இது வெறும் காட்சி, அனுபவமல்ல

ஓவ்வொரு ஆண்டும் மார்கழியின் மத்தியில் இளவேனிற் காலம் தொடங்கும் தருணத்தில் ஏற்பாடு செய்யப்படும் சென்னைப் புத்தகக் காட்சி கடந்தாண்டு இறுதியில் பொழிந்த பெரு மழையின் காரணமாகக் கடுங்கோடையில் தொடங்கியது. கடற்கரைக்கு மிக அருகே அமைந்த திடல் என்ற போதும் வெக்கை கொடுமையாகத்தானிருந்தது. கல்யாண மண்டபத்தின் சமையல்கட்டிலிருந்து வெளிவருபவர்களைப் போல ஏன் புத்தகக் காட்சியிலிருந்து வருபவர்கள் வேர்த்து உருகுகிறார்கள் ஏன முகநூலில் ஒருவர் கேட்டிருந்தார்.

கடைகள் அமைக்கப்பட்டிருந்த திசைகளை மாற்றியிருந்தால் இத்தனை வெக்கை இருந்திராது என்று ஆர்கிடெக்ட் ஆகத் தொழில் செய்யும் நண்பர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். வாஸ்து பார்த்திருப்பார்களோ? அறிவியலைவிட நம்பிக்கைகளுக்கு நம் தேசத்தில் விசை அதிகம்.

அக்னிக் குண்டம் போல கடைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இந்தப் புத்தகக் காட்சியின் சிறப்பம்சம் குண்டுச் சட்டிக்குள் ஓடிக் கொண்டிருந்த குதிரை வெளியே வந்த்துதான், முதன்முறையாக அயல்நாடு ஒன்று இந்தப் புத்தகக் காட்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த்து. அந்த நாடு சிங்கப்பூர்.

இதை பெரும் கெளரவமாகக் கருதிய சிங்கப்பூர் அரசு, அரங்கம், அங்கிருந்து நூலகள், ஏழு எழுத்தாளார்கள், விருந்து எனக் கையைச் சுருக்கிக் கொள்ளாமல் கணிசமாகச் செலவிட்டு, இதில் பங்கேற்றது.

ஆனால் காட்சி அமைப்பாளர்கள் சிங்கப்பூர் அரசையும் எழுத்தாளர்களையும் போல அத்தனை உற்சாகம் அடைந்ததற்கான அடையாளங்கள் இல்லை. இதை பத்தோடு பதினொன்றாக எடுத்துக் கொண்டார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர் தேசம் என ஒரு வரிக்கூடக் குறிப்பிடப்படவில்லை. தொடக்கவிழாவில் உரையாற்றுவோர் பட்டியலில் சிங்கப்பூர் துணைத்தூதர்  பெயரோ, எழுத்தாளர் சங்கத்தலைவர் பெயரோ, சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்ற அதிகாரியின் பெயரோ இல்லை. ஊடக தினம், மொழி தினம், உணவு தினம் மாற்றுத் திறனாளிகள் தினம் மகளிர் தினம் என அன்றாடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் சிங்கப்பூர் தினம் எனத் தனியாக ஒரு நாளை ஒதுக்கியிருக்கலாம்.. தமிழக ஊடகங்களில் இன்னும் விரிவாக செய்தி பரப்பப்பட்டிருக்கலாம்

என்றாலும் நிச்சியமாக இது ஒரு தொடக்கம். நல்ல தொடக்கம். ஒரு பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆட்கள் வரட்டும். ஆனால் அவர்கள் நூல்களைச் சுமந்து வர வேண்டாம். இணையத்தின் வழி அவை எம்மை வந்தடையட்டும்

புத்தகக் கண்காட்சி தொடங்கிய நாள் ஜூன் ஒன்றாம் தேதி. 1981ஆம் ஆண்டு இதே ஜூன் ஒன்றாம் தேதி யாழப்பாணத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள் இன வெறுப்பரசியலில் எரிக்கப்பட்டன. 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஜூன் 1ஆம் தேதி 10 லட்சம் தலைப்புகளில், ஒரு கோடிப் புத்தகங்களோடு கோலாகலமாக தமிழகத் தலைநகரில் ஒரு கண்காட்சி தொடங்குகிறது.

தமிழர்களை வீழ்த்த நினைத்தவர்கள் புத்தகங்களை காகிதத்தால் ஆன ஜடப் பொருளாகப் பார்க்கவில்லை. அதை எண்ணங்களின் தொகுப்பாக, கலாசாரத்தின் அடையாளமாகப் பார்த்தார்கள். அவர்கள் அழிக்க முற்பட்டது அதைத்தான். காகிதங்களை அல்ல.

ஆனால் நாம் புத்தகங்களை இன்னும் ஒரு ஜடப் பொருளாக, காகிதக் கட்டுக்களாகவே பார்க்கிறோம்.அதற்கான இன்னொரு அடையாளம்தான் இந்தப் புத்தகக் காட்சி. ஆம். இது வெறும் காட்சி, அனுபவமல்ல. பாலித்தீன் உறைகளுக்குள் உறங்கும் நூல்களைப் பார்க்கலாம். பக்கங்களைப் புரட்டி வாசிக்க முடியாது.

இன்று. இணைய அங்காடிகள் வந்து விட்டன. அமெரிக்காவில் வெளியான ஒரு நூலை அடுத்த ஒரு மணியில் நான் இருந்த இடத்திலிருந்தே இணையத்தில் ஆர்டர் செய்து வாங்கிவிட முடியும். ஆனால் இங்குள்ள பாண்டிபசாரில் பதிப்பிக்கப்பட்ட நூலைத் தேடி நாம் இன்னும் அக்னிக் குண்டங்களுக்குள் அலைந்து கொண்டிருக்கிறோம் தமிழ் நூல்களுக்கும் ஒன்றிரண்டு இணைய அங்காடிகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன

என்ன செய்ய? அறிவியலைவிட நம்பிக்கைகளுக்கு நம் தேசத்தில் விசை அதிகம்

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *