லை. அமில வார்த்தைகளில் பேசுவான். ஆனால் ஆள் பார்த்து பணம் கொடுப்பதில் அவனைப் போல கெட்டிக்காரன் எவனும் இல்லை. மார்கனே   கடன் கொடுக்கிறான் என்றால் வாங்கினவன் வசதியான புள்ளி என்று பஜாரில் பேச்சு.

என் கிரகக் கோளாறு, என் விதியின் கோணல் எழுத்து,  வாங்கிய சரக்குக்கு தவணை தள்ளிப் போடமுடியாத ஒரு தருணத்தில் நானும் அவனிடம் கை நீட்டிவிட்டேன்.” எடுத்துக் கொள்ளுங்கள் பிள்ளை, சுழலுக்கிற பணத்திற்குத்தான் மதிப்பு. உறங்குகிற பணம் ஒரு சவம். என் பணம் உங்கள் வியாபாரத்தில் சுழலட்டும்.  கடைத் தெருவில் நீர் காலடி எடுத்து வைத்தால் கையெடுத்துக் கும்பிடாதவன் யார்? நீர் ஒரு நேர்மையான வியாபாரி எனக் கம்பெனியே சொல்கிறதே, பென்கூலன் கவர்னர் வந்திறங்கிய நாளிலேயே அப்படிச் சொல்லித்தான் அறிமுகப்படுத்தினாராமே, எடுத்துக் கொள்ளுங்கள், என் காசில்லை இது உங்களுடையது” என்று இனிப்பாகப் பேசித்தான் கொடுத்தான். “வட்டியை மட்டும் தவறாமல் கட்டிவிடுங்கள், நானும் பிழைக்க வேண்டுமில்லையா ?” என்று சிரித்தான். அவன் சிரிப்பில் நெருப்பு இருந்தது.

“நெருப்பு! நெருப்பு!” என வேலைக்காரன் என்னை உசுப்பிய போது இரண்டாம் ஜாமம் கடந்திருந்தது. நெகிழந்து கிடந்த வேட்டியை நெருக்கிக் கட்டிக் கொண்டு எழுந்து ஓடினேன். கடை வீதி முனை திரும்பும் போதே , மார்கழிப் பனிக்கு  நடுவிலும் கண்ணில் ஜூவாலை   தெரிந்தது. பனை உயரத்திற்குப் பற்றி எரிந்து கொண்டிருந்தது என் கடை.   கடையை  நெருங்க முடியவில்லை. அனல் வீசியது.”மகமாயி!” எனக் கையைத் தலையில் வைத்துக் கொண்டு குந்தினேன். அப்படி சரிந்தேன்.

என் முகத்தில் ஈரம் பட்டதும் இமைகள் திறந்தன. அதற்குள் எல்லாம் முடிந்திருந்தது. கடையில் பற்றிய தீ காற்றில் பரவ ஆரம்பித்ததாம். பஜார் பற்றி எரிகிறது என்ற செய்தி எட்டியதும் கம்பெனி துரைமார்கள் சோல்ஜர்களைக் கூட்டி வந்து, மனிதச் சங்கிலி அமைத்து, ஆற்றிலிருந்து வாளி வாளியாய் நீர் மொண்டு வீசித் தீயை அணைத்தார்களாம்.

 மெல்லக் கடையை நோக்கி நடந்தேன். கடை அல்ல, கரிக் கட்டை. அத்தாப்புக் கூரை அனல் கூடாய் சரிந்து துணிகள் மீது விழுந்து அங்கிருந்து பலகைச் சுவருக்குப் பாய்ந்து அத்தனையும் பஸ்பமாகிக் கிடந்தது. ஏதாவது மிஞ்சுமா என  என் வியாபாரி மூளை அந்த நேரத்திலும் அடியில் கிடந்த துணிப் பொதியைப் புரட்டிப் பார்த்தது.கரி படிந்து சொத சொதவென்று நனைந்து, சேற்றுக் கறையோடு கிடந்ததைப் பார்த்த போது கண்ணீரில் நான் வெந்தேன்.

எரிந்தது அத்தனையும் கடனுக்கு வாங்கிய சரக்கு. கடன்காரர்களுக்கு என்ன பதில்  சொல்வேன்? எப்படிப் பணம் கொடுப்பேன். கடையில் அவிந்து விட்ட தீ மூளையில் பற்றிக் கொண்டது.  கால்கள் நடந்தன. மனம் கடையில் கிடந்தது. கடனில் கிடந்தது. மனதில் மார்கன் முகம் வந்து போனது.

மார்கன் வந்தான் மறித்துக் கொண்டு நின்றான். “எப்படி கொடுக்கப் போகிற?” என்று தோளில் கை வைத்தான். அது நாள் வரை அவன் என்னைத் தொட்டுப் பேசியதில்லை.

“வட்டியைத் தவறாமல் கொடுத்து விடுகிறேன் துரை!” என்றேன்

“வட்டியில்லை, அசலைத் திருப்பிடு” என்றான். இடிந்து  போனேன் நான்

“அசலையா? இப்போது எப்படிக் கொடுப்பேன்?” ஈன ஸ்வரத்தில் என் குரல் பிசிறியது.

“வள்ளம் வச்சிருகேல, ராத்திரி  நீ ஓடிப் போயிட்டா? நான் ……தா?” என்று ஒரு கெட்ட வார்த்தை சொன்னான்.

எனக்குத் தோணாத யோசனை அது. ஓடிப் போவதென்றால் கோயிந்த சாமியும் கிருஷ்ணன் செட்டியும் ஊருக்குத் திரும்பின அன்றே நானும் ஓடியிருக்கலாம். ஒரு வார்த்தை, துரை சொன்ன ஒரு வார்த்தை -கனவு ராஜ்யம்- அதில் கட்டுண்டு கிடக்கிறேன். அது இவனுக்குத் தெரியுமா? இவனுக்கு கனவுண்டா? கனவில் பங்குண்டா?  வெள்ளைக்காரனின் கனவு ராஜ்யத்தைக்  கல் கல்லாய் கட்டி  எழுப்பியதில் இந்தக்  கறுப்பனுக்கும் பங்குண்டு என்பது இவனுக்குத் தெரியுமா?  

‘இந்தத் தீவில்தான் எதிர்காலம் எழுதப்பட்டிருக்கிறது. உன்னுடையது மட்டுமல்ல, என்னுடையதும்தான்,’

“அப்படியெல்லாம் ஓடிட மாட்டேன் துரை!”

“நம்ப மாட்டேன், வள்ளத்தை எழுதிக் கொடு. ஒரு வருஷம் தவணை, இரண்டாயிரம் பவுன் கொடுத்துட்டு மீட்டுக்கோ”

மார்கன் அளவிற்கு மற்றவர்கள் மூர்க்கமாயில்லை. தவணை கொடுக்கத் தயாராக இருந்தார்கள். வியாபரத்தில் சம்பாதிக்க வேண்டியது காசு மட்டுமல்லை நாணயமும்தான் என்பதை எரிந்து போன கடை எனக்கு உணர்த்தியது.

கடை போனபின் களிமண்ணே கதி என்றிருந்தேன். அதுதான் ஆத்தா எனக்கு அருளியது. அதைப் புரிந்து கொள்ளாமல் நான்தான் எதற்கோ ஆசைப்பட்டுவிட்டேன்.

கடையில் உட்கார்ந்தவன் களிமண  மிதித்துக் கொண்டிருப்பதை ஏளனமாகப் பார்த்துக் கொண்டு போனவர்களைப் பார்த்து நான் மனதிற்குள் சிரித்தேன். மண்ணையா மிதிக்கிறேன். மார்க்கனின் கெட்டவார்த்தையை மிதித்துப் பிசைந்து கொண்டிருக்கிறேன். இரண்டாயிரம் பவுனை அவன் முகத்தில் வீசி எறியாமல் இந்த நேர்மையான வியாபாரி இறந்து விடக் கூடாது என்பதற்காக மண்ணை மிதித்துக் கொண்டிருக்கிறேன். அடிமைகளுக்கு  கனவு ராஜ்யங்கள் இல்லாமல் இருக்கலாம் . ஆனால் கனவுகள் இருக்கக் கூடாதா?

‘அடிமை தெண்டனிட்டு எழுதிக் கொள்வது.. உங்களை நம்பித்தான் இந்தத் தீவுக்கு வந்தேன் உன் எதிர்காலம் இங்கேதான் இருக்கு பிள்ளைனு ஒரு வார்த்தை சொன்னீங்களே அதை நம்பித்தான் இங்கே வந்தேன். என் எதிர்காலம் எரிஞ்சு  போச்சு. உங்க கனவு ராஜ்யம் உருவாகிட்டு இருக்கு. இந்த அடிமை மீது கண் வையுங்க. எனக்குத் தேவை 2000 பவுன். ஒரு மூர்க்கனிடம் கடன் பட்டுட்டேன். காசு கிடைச்சா வீசி எறிஞ்சிட்டு மூச்சை விட்டுருவேன். நேர்மையான வியாபாரி ஏமாத்திட்டுச் செத்தான்  என்று இந்த அடிமை மேல எதிர்காலத்தில பேச்சு வரக்கூடாது. துரை கண் திறக்கணும்.’ கடிதம் மேல கடிதம் போட்டேன். கல்லைக் கிணத்தில போட்ட மாதிரி இருந்தது.

துரை மறந்துட்டார்னு  நினைச்சேன்.ஆனா ஆத்தா மறக்கல. மண்ணை மிதித்துக் கொண்டிருந்தவன் மீது மகமாயி கண் திறந்தாள். எதிர்பாராம ஒரு நாள்  எஞ்சினியர்  பிலிப் துரை கூப்பிட்டு அனுப்பினார்.  ஆற்றின் மீது பாலம் கட்டப் போறேன், கல்லு தருவியானார். ஆள் இருக்கா உனக்கு என்று கேட்டார். நான் இருக்கேன்னு ஒரு வார்த்தைதான் சொன்னேன். சிரிச்சுக்கிட்டே  கல் அனுப்ப உத்தரவு போட்டார்.  அது அவர் போட்ட உத்தரவில்லை. ஆத்தா போட்ட உத்தரவு.

ஆறு மாசத்தில காசு சேர்த்துக் கொண்டு  மார்கனைப் பார்க்கப் போனேன். ‘வள்ளத்தை மீட்க வந்தியானு’ கேட்டான். ‘மானத்தை மீட்க வந்தேன்னு’  ஒரு  வார்த்தை வாய் வரை வந்தது. சொல்லலை. முழுங்கிட்டேன். வியாபாரி -அதுவும் நொடிச்சுப் போன வியாபாரி- அதிகம் பேசக் கூடாது.

கடனைத் திருப்பினதும் மூச்சைப் பிடித்துக்  கொண்டு முதுகில் சுமந்திருந்த பாரத்தை இறக்கி வைச்ச மாதிரி இருந்தது. முதுகில் இல்லை, நெஞ்சில் சுமந்த பாரம்.

ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஆற்றோரமா வந்து கொண்டிருந்தேன். பிள்ளை,பிள்ளைனு குரல் கேட்டது.  முன்ஷிதான். அவர்தான் துரைக்கு மலாய் சொல்லிக் கொடுத்தவர். பெரிய படிப்பாளி. 13 வயசிலேயே குர்ரான் முழுசும் ஓதுவார்னு காக்கா சொல்லியிருக்கிறார். அரபி, மலாய், இந்துஸ்தானி, தமிழ்னு அநேக பாஷை தெரிஞ்ச்ச அவரை ராபிள்ஸ் துரை தனக்கு உதவியாளா வைச்சிருந்தார்.

“எங்க போய்ட்ட? தேடிக்கிட்டே இருக்கேன், ஆப்பிடலையே!”

“ஐயாக்கு என்ன செய்யணும் சொல்லுங்க!”

“துரை கடுதாசி அனுப்பி இருக்கார். உனக்கு 2000 பவுன் கொடுக்கச் சொல்லி. வந்து வாங்கிட்டுப் போ”

கண்ணில் தண்ணி முட்டிக் கொண்டு வந்தது. தலையைக் குனிந்தேன். காலில் காய்ந்து கிடந்த சேறு கண்ணில் பட்டது.

சிரங்கூன் டைம்ஸ்   ஏப்ரல் .2017

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *