செவிச் செல்வம்

கதவுகளுக்கு இடையே கடிதம் போல் ஓர் உறை. அழைப்பிதழ். இலக்கியக் கூட்டம் என்றது அழைப்பு. அங்கு பேசப்படவிருப்பது இலக்கியம்தானா என என்னைக் கேட்டுக் கொண்டேன்

இலக்கியக் கூட்டங்கள் பல வகை. பலர் கூடி பரஸ்பரம் முகமன்கள் கூறி மகிழ்கிற பாராட்டுக் கூட்டங்கள் ஒரு வகை. இந்தக் கூட்டங்கள் நிகழ்கிற இடத்தில் மேடையில் பனி மழை பொழியும். அரங்கங்கள் புழுக்கத்தில் தவிக்கும்

வேறு சில கூட்டங்கள் வெளிச்சம் போடும் கூட்டங்கள். இடறி விழுந்த இடத்தில் இருந்த கல்லை எடுத்து ஓரமாகப் போட்டதை உயிர் பல காத்து சமூகம் சாகாமல் இருக்க ஆற்றிய சாதனை போல, விவரிக்கும் கூட்டங்கள். விளம்பரம்தான் இவற்றின் ஆதார சுருதி. அறிவார்ந்த வார்த்தைகள் அங்கு அபூர்வம்

இன்னும் சில இருட்டடிப்புக் கூட்டங்கள். ஒருவரையோ பலரையோ ஒருவரோ பலரோ கூடி வசை பாடும் கூட்டங்கள். தமிழ்நாட்டில் விளம்பரம் –புகழ் அல்ல- பெற எளிதான வழி எவரையாவது திட்டுவது. வெறி கொண்டது போல வேகமாக தடித்த வார்த்தைகளில் தாக்கினால் நிச்சயம் அவை அச்சேறும். குரைக்கத் தெரிந்தவர்களுக்கு கூடுதல் புகழ்.

ஒப்புவிக்கும் கூட்டங்களும் உண்டு. பேசும் பொருள் எதுவாக இருந்தாலும் பிரசினை இல்லை சங்கத்தில் இரண்டு, கம்பனில் இரண்டு, எல்லோருக்கும் நல்லோனான பாரதியில் ஐந்தாறு என்று மனப்பாடம் செய்து வைத்திருக்கிற பாடல்களை அவற்றின் மெய்பொருள் உணராது, கவிநயம் அறியாது எடுத்து நிரவல் செய்து செவியை நிரப்புகிற செல்வர்களை இங்கு சந்திக்கலாம். ஞாபக சக்தியும் நடிப்புத் திறனும் இருந்தால் இங்கு நீங்கள் சூப்பர் ஸ்டார்.

ஆறு மணிக்கு என அறிவிக்கப்பட்ட கூட்டங்கள் அரங்கில் இருப்போரின் தலையெண்ணி, காத்திருந்து காத்திருந்து, இனிப் பொறுப்பதில்லை என அரைமனதோடு, ஏழுமணிக்குத் தொடங்கும் பலர் பேசி முடிக்க இரவு மணி ஒன்பதைத் தொடும். இளம் பசி வயிற்றில் படரும்.  வீடு  வந்து சேர்ந்து. கடந்த ஐந்து மணி நேரம் எப்படிக் கழிந்தது எனக் கணக்குப் பார்த்தால் கண்கள் சோரும். தூக்கத்தினால் அல்ல துக்கத்தினால்

என்னுடைய துக்கம் வேறு அது:

பூங்கொத்தா? பொய்யற்ற
புன்னகையே போதுமே.

என்றாலும் மலர்களுக்கு நன்றி
வீடு சேரும் வரை
வழித்துணையாய் வாசம் வரும்

பொன்னாடை எனினும் கூடப்
பயன் ஒன்றுண்டு அதற்கு
இல்லாதார் இல்லத்தில்
இளைப்பில், குளிரில்,
இருமலில் நடுங்கும்’
முதிர் குழந்தைகளுக்கு
உதவக்கூடும் அவை.

பொன்னாடைக்குப் பொருள் இல்லையென்றால்
ஈரிழைத் துண்டு கொடு
ஈரம் துடைக்க அவை உதவும்

சித்திரங்கள் சிறிதேனும்
ஓவியனுக்கு உணவளிக்கும்

மழை பறித்த பள்ளங்களை
மண் இட்டு மூடும் போது
பெயர்பொறித்த கேடயங்கள்
பெரிதும் துணை நிற்கும்

ஆனால்-

என்றோ தோற்ற உன் காதலை
எண்ணி எண்ணிப்
பொய்யாய்ப் புலம்பி
போலியாய்க் கவி எழுதி
காகிதத்தில் நூல் செய்து
நினைவுப் பரிசென்று நீட்டுகிறாய்
என் செய்வேன், என் செய்வேன்
இதைக் கொண்டு நான்?

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *