தமிழர் வேளாண்மை –சில தரவுகள்

தமிழனின் சிந்தனைத் தெளிவையும், தமிழின் நுட்பத்தையும் இன்றும் அறிவித்துக் கொண்டிருக்கும் சொல் வேளாண்மை ‘வேளாண்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்படும் சொல்  (பொருளதிகாரம் -105, 112) “வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்”1 என்று 105 ஆம் சூத்திரத்தில் காணப்படும் வரியில் உள்ள வேளாண் என்ற சொல்லுக்கு  உதவி, உபகாரம்  என உரையாசிரியர் இளம்பூரணார் பொருள் சொல்கிறார். 112ஆம் சூத்திரத்தில் கூறப்படும் “வேளாண் பெருநெறி”2 என்பதற்கு அவர், “வேளாண்மையாவது உபகாரம், பெருநெறியாவது உபகாரமாகிய பெருநெறி என்க” என்கிறார். வள்ளுவரும் வேளாண்மை என்ற சொல்லை  உதவி, உபசாரம் என்ற பொருளில்  பயன்படுத்துவதாக பரிமேலழகர் எழுதுகிறார்.3

ஆதித் தமிழர்கள் விவசாயம் என்பது மண், மனிதனுக்குச் செய்யும் உபகாரம், உதவி, கொடை என்றே கருதியிருக்க வேண்டும். வேளாண்மை என்பதற்கு நிகரான ஆங்கிலச் சொல்லான agriculture என்பதற்கு நிலத்தைப் பண்படுத்தல். அதன் மூலச் சொல் agricultura என்ற லத்தீன் சொல் (ager = நிலம், cultura= பண்படுத்துதல்)4

இலத்தீன் சொல் உழைப்பையும், தமிழ்ச் சொல் பயனையும் முதனமைப்படுத்துவது இரு வேறு கலாசாரங்களின் பொருண்மை சார்ந்தது என்பது ஒரு புறம் இருக்க, நிலத்தைப் பண்படுத்தாமல் எப்படி பயிரை விளைவிப்பது? என்ற கேள்வியும் எழுகிறது

தமிழரின் ஐந்திணைகளில் குறிஞ்சி நில வேளாண்மைதான் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். மற்றப்பகுதிகளை விட மலைப்பகுதிகளில் மழை அதிகமாகவே இருக்கும் என்பதால் இயற்கை அங்கு ஏராளாமாகவே கொடை அளித்து வந்தது. ஆனால் அங்கும் மனிதன் காட்டின் சில பகுதிகளை எரித்துவிட்டு, தானியங்களை விளைவித்து வந்தான். அப்படிக் காட்டை அழித்து உருவாக்கப்பட்ட விளைநிலங்கள், ‘புரிய புனம்’ என்று அழைக்கப்பட்டன. புரிய புனம் பற்றிக் குறுந்தொகையில் ஒரு குறிப்பு இருக்கிறது (புனவன் துடவைப் பொன் போற் சிறு தினை”)5  மலைப்பகுதிகளில் உழாமல் வேளாண்மை நடந்தது. ”தொய்யாது வித்திய துளர்பாடு துடவை”6 என்று மலைபடுகடாம் இதைக் குறிக்கிறது. உழாமல் விதைத்த நல்ல விளைநிலம் என்று இந்த வாக்கியத்திற்குப் பொருள்.

ஆனால் வேளாண்மை முல்லை நிலத்திற்குப் பரவிய போது உழவும், அதற்குக் கருவிகளும் தேவைப்பட்டது. ஐந்திணைகளில் குறிஞ்சி முல்லை என்ற இரண்டும் பயிர்த்தொழிலுக்குக் கடினமானவை என்பதால் வன்புலம் என்றும், குறைந்த அள்வில் கடுமை கொண்ட மருதம் நெய்தல் ஆகிய இரண்டும் மென்புலம் என்றும் அழைக்கப்பட்டன. வன்புலமாகிய முல்லையில் பயிர் செய்ய கருவிகள் தேவை என்பது இயல்பானதே. முல்லை நில உழவனின் வீடு எப்படி இருந்தது என்று பெரும்பாணாற்றுப்படை உருத்திரங்கண்ணனார் ஒரு சித்திரம் தீட்டுகிறார் 7. அதில் அந்தக் கருவிகளைப் பார்க்கலாம்: முள் வேலியிட்ட வீடு. பெண் யானைகள் படுத்துக் கிடப்பதைப் போன்ற குதிர்கள் (தானிய சேமிப்பு கிடங்குகள்) அவற்றின் கால் போன்ற தானியம் அரைக்கும் திருகைகள். உருளைகள் பொருத்திய சிறு வண்டிகள் (wheel burrows?) அவற்றுடன் சுவரில் சார்த்திய கலப்பை.

வன்புலமாகிய முல்லை நிலத்தில் பயன்படுத்தப்பட்ட கலப்பைகளுக்கும் மென்நிலமான மருதத்தில் பயன்படுத்தப்பட்ட கலப்பைகளுக்கும் வேறுபாடுகள் இருந்தன. மருத நிலத்துக் கலப்பைகள் பெண் யானையின் வாய் போல் அகன்று இருந்தன 8  இதனால் நிலத்தை அகலமாக உழமுடியும் அதே நேரத்தில் நிலத்தை ஆழமாக ஊன்றி உழ அதில் கொழு என்கிற பகுதியும் இணைந்திருந்தது 9  இந்த உழவிற்கு மனித சக்தியோடு பெரும் எருதுகளும் பயன் படுத்தப்பட்டன 10

பெரும்பாணாற்றுப்படையின் இந்தப் பாடல் வரிகள் 1. கருவிகள் கொண்டு நிலம் உழுப்பட்டது, 2.அந்தக் கருவிகள் நிலத்தை ஆழமாகவும் அகலமாகவும் உழும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தன 3.மனித உழைப்போடு கால்நடைளும் உழவில் பயன்படுத்தப்பட்டன. அதாவது கால்நடைகளை வளர்த்து அவற்றை வேளாண் வேலைக்களுக்குப் பழக்க (Animal Husbandry) பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.4.தானியங்கள் சேமிக்கப்பட்டன.5. அவை அரைத்துப் பயன்படுத்தப்பட்டன. அவற்றை அரைக்க கல்லால் ஆன இயந்திரங்கள் இருந்தன.6.சக்கரத்தின் பயன்பாட்டை பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பதை நிறுவுகின்றன. இவையெல்லாம் முதலாம் நூற்றாண்டில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு.

பெரும்பாணாற்றுப்படை என்பது 500 அடிகளில் அமைந்த சங்ககால நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இதை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்  பட்டினப்பாலை  என்ற நூலையும் இயற்றியவர். பட்டினப்பாலை கரிகால் பெருவளத்தான் கால சோழநாட்டை விவரிக்கிறது.

கல்லணையை இந்த கரிகால் பெருவளத்தான் தான் கட்டினான்.  கிட்ட்த்தட்ட சமவெளியில் ஓடும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை 2000 ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கிறது. இதுதான் உலகின் பழமையான நீர் ஒழுங்காற்று அமைப்பு (oldest water regulator) இதன் தொழில் நுட்பம் கண்டு வியந்த சர் ஆர்தர் காட்டன் Grand Anaicut என்று வியந்தார். இதன் தொழில்நுட்பம் பற்றி வியந்து பல கட்டுரைகள் ஆய்வறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன.11

அவற்றைப் பற்றி இங்கு எழுதப் போவதில்லை. தமிழகத்தின் தொன்மையான நீர் நிலைகள், நீர் மேலாண்மை குறித்து தமிழ் மரபு அறக்கட்டளை தனியொரு நூல் வெளியிடுமானல் அதில் இதைப் பற்றி விரிவாக எழுதுவேன்.

ஆனால் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், கி.பி. 1800லேயே ஆறுலட்சம் ஏக்கர்களுக்கு இந்தக் கல்லணை பாசனம் செய்து கொண்டிருந்தது என்பதுதான். ஏனெனில் பாசனம் என்பதுதான் வேளாண்மையில் ஏற்பட்ட மகத்தான திருப்பம். வேளாண்மைக்கு ஆதாரம் நீர். பண்டை வேளாண்மையில் மழையே முதன்மையான நீர் ஆதாரமாக இருந்தது. மழை பற்றிய அறிவியல் செய்திகளை தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். உலகில் உள்ள நீரின் அளவு எப்போதும் மாறுபடாது என்ற ஓர் அறிவியல் உண்மை அண்மைக்காலமாகச் சுழலியல் விவாதங்களில் பேசப்படுகிறது. ஆனால்  2000 ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் ‘மாறா நீர்’ என்று ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார். 12  பண்டைத் தமிழர்கள்  மழைக்குப் பின்னுள்ள வானியலையும் அறிந்திருந்தார்கள்

ஆனால் நீர் ஆதாரங்கள் இல்லாத பகுதிக்கு நீரைத் திருப்பி அங்கு வேளாண்மை செய்தல் என்பது வேளாண்மையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

கி.பி. முதலாம் நூற்றாண்டில் இந்தப் புரட்சியை நிகழ்த்திய கரிகால் பெருவளத்தானின் சமகாலப் பல்லவ அரசன் இளந்திரையன்..கரிகாலனைப் பாடிய உருத்திரங்கண்ணனார் இந்த அரசனையும் பாடியுள்ளார். கரிகாலன் நீரை மறித்துப் பாசனத்திற்குத் திருப்பியதைப் போல, இவன் செயற்கை நீர் நிலைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டினான். காஞ்சிபுரம் அருகே  வாலாஜாபாத்திலிருந்து சுங்குவார் சத்திரம் செல்லும் வழியில் 10. கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, இன்று தென்னேரி என்று மருவியுள்ள திரையன் ஏரி இந்த அரசன் அமைத்ததுதான் 13 18 அடி ஆழமும் ஏழு மதகுகளும் கொண்ட இந்த ஏரி, 5000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி அளித்து வந்துள்ளது

இளந்திரையனுக்குப் பின் வந்த பல்லவர்களும், சங்க காலச் சோழனுக்குப் பின் வந்த இடைக்காலச் சோழர்களும் ஏரிகள் அமைப்பதில் முனைப்புக் காட்டி வந்திருக்கிறார்கள். கி.பி. 550 முதல் 560 வரையில் காஞ்சியை ஆண்ட முதலாம் பரமேஸ்வரவர்மன் தனது பெயரில்  உருவாக்கிய பரமேஸ்வரமங்கலம் என்ற நகரைப் பற்றிய தகவல்களை கூரம் செப்பேடு விவரிக்கிறது. (தற்போது அரக்கோணத்திற்கு அருகில் இருக்கிறது இந்தப் பரமேஸ்வரமங்கலம். சுட்ட செங்கல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நகரம் இது!). அந்த நகரம் உருவாக்கப்பட்ட போது  அங்கு பரமேஸ்வர தடாகம் என்ற ஏரி அமைக்கப்பட்டது. ஏரிக்கான நீர் கொண்டு வர பாலாற்றிலிருந்து  பெரும் பிடுகு கால்வாய் வெட்டப்பட்டது

430 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட சோழர்கள் தங்கள் குடும்பத்தினரின் பெயர் தாங்கிய 20 நீர் நிலைகளை உருவாக்கினார்கள். சோழவாரிதி, வீரநாராயணன் ஏரி (இன்று வீராணம்) ஆகியவை முதல் பராந்தகன் (907-953) உருவாக்கியவை வெட்டினான்.. கண்டராதித்தப் பேரேரி, செம்பியன் மாதேவிப் பேரேரி ஆகியவை கண்டராதித்த சோழனால் (950-957) அமைக்கப்பட்டன. உத்தமசோழன் (970-985) மதுராந்தகப் பேரேரியையும், சுந்தரசோழன் (957-970) சுந்தர சோழப் பேரேரியையும், அவன் மகள் குந்தவையார் குந்தவைப் பேரேரியையும் உருவாக்கினர். முதலாம் இராசேந்திரன் கங்கையை வென்றதைக் கொண்டாடும் விதமாக  கங்கை கொண்ட சோழப் பேரேரியை (சோழ கங்கம்)  வெட்டினான். அது ‘நீர் மயமான வெற்றித்தூண்’ என்று புகழப்பட்டது.

 

பாண்டியர்கள் அமைத்த நீர் கட்டுமானங்கள் குறித்து இலக்கியங்களில் அதிகம் காணப்படவில்லை எனினும், சில செப்பேடுகளில் தகவல்கள் கிடைக்கின்றன. வேள்விக் குடி செப்பேடு, முற்காலப் பாண்டியர்களில் மூன்றாமவனும், சுந்தரபாண்டியனுடைய தந்தையுமான சேந்தன் செழியன் (கி.பி 625-640) வைகையில் மதகு அமைத்த செய்தியைச் சொல்கிறது மாறனேரி, கிழவனேரி, பெருங்குளம் திருநாராயண ஏரி என்று தென் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் பாண்டியர்களால் உருவாக்கப்பட்டவைதான்

 

நீர் நிலைகளைச் சங்கிலி போல் கோர்த்து அமைப்பதில் பாண்டியர்கள் திறமை மிகுந்தவர்களாக விளங்கினார்கள் .ஆறுகளில் நீர் பெருகி ஓடும் காலங்களில், அந்த நீர் ஊருக்குள் வந்து விடாமல் தடுக்கவும், அந்த உபரி நீரைச் சேமிக்கவும்  பல்வேறு விதமான நீர் நிலைகள் உருவாக்கப்பட்டு ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கப்பதுதான் நீர் சங்கிலி. ஆற்றில் நீரின் அளவு அதிகரிக்கும் போது அது ஆற்றிலிருந்து ஏரிக்கு வரும். ஏரியிலிருந்து கண்மாய். கண்மாயிலிருந்து கரணை. கரணையிலிருந்து தாங்கல். தாங்கலில் இருந்து ஏந்தல். ஏந்தலில் இருந்து ஊரணி. ஊரணியிலிருந்து குளம். குளத்திலிருந்து குட்டை. என ஒரு நீர்ச் சங்கிலி அமைக்கப்பட்டிருந்திருக்கிறது

தாங்கல், கேணி, பல்வலம், படுகர், பட்டம், மடு, படு, உவளகம், பண்ணை, வாவி, வட்டம், தடம், கயம், பயம், தடாகம், குளம், குட்டம், கிடங்கு, சூழி, அலந்தை, குண்டம், பங்கம், இலஞ்சி, கோட்டம், பொய்கை, ஏல்வை, ஓடை, ஏரி, கண்மாய்  என பலவகையான செயற்கை நீர் நிலைகள் பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் உருவாக்கப்பட்டிருந்திருக்கின்றன.

 

செயற்கை அமைப்புக்களை உருவாக்கும் போது பண்டைத் தமிழர்கள் கடைப்பிடித்த தொழில்நுட்பம் ஆராயத் தக்கது.  ஏரியை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கான  குறிப்பு ஒன்று சங்ககாலப் புலவர் கபிலரின் பாடல் ஒன்றில் ஒளிந்திருக்கிறது.

 

எட்டாம் நாள் நிலவைப் போல, அதாவது எட்டாம் பிறையைப் போல ஏரி அமைந்திருக்க வேண்டும் என்கிறார் கபிலர்  (”எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரை) 14

எட்டாம் பிறை நிலவு எப்படி இருக்கும்? ஏதாவது ஒரு அஷ்டமி நாளில்  வாசலில் வந்து வானத்தைச் சில நிமிடம் பாருங்கள்.  நிலவு ஆங்கில எழுத்து ’சி’ போல அரை வட்ட வடிவில் இருக்கும். ஆனால் அதன் முதுகு, அதன் விளிம்பை விட கனமானதாக இருக்கும்.

(இந்த எட்டாம் பிறை நிலவு பல கவிஞர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறது. ஒரு பெண்ணின் அழகை உடலின் 19 பகுதிகளையும் உவமைகள் கொண்டு உணர்த்த முற்படும் பொருநராற்றுப்படைப் பாடல் ஒன்று, எட்டாம் பிறை போன்ற நெற்றி என்கிறது. அது மட்டுமல்ல, ஆற்று மணல் போன்ற கூந்தல், மழை போன்ற கண்கள், நீர்ச்சுழி போன்ற கொப்பூழ் என்று வர்ணித்துக் கொண்டு போகும் போது நீருக்கு நெருக்கமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது).

ஏரியின் வடிவத்தை வரையறுப்பதில் மட்டுமல்ல, அதன் கரைகளை எத்தகைய மண் கொண்டு அமைக்க வேண்டும் என்றும் சங்கப்பாடல்களில் செய்திகள் உள்ளன. அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் மண்ணோடு வேறு சில பொருட்களைச் சேர்த்து அரைத்துத் தயாரிக்கப்படும் ‘அரைமண் ’ நீர்க்கசிவைத் தடுக்கும் வலிமை கொண்டதாக இறுக்கமானதாக இருந்திருக்கிறது.

இறுக்கமான மண் கொண்டு ஏரியை அமைத்து விடுவதோடு வேலை முடிந்து விடுவதில்லை.அதற்கான மதகுகளை அமைப்பது என்பது நீர் மேலாண்மையின் முக்கிய அம்சம். பழங்கால ஏரிகளில் மேட்டு மடை, பள்ள மடை என்று பாசனம் பெறும் பகுதியைக் கருத்தில் கொண்டு மடைகள் அமைக்கப்பட்டிருந்திருக்கின்றன. வெளியேறும் நீரின் அளவைக் கணக்கிடும் வழிமுறைகள்/ சூத்திரங்கள் இருந்திருக்கின்றன. நீர்வழிச் சூத்திரம் என்றே ஒரு பாடல் இருக்கிறது. நான்கு நாழிகை நீர் பாயும் மதகு, ஆறு நாழிகை நீர் பாயும் மதகு, 12 நாழிகை நீர் பாயும் மதகு என்று பல்வேறு வகையான மதகுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சில ஆண்டுகள் முன்னர் 2000 ஆண்டுகளுக்கு முன் பயிரான நெல் மணிகள் புதுச்சேரி பேராசிரியர் ராஜனிடம் இருப்பதை அறிந்து, நேரில் சென்று அதைப் பார்த்தும் செய்திகள் அறிந்தும் வந்தேன். ஒவ்வொரு முறை சோறு உண்ண உட்காரும் போதும் என் சோறு 2000 ஆண்டு பழமையானது, என் மொழி 2000 ஆண்டு பழமையானது என்ற எண்ணம் மனதில் ஓடி முதுகுத் தண்டில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

நெல்லுக்கும் நீருக்கும் உள்ள உறவை விளம்ப எழுதி விளக்க வேண்டியதில்லை. நீருயர நெல் உயரும் என ஒருவரியில் எழுதிக் காட்டிவிட்டார் ஒளவை.

நெல்லுக்கு நீர் வேண்டும் என்பதாலோ, கிமு நான்காம் நூற்றாண்டில் இருந்து  கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை நீண்டதாகக் கருதப்படும் சங்க காலம் தொடங்கி, 18 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 2000 ஆண்டுகள் தமிழர்கள் நீர் நிலைகளை அமைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். அவற்றில் பல வகையான பொறியியல், நீரியல் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் இன்றும் சில பயன்படத் தக்கதாய் இருக்கலாம். பயன்படாது என்றாலும் கூட அவை நம் மரபு சார்ந்தவை என்பதால். ஆதாரங்களோடு அந்தத் தரவுகளைத் திரட்டி தொகுத்தல் நலம். பல்துறை வல்லுநர்கள் ஒரு குழுவாக இயங்கி அந்தப் பணியில் இறங்கும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்

உசாத் துணை

1.’ வேளா ணெதிரும் விருப்பின் கண்ணும்-என்பது தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின்கண்ணும் கூற்று நிகழும்’

-தொல்காப்பியம் இளம் பூரணார் உரை

தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம்

http://www.tamilvu.org/library/l0100/html/l0100por.htm

 

2. “வேளாண் பெருநெறி வேண்டியவிடத்தினும் என்பது – வேளாண்மையாவது உபகாரம் . பெருநெறியாவது உபகாரமாகிய பெருநெறி என்க”

-தொல்காப்பியம் இளம் பூரணார் உரை

தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம்

http://www.tamilvu.org/library/l0100/html/l0100por.htm

3.” வேளாண்மை செய்தற் பொருட்டு – ஒப்புரவு செய்தற் பயத்தவாம் (குறள் 212) வேளாண்மை என்னும் செருக்கு – எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு (குறள்; 613) முயற்சி இல்லாதவன் உபகாரியாம் (குறள் 614)

திருக்குறள் – பரிமேலழகர் உரை தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம்

http://www.tamilvu.org/library.htm

4http://latinmeaning.com/meaning-of-latin-ager-agri/

5. புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.

- நக்கீரர் (குறுந்தொகை 105)

6 மலைபடுகடாம்

7. பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்
களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்
குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி

-பெரும்பாணாற்றுப்படை – 186-188

 

8 பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்

பெரும்பாணாற்றுப்படை -199

9 உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றி

 

பெரும்பாணாற்றுப்படை -200

10  குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்

நடைநவில் பெரும் பகடு புதவில் பூட்டி

பெரும்பாணாற்றுப்படை -197-198

 

11 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/a-rock-solid-dam-that-has-survived-2000-years/article4494161.ece

 

12 கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி

 

13, தமிழ்நாட்டின் ஊரும் பேரும் ரா.பி. சேதுப்பிள்ளை  Google Books

 

14. அறையும் பொறையும் மணந்த தலைய
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ

-கபிலர் புறநானுறு 118

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *