அறிவு என்பது மொழி அல்ல

தேர்தல் சூடு பிடித்திருக்கிறது. இங்கு மட்டுமல்ல, அமெரிக்காவிலும். இந்தாண்டு நவம்பர் மாதம் அங்கு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்தத் தேர்தலில்  குடியரசுக் கட்சியின் வேட்பாளர்  தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், பிரசாரத்தின்போது இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பையும், இந்தியாவின் அழைப்பு மையங்களையும் (கால் சென்டர்கள்) கிண்டல் செய்திருக்கிறார்.

இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயர்களின் ஆங்கில உச்சரிப்பைப் போல இல்லைதான். ஆனால் அமெரிக்கர்களின் ஆங்கிலமே கூடஆங்கிலேயர்களைக் கேட்டால் அவர்கள் அமெரிக்கர்கள் பேசுவது ஆங்கிலமா என்று கேலி நெளியப் புன்னகைப்பார்கள்.

ஆங்கிலேயர்கள் (நாம் Pant என்று அழைக்கும்) நீண்ட கால்சாராயை ட்ரெளசர் என்று சொல்வார்கள். அவர்களுக்கு pant என்பது அண்டர்வேர். இங்கிலாந்திற்கு பிசினஸ் பேச வந்த அமெரிக்கர் ஒருவரை வரவேற்கச் சென்றார் ஓர் ஆங்கிலேயேர். பேச்சு வார்த்தையை சுமுகமாகத் தொடங்க விரும்பிய அமெரிக்கர், “ஓ! அருமை! நீங்கள் அணிந்திருக்கும் பேண்ட் எவ்வளவு அழகு!” என்றார். ஆங்கிலேயர் முகம் சிவந்து விட்டது. திகைப்புடன் குனிந்து தனது உள்ளாடை எங்கேயாவது வெளியில் தலை காட்டிக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார்.

ஆங்கிலேயர்கள் ரப்பர் பேண்ட் என்று சொல்வதை அமெரிக்கர்கள் எலாஸ்டிக் என்று சொல்வார்கள். ஏனெனில் அங்கு ரப்பர் என்பது ஆணுறை! (காண்டோம்)

அதே போல இனிப்புகள் எல்லாம் கேண்டி. பிஸ்கெட்கள் எல்லாம் கூக்கி. நொறுக்குத் தீனிகள் எல்லாம் சிப்ஸ். கோககோலா போன்ற மென்பானங்கள் எல்லாம் சோடா. ரெஸ்ட்ரூம் என்பது ஓய்வெடுக்கும் அறையல்ல, கழிப்பறை. காரில் பயணிக்கும் போது ஒரு நிமிடம், gas போட்டுக் கொள்கிறேன் என்று சொன்னால் மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டாம். காருக்குப் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளப் போகிறார் என்று அர்த்தம்

ட்ரம்ப் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், மொழித் தடைகளைத் தாண்டி நிறையவே சாதித்திருக்கிறார்கள். அமெரிக்க அரசாங்கம் வெளியிடும் ஸ்பான் பத்திரிகையின் ஏப்ரல் மாத இதழ் முழுக்க அமெரிக்காவில் சாதித்த இந்தியர்கள் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உத்திரப் பிரதேசத்தில் பிறந்து 19 வயதில் கல்யாணமாகி அமெரிக்கா போன போது ரேணுவிற்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது. இன்று ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் தலைவர். இதற்குப் பின்னால் அவர் அமெரிக்காவில் பெற்ற டாக்டர் பட்டமும் 22 வருட உழைப்பும் இருக்கிறது.

இந்த வரிசையில் தமிழர்களும் இருக்கிறார்கள். கொலம்பியா பல்கலையில் ஆய்வுக் கூடம் அமைத்து கழிவு நீரில் உள்ள சக்தியைக் கொண்டே அதைச் சுத்தம் முயற்சியில் இறங்கியிருக்கும் கார்த்திக் சந்திரனுக்கு இந்தாண்டு “ஜீனியஸ் கிராண்ட்” என்று அமெரிக்க ஆய்வுலகால் பொறாமையோடு அழைக்கப்படும் மெக் ஆர்தர் பெலோஷிப் கிடைத்திருக்கிறது. பொறாமைக்குக் காரணம் 6,25,000 டாலர்களை “உன் இஷ்டம் போல் செலவழிச்சுக்க ராஜா!” என்று கையில் தூக்கிக் கொடுத்துவிடுவார்கள். கேள்விகளோ, நிபந்தனைகளோ கிடையாது.

ஸ்வேதா பிரபாகரன் பள்ளி மாணவி. “மாற்றத்தின் சாம்பியன்” என்று சென்ற வருடம் அமெரிக்க அதிபர் அவரை அழைத்துப் பாராட்டி கெளரவவித்திருக்கிறார். அப்படி என்ன செய்துவிட்டார்? யார் வேண்டுமானலும் ’கோட்’ எழுதிச் செயலிகளை உருவாக்கக் கற்றுத்தரும் Everybody Code Now என்ற தன்னார்வ அமைப்பை உருவாக்கி பள்ளி மாணவர்களை மென்பொருள்கள் உருவாக்கப் பயிற்றுவிக்கிறார், இலவசமாக

ஹார்வேட் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராக இருக்கும் விஜய் ஐயர், இனவெறிக்கு எதிராக வெளியிட்டிருக்கும் இசைத்தொகுப்பு அமெரிக்க இசை உலகைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. ட்ரம்ப்க்கு படிக்க நேரம் இல்லாவிட்டாலும், கேட்க நேரம் இல்லாவிட்டாலும், அந்த ஆல்பத்தின் தலைப்பையாவது கண் கொண்டு பார்க்கட்டும். அதன் தலைப்பு:

In what language?

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *