சொல்லில் அடங்கா உலகம்

மரியாதைக்குரிய ஒருவரைக் காணச் செல்லும் போது நாம் பூக்களோ பழங்களோ வாங்கிக் கொண்டு போவதுண்டு. சிலர் இனிப்பையோ நொறுக்குத் தீனிகளையோ வாங்கிக் கொண்டு போவார்கள். ஒருவருக்கு நான் ஒரு கவுளி (கட்டு) வெற்றிலை கூட வாங்கிக் கொண்டு போயிருக்கிறேன்

ஆனால் அஞ்சல் அட்டைகள் வாங்கிக் கொண்டு எழுத்தாளர் ஒருவரைப் பார்க்கப் போனார் அவரது நண்பரான இன்னொரு எழுத்தாளர் என்று அண்மையில் கேள்விப்பட்டேன். அந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அந்த நண்பர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன்.

வல்லிக்கண்ணனிடம் ஒரு நல்ல வழக்கம் உண்டு. எந்தப் பத்திரிகையில்  நல்ல படைப்புக்களைப் படிக்க நேர்ந்தாலும் உடனே அந்தப் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதிவிடுவார். அந்தக் கடிதங்களையெல்லாம் அஞ்சலட்டையில்தான் எழுதுவார். ஒரு காலத்தில் அவரது கடிதங்கள் வெளிவராத இலக்கியச் சிற்றேடுகளே இல்லை என்ற நிலை இருந்தது. அதனால் அவருக்கு திருப்பூர் கிருஷ்ணன் வாங்கிச் சென்ற அஞ்சலட்டைகள், பழங்களைவிட, தின்பண்டங்களைவிடப் பயனுள்ளதாகத்தான் இருந்திருக்கும்.

கையால் எழுதப்படும் கடிதங்களின் அருமையை அனுபவபூர்வமாக கிருஷ்ணன் உணர்ந்திருக்க வேண்டும். ஒருகாலத்தில் அவர் தனது அம்மாவிற்கு தினம் ஒரு கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று அண்மையில் ஒரு  கூட்டத்தில் அவரை அறிமுகப்படுத்தும் போது சொன்னர்கள்.

ராஜாஜி தனக்கு வரும் கடிதங்களுக்கெல்லாம் கைப்பட பதில் எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் என்று என் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படி எழுதப்பட்ட கடிதத்தையும் அவர் என்னிடம் காட்டியதுண்டு.

கையால் எழுதப்படுகிற கடிதங்கள், எவ்வளவு எளிமையாக  எழுதப்பட்டாலும், எழுதுகிறவர்களின் ஆளுமையை வெளிப்படுத்திவிடுவதுண்டு. வண்ணதாசன் என்று அறியப்படுகிற கல்யாண்ஜியின் கடிதங்களில் அவரது  வாஞ்சையோடு சிறிய, சில சமயம் சற்றுப் பெரிய ஓவியங்களும் இருக்கும். பெரும்பாலும் கறுப்பு மசியில், எழுதப்படும் அவர் கடிதங்கள் அவரது கவிதையின் சாயல் கொண்டிருக்கும். படிப்பவர்களுக்கு நாமும் அது போல் எழுதலாம் என்ற நம்பிக்கையையும்  வரைந்து பார்க்கலாம் என்ற உந்துதலையும் தரும். வண்ணதாசன், பாலகுமாரன், சுஜாதா இவர்கள் மூன்று பேருமே அழகான கோட்டோவியங்கள் வரையக் கூடியவர்கள்.

தி,ஜானகிராமன் எனக்கு எழுதிய கடிதங்கள் எல்லாம் இன்லாண்ட் லெட்டர் என்று சொல்லப்படும், நீல நிறக் கடித உறைகளில் எழுதப்பட்டவை. இடப்பக்கத்தைக் காலியாக விட்டு வலப்பக்கத்தில் துவங்கி அவர் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது எழுத உட்காரும் முன்னரே கடிதத்தின் அளவைத் தீர்மானித்துக் கொண்டு விட்டார் என்பதை உணர்த்தும். கடித வரிகளையும் கூட அவர் மனதில் ஒரு முறை எழுதிப் பார்த்திருக்க வேண்டும் என்பது போல் அவை கச்சிதமாக இருக்கும்.

ஒரு தலைமுறை கையால் எழுதப்படும் கடிதங்களை அநேகமாக இழந்து விட்டது. கையெழுத்தின் வசீகரம், அல்லது கிறுக்கல், அல்லது எழுத்தின் மேல் சென்று அமர்ந்து கொள்ளும் அடுத்த எழுத்தின் அவசரம், திலகம் போல் வட்ட வட்டமாக, கத்தி போல் கூர்த்துச் சிறுப்பதாக, வால் கொண்டு விசிறுவதாக  அமைந்த பல்வேறு வகையான எழுத்துக்களை கணினியில் எழுதப்படும் கடிதங்களில் இழந்து விட்டோம். இயந்திரங்கள் மனிதர்களை விடச் சீராகவும் தெளிவாகவும் எழுதுகிறது .

என்றாலும்,, வெறும் சொல்லில் அடங்கியதா உலகம்?

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *