காணாமல் போன சிறுவன்

பத்திரிகைக்களுக்கு வரும் கடிதங்கள் எப்போதும் வாசகர்களின் வாழ்த்து மடல்களாகவோ விமர்சனக் கணைகளாகவோதான் இருக்க வேண்டும் என்பதில்லை. காணமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தரும் வேண்டுகோள்களாகவும் அவை எப்போதேனும் அமைந்துவிடுவதுண்டு.

அப்படி ஒரு கடிதம் ஆங்கில ஹிண்டு நாளிதழில் 1905ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி வெளியானது “காணமற் போன சிறுவன்” என்ற தலைப்பின் கீழே வெளியாகியிருந்தது

“ஐயா,

அதிகம் விற்பனையாகும் உங்கள் இதழில் இதை வெளியிடக் கோருகிறேன்

வைண (தென்கலை) பிரிவைச் சேர்ந்த ராமானுஜன் என்னும் பெயர் கொண்ட சிவந்த மேனி உடைய 18 வயது பிராமண இளைஞன், அண்மைக்காலம் வரை கும்பகோணம் கல்லூரியில் படித்து வந்தான். ஏதோ ஒரு கருத்து வேற்றுமையினால் வீட்டை விட்டுச் சென்ற அவனைக் காணோம். அவன் உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என அவனை வளர்த்து வரும் பொறுப்பாளர் விரும்புகிறார். அவன் ராஜமுந்திரியில் ஒரு மாத காலம் தங்கியிருந்தான். ஐந்து நாள்களுக்கு முன் அவனை அங்கே பார்த்ததாகச் சொல்கிறார்கள். அவனைக் காண்பவர்கள், வீடு திரும்புமாறு அறிவுரை கூறி அனுப்பி வைக்க வேண்டும். கீழ்க் கண்ட முகவரிக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். ஜெ.ஶ்ரீநிவாச ராகவ ஐயங்கார், 18, சாரங்கபாணி சந்நிதி தெரு, கும்பகோணம்”

இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படும் ராமானுஜன், கணித மேதை என்று உலகம் கொண்டாடும் ஶ்ரீநிவாச ராமானுஜன். என்ன கருத்து வேறுபாடு, ஏன் “காணாமற்” போனார் என்பது பற்றி என்னிடம் தகவல்கள் இல்லை. இந்த கடிதம் குறிப்பிடும் காலகட்டத்தில் அவர் விசாகப்பட்டினத்தில் இருந்தார் என்பதும், இந்தக் கடிதம் வெளியான சில நாள்களில் கும்பகோணம் திரும்பினார் என்பதும், அதற்கு அடுத்த ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார் என்றும் அவரது வாழ்க்கைச் சரிதத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

ஆதாரபூர்வமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும் என்ன நடத்திருக்கும் என்று ஓரளவு ஊகிக்க முடிகிறது. மெட்ரிக் தேர்வில் முதல் வகுப்பில் தேறியதால் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து +1) வகுப்பில் சேர்ந்து படிக்க  ‘சுப்பிரமணியம் ஸ்காலர்ஷிப்’ என்ற உதவித் தொகை கிடைத்தது  கணிதப் புலி கற்க வேண்டிய பாடங்களோ, கணிதம் தவிர, ஆங்கிலம், சமஸ்கிருதம், பிசியாலஜி என்னும் உடற்செயலியல், ரோமானிய –கிரேக்க வரலாறு. (என்ன மாதிரியான காக்டெயில்!) ராமனுஜனுக்கு கணிதத்தைத் தவிர மற்றவைகளில் நாட்டமில்லை. தேர்வில் தோற்றுப் போனார். அதனால் கல்வி உதவித் தொகையும் நின்று போனது.

இது வீட்டில் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.’கண்காணாமல்’ போய் விட வேண்டும் என்று ஆந்திராவிற்கு ஓடிப் போயிருக்க வேண்டும். போதுமான வருகைப் பதிவு இல்லாததால் அந்த ஆண்டு தேர்வு எழுத முடியவில்லை. அதனால் சென்னை வந்து பச்சையப்பனில் சேர்ந்தார்.

கேம்பிரிட்ஜ் மாணவராக இருந்த போது, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளவும் ராமானுஜன் முயன்றதுண்டு. நம்முடைய நல் அதிர்ஷ்டம், மின்சாரம் தடைப்பட்டது காரணமாக அவர் படுத்துக்கிடந்த இடத்திற்குச் சில அடிகளுக்கு முன் ரயில் நின்று விட்டது. ராமானுஜனை அள்ளியெடுத்து காவல் நிலையம் கொண்டு சென்றார்கள்.ராயல் சொசைட்டி உறுப்பினர்களைக் கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரமில்லை என அவரது பேராசிரியர் ஹார்டி சொன்னதும் விடுவித்தார்கள். ஆனால் ராமானுஜன் அப்போது  ராயல் சொசைட்டியில் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. பொய்மையும் புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில்…

இப்போது எதற்கு இந்தக் கதையெல்லாம்?ஏப்ரல் 26 ராமானுஜன் இறந்த நாள் என்பதால் மட்டுமல்ல. தேர்வு முடிவுகள் எதிர்பாராத விதமாக அமைந்தால் ரயில் முன் பாயாதீர்கள் என்பதை மாணவர்களுக்கும், விருப்பமில்லாத பாடங்களை தலையில் திணித்து ராமானுஜன்களை வீட்டை விட்டுத் துரத்தாதீர்கள் எனப் பெற்றோருக்கும் சொல்லத்தான்

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *