அப்பாவிற்கு ஒரு பரிசு

அப்பாக்களின் அன்பைப் போல ஆரவாரமின்றிக் கடந்து போனது தந்தையர் தினம். அன்னையர் தினத்தைப் போல இந்த நாளில் விளம்பர வெளிச்சம் அதிகம் விழவில்லை. அதுவே கூட ஓர் ஆனந்தம்தான்.

குழந்தைகள், அதிலும் பெண் குழந்தைகள், அப்பாக்கள் மீது வைத்திருக்கிற பிரியம் இருளில் ஒளிந்து கொண்டு இரவில் மணம் வீசும் மல்லிகை. இலை நிழலில் பூத்த ரோஜா. வெளிப்படையாக விகசிக்கவில்லை என்றாலும் அடிமனதில் அது சுரந்து கொண்டே இருக்கும்.

தன் மகளைப் போல வேறெவரையும் தகப்பன்மார் நேசிப்பதில்லை. தன் தந்தையைப் போல மகளுக்கு மற்றோர் சிநேகிதன் இல்லை.

சிநேகிதனே ஆசானாய் வாய்ப்பதைப் போல வரம் வேறொன்றுமில்லை. தந்தையைக் குருவாகப் பெற்றவர்கள் தவம் செய்தவர்கள்

கீதா பென்னட்டைப் போல.

கீதாவின் தந்தை டாக்டர் எஸ்.ராமநாதன்.ஒரு இசை மேதை. சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர் அமெரிக்காவின் வெஸ்லியன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரது சீடர்கள் , உன்னி கிருஷணன், செளம்யா, எனப் பலர் இன்று இசை உலக சக்ரவர்த்திகள் ஆனால் இவற்றையெல்லாம் நான் பெரிதாகக் கருதுவதில்லை. என்னை பொறுத்தவரை இலக்கியத்தையும் இசையையும் பிணைக்க அவர் செய்த அசாதாரண முயற்சிகளுக்காக அவர் வணங்கத்தக்கவர். சிலப்பதிகாரத்தின் இசை நுணுக்கங்களை விளக்கி அவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். பாரதியின் பாடல்களை பாரதி குறிப்பிட்ட ராகங்களிலேயே பாடுவதை ஓர் இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாவில் கேட்டு என்னை இழந்திருக்கிறேன்.

அவரது இசை ஞானம் கடலினும் பெரிது என்று வழக்கமான வாக்கியத்தில் எழுதிப் போகலாம். ஆனால் அது எத்தகையது என்பதை கீதா சொல்லக் கேட்டுத் திகைத்துப் போனேன். அவரது அந்திமக் காலம். நுரையீரலில் புற்று நோய். நகர முடியாது. பேச முடியாது. சாப்பிட முடியாது. வலியை மறக்க கீதா அவர் அருகில் அமர்ந்து வீணை வாசித்துக் கொண்டிருக்கிறார். கேசட்டில் கேட்ட ஒரு புதிய பாடலை வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார். புஷ்பதிலகா ராகத்தில் அமைந்த இக நைனா நா. பாட்டை எழுதியது யார் எனத் தெரியாது. யாருடைய பாடலோ இது  என கீதா குழம்பிக் கொண்டிருக்க நினைவிழந்து கொண்டிருக்கும் அரை மயக்க நிலையில் படுக்கையிலிருந்தபடியே மெல்லிய குரலில் பதில் சொல்கிறார் ராமநாதன்.’ ‘திருப்பதி நாராயணசாமி’

அடுத்த ஆண்டு அவரது நூற்றாண்டு. அதற்குள் அவர் பிரபலப்படுத்திய 100 பாடல்களைப் பாடி அல்லது  வாசித்து யூ டியூபில் ஏற்றி விட வேண்டும் என்பதில் அவசரமும் பிடிவாதமுமாக இருக்கிறார் கீதா பென்னட்., இதுவரை பல பதிவுகள் வலையேறி விட்டன.

பிடிவாதம் புரிகிறது. அவசரம் ஏன்? கடந்த 22 வருடங்களாக கேன்சரோடு போராடிக் கொண்டிருக்கிறார் கீதா. ஒவ்வொரு முறையும் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார். மார்பகத்தில் ஆரம்பித்தது. விரட்டி அனுப்பினார். எலும்பில் போய் உட்கார்ந்து கொண்டது. துரத்தினார். உணவுக் குழலின் தொடக்கத்திற்குத் தொற்றியது. பின் நுரையீரல். ஏறத்தாழ 50 கீமோக்கள். பல அறுவைச் சிகிச்சைகள்.

அசரவில்லை கீதா. இதோ அப்பா தனக்குக் கற்றுத் தந்ததை அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க எழுந்து உட்கார்ந்து விட்டார். கீதாவின் மன உறுதியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு முறை கால் முறிந்து கிடந்த போது, படுக்கையில் உட்கார்ந்து கொண்டே வீணை வாசித்தவர் அவர்.

அத்தனை வலிக்கு நடுவிலும் கீதா அடிக்கடி சொல்லும் வாசகம் எனக்காக அனுதாப்ப்படாதீர்கள். பிரார்த்தனை செய்யுங்கள்!

டாக்டர் ராமநாதன் மறைந்த போது ‘ கர்நாடக இசை இருக்கும் வரை ராமநதனின் பெயர் இருக்கும்’ என கல்கியில் டி.எஸ். பார்த்தசாரதி எழுதினார். கீதா தன் அப்பாவிற்கு அளிக்கும் பரிசு, டாக்டர் ராமநாதனின் பெயரை மட்டுமல்ல, கீதாவின் பெயரையும் நிலை நிறுத்தும். காரணம்

அது  அவர் தன் அப்பாவிற்கு அளிக்கும் பரிசு மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான இசை மாணவர்களுக்கு வழங்கும் கொடையும் கூட

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *