தனிமை தவறல்ல!

அந்தப் பெண்ணின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். சொல்லிலோ அமிலம். சொத்தைப் பறித்துக் கொண்ட பங்காளியை ஏசுவது போல ஆங்காரத்தோடு அவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அது அரசியல் மேடை. அண்மையில் நடந்து முடிந்த மாநாடு.

ஆட்சியைப் பற்றித் தொடங்கிய அனல் பேச்சு, சர்ரென்று சரிந்து தனிநபர் தாக்குதலாகத் திரிந்தது. குடும்பம் என்ற ஒன்று இருந்தால்தான் ஆண்களை மதிக்க தெரியும். உனக்கு குடும்பம் என ஒன்று இல்லை அதனால் ஆண்களை மதிப்பதில்லை என்று அவர் ஆளுங்கட்சித் தலைவரைச் சாடிக் கொண்டிருந்தார்.

ஒருவரது ஆட்சியை விமர்சிப்பதும், அவரது தனிப்பட்ட வாழ்வை விமர்சிப்பதும் ஒன்றல்ல. ஆனால் பெண்களது தலைமையை விமர்சிக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது அவர்களது தனி வாழ்க்கைதான். அரசியலில் மட்டுமல்ல, அலுவலகத்திலும் கூட.

திருமணம், குடும்பம் என்ற அமைப்போடு பெண்களைப் பிணைத்தே பார்க்கிற மனோபாவம் இங்கு காலங்காலமாக நுட்பமாகவும் திறமையாகவும் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. நடுவயதைத் தாண்டிய பெண்களிடம் பலர் சர்வசாதாரணமாகக் கேட்கும் கேள்வி, “உங்க ஹஸ்பெண்ட் என்ன செய்கிறார்?” மேலதிகாரியிலிருந்து, மேசையில் டீ கொண்டு வந்து வைக்கும் பணியாள் வரை இதைப் பெண்களிடம் கேட்கத் தயங்குவதில்லை.

பெண்கள் தனியாக இருப்பது அவர்கள் விருப்பம், உரிமை என்பதைத் தமிழ்ச் சமூகம் இன்னமும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே பாரதியும், அதற்குப் பின் பெரியாரும் இதனை அழுத்தம் திருத்தமாக எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள்.

குடும்பம் துறந்து அல்லது தவிர்த்து வாழும் பெண்களைப் பற்றிய ஆண்களின் மனோபாவம்தான் அன்றைக்கு ஆங்காரத்தோடு பேசிய பெண்ணின் குரலில் ஒலித்தது. பெண்ணுக்குள் ஆணும், ஆணுக்குள் பெண்ணும் இருப்பதில் அதிசயமில்லை. ஆனால் யாராயினும்  அரசியல் மேடைகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பது என் போன்ற சாதாரணக் குடிமகன்களின் எதிர்பார்ப்பு.

கருத்து மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கண்ணியமாக பேச எழுத நடந்து கொள்வது ஒன்றும் அத்தனை கடினமானதல்ல. அதனை இரு தலைமுறைகளுக்கு முந்தைய தலைவர்கள் அதை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார்கள்

“தி.மு.க. தோன்றிய இரண்டொரு ஆண்டுகட்குப் பின்பு ஒரு நாள் அண்ணா, சம்பத், நான் மூவரும் இருக்கிறோம். அப்போது வெளியாகிய ஓரு திரைப்படத்தில் சிதம்பரம் ஜெயராமன் “எது வேண்டும் சொல் மனமே” என்று ஒரு பாடலை அற்புதமாகப் பாடியிருந்தார். அது எப்போதும் என் செவிப்புலனை நிறைந்திருந்தது. நான் தனியே உட்கார்ந்து ஒரு சிறு தாளில் எழுதத் தொடங்கினேன்.

எது வேண்டும் என் தலைவா – தலைவா
மதிவேண்டும் என்ற உம் கொள்கையா – இல்லை
மணம் வேண்டி நின்ற உம் வேட்கையா
பணி செய்வோர் விசுவாசமா – இல்லை
மணியம்மை சகவாசமா?

இதைப் படித்துப் பார்த்த சம்பத் சட்டென்று அந்தத் தாளை உருவி அண்ணாவிடம் தந்தார். அண்ணாவின் முகம் மாறியது. சேச்சே, இது மாதிரி எழுதாதய்யா, என்று கண்டித்துவிட்டு அந்தத்தாளை கிழித்து எறிந்துவிட்டார்”.  (அண்ணா சில நினைவுகள் – கவிஞர் கருணாநந்தம்)

அரசியலை விமர்சிப்பதற்குத் தனிப்பட்ட வாழ்வை ஆயுதமாகப் பயன்படுத்தாத தலைமை அடுத்த தலைமுறையிலாவது அரும்பட்டும். முதிய தலைமுறைக்கும் ஒரு விண்ணப்பம்.: தனிமையைத் தேர்ந்தெடுக்கும் பெண்களை ஏளனமாக எண்ணுவதை இனியேனும் கைவிடுங்கள்.

மற்றவரது மனங்களை மதிக்கத் தெரிந்தவர்களே எப்போதும் மதிக்கப்படுவார்கள்

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *