நம்பப்படும் பிம்பங்கள்

திமுக அதிமுகவை மற்ற கட்சிகள் ஒதுக்கக் காரணம் என்ன?

பிறந்ததிலிருந்தே தன் முகத்தைப் பாராமலேயே வளர்ந்தவன் நார்சிசன். என்றைக்கு அவன் தன் முகத்தைப் பார்க்கிறானோ அன்றைக்கு அழிந்து போவான் என்றொரு சாபம் அவனுக்கு இருந்தது. ஆனால் அவன் பேரழகன். அவனைப் பார்க்கிற எந்த இளம் பெண்ணும் அரைக் கணமாவது அந்த வசீகரத்தில் தன்னைப் பறி கொடுப்பாள்.

வேட்டைக்குப் போனான் நார்சிசன். வழி தவறிவிட்டது. உரக்கக் குரல் எடுத்து உடன் வந்தவர்களை அழைத்தான். எதிரொலியைத் தவிர ஏதும் பதிலில்லை. மறுபடி அழைத்தான். மரத்தின் இலைகளைத் தவிர மற்றெதுவும் அசையவில்லை. அழைத்து அழைத்து அவன் சோர்ந்து போனான். நா வறண்டது. சற்றுத் தொலைவில் பளிங்கு போல ஒரு குளம் படர்ந்து கிடந்தது. நார்சிஸ் குளத்தை நோக்கி நடந்தான். கொஞ்சம் அள்ளிப் பருக தண்ணீரை நோக்கித் தலை குனிந்தான். கை தவறி விழுந்த கண்ணாடிச் சில்லு போல் காட்டில் கிடந்த அந்தத் தண்ணீரில் அவனது அழகான முகம் பிரதிபலித்தது. பிரமித்துப் போனான். இத்தனை அழகா நான்! வாழ்நாள் முழுதும் தன் முகத்தைப் பார்த்திராத அந்த வாலிபன் தனது அழகில் தானே கிறங்கிப் போனான். பார்க்கப் பார்க்க சுய மோகம், சுய காதலாகக் கனன்றது. அந்த பிம்பத்தை ஆறத் தழுவும் முயற்சியில் அவன் குளத்தில் வீழ்ந்தான். நீர்க் கொடிகள் அவனை நெருக்கிப் பிடித்துக் கொண்டன. மூச்சுத் திணறலில் அவன் வாழ்க்கை முடிந்து போனது.

வேட்டைக்குப் புறப்பட்ட வீரன் ஒருவன், பிம்பத்திற்கும் நிஜத்திற்குமுள்ள பேதம் தெரியாமல் சுயகாதலுக்குப் பலியான இந்தச் சோகக் கதையைச் சொல்வது கிரேக்க புராணம்.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தைக் கவனித்து வருபவர்கள், அண்மைக்காலத்தில்  தமிழக அரசியல் கட்சிகள் பலவும் பிம்பத்திற்கும் நிஜத்திற்குமுள்ள வேறுபாட்டை விளங்கிக் கொள்ளாமல், சுயகாதலில் தங்களைத் தாங்களே வியந்து கொண்டிருக்கும் நார்சிஸ்ட்களாக மாறிப் போயிருப்பதை அறிவார்கள். அதற்குக் காரணங்கள் மூன்று. மூன்றும் தில்லியோடு தொடர்புடையவை

அதிமுக தோன்றிய பிறகு (1972) நாற்பத்திரண்டாண்டுகளாக, எந்த மக்களவைத் தேர்தலிலும் திமுக, அதிமுகவோடு நேருக்கு நேர் மோதியதில்லை. காங்கிரஸ் அல்லது காங்கிரசின் ஒரு பிரிவு, கம்யூனிஸ்ட்கள், பாமக, பாஜக போன்ற ஏதேனும் ஒரு சில கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டுதான் அது அதிமுகவை எதிர் கொண்டு வந்திருக்கிறது. அதிமுகவும் கூட்டணியோடுதான் (பெரும்பாலும் காங்கிரஸ்) திமுகவை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால் 2014லில் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் திமுகவும் (அப்போது அதன் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே இருந்தன) ’ஒண்டிக்கு ஓண்டி’ மோதின. விளைவு திமுகவால் ஒரு இடம் கூடப் பெற முடியவில்லை.

அப்போது மோதி அலையை நம்பி பாமக, மதிமுக போன்ற கட்சிகள் பாஜக அணிக்கு போய்விட்டன. தங்கள் ஒத்துழைப்பு இல்லாமல் திமுகவால் பெரும் வெற்றிகளைக் குவிக்க இயலாது என அந்தக் கட்சிகள் உணர்ந்து கொண்டன.

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மொத்தமுள்ள 39 இடங்களில் 37ல் வெற்றி பெற்ற அதிமுக, தங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அந்த நிலையில் அவர்களுக்கு ஓர் நம்பிக்கை ஒளிக் கீற்று தில்லியில் அரும்பியது. தில்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் என்ற இரு பெரும் கட்சிகளைப் புதிதாகத் தோன்றிய அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வீழ்த்திப் பெரும் வெற்றி பெற்றது. அதைப் போல அதிமுக, திமுக ஆகிய பெரிய கட்சிகளை நாம் வீழ்த்த முடியும் எனத் தமிழக இடைநிலைக் கட்சிகள் கருதுகின்றன

மூன்றாவது காரணம் தில்லியில் நடந்து வரும் வழக்குகள். 2ஜி வழக்குகள், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தில் உள்ள  மேல்முறையீடு இவற்றின் தீர்ப்புக்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..அப்போது சூழல் தங்களுக்கு சாதகமாகத் திரும்பும் என இடைநிலைக் கட்சிகள் எண்ணுகின்றன.

இந்த எதிர்பார்ப்பில்தான் அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளோடும் உறவில்லை என அநேகமாக எல்லாக் கட்சிகளும் முழங்கி வருகின்றன.

சரி, இந்தக் கட்சிகளின் கணக்கு பலிக்குமா? அதற்கான விடை மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா என்ற கேள்விக்குள் ஒளிந்திருக்கிறது.. அந்தக் கேள்விக்கான விடையை எளிதில் ஊகித்து விட முடியாது.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 1989லிருந்து தமிழக மக்கள், அதிமுக, திமுக இரண்டையும் மாற்றி மாற்றி பதவியில் அமர்த்தி வந்திருக்கிறார்கள்.ஆளும் கட்சியின் மீது அதிருப்தி ஏற்படும் போது முன்பு அவர்கள் நிராகரித்த கட்சியை ‘மன்னித்து’ மீண்டும் அதை ஆட்சியில் அமர்த்துகிறார்கள். எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலம் முழுவதும் திமுகவை நிராகரித்து வந்த மக்கள், அவர் மறைவிற்குப் பின் நடந்த 1989 தேர்தலில் திமுகவை ஆட்சியில் அமர்த்தினார்கள். அந்தத் தேர்தலில் 169 இடங்களை திமுகவிற்கு அளித்த அவர்கள் இரண்டாண்டுகளில் 1991ல் நடந்த தேர்தலில் அதற்கு 2 இடங்கள் மட்டுமே கொடுத்தார்கள். அந்தத் தேர்தலில் 164 இடங்களைப் பெற்று ஆட்சிக்கு வந்த அதிமுகவை அடுத்த தேர்தலில் தூக்கி எறிந்தார்கள். ஜெயலலிதாவே தோற்றுப் போனார். இந்த லாஜிக் படி பார்த்தால் இந்தத் தேர்தலில் திமுகவிற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால்-

அதிமுக ஆட்சி மீது அதிருப்தி இருக்கிறதா? 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அது சந்தித்த இடைத்தேர்தல்கள் எல்லாவற்றிலும் அது வெற்றி பெற்று இருக்கிறது. 2014 மக்களவைத் தேர்தலில், மோதி அலை வீசப்பட்டதாகச் சொல்லப்பட்ட சூழ்நிலையில் அது மாபெரும் வெற்றி பெற்றது. இவற்றைக் கொண்டு பார்த்தால் அதிருப்தி இல்லை எனத் தோன்றும். அரசின் இலவசத் திட்டங்கள் மூலம் கிராமப் புறங்களில் ஒவ்வொரு குடும்பமும் ஏதேனும் ஒரு வகையில் பலன் அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. என்றாலும் டாஸ்மார்க் ஒரு பெரும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருப்பதாக எதிர்கட்சிகள் சொல்கின்றன. ஆனால் மது விற்பனை குறையவில்லை.

தமிழக மக்கள் அரசின் சாதனைகள் அல்லது தோல்விகளை மனதில் கொண்டு வாக்களிப்பதில்லை. உருவாக்கப்படும் தோற்றங்களின் அடிப்படையில் (Perception) வாக்களிக்கிறார்கள். அதிமுக அரசின் மீது ஒரு எதிர்மறையான தோற்றத்தை உருவாக்க எதிர்கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக முயன்று வருகின்றன. ஊடகங்களில் பல குரல்களில் வெளிப்படுத்தப்படும் எதிர்மறையான கருத்துக்களை தனி ஒருவராக எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இன்று அதிமுக இருக்கிறது

ஊடகங்களில் காணப்படும் ஒற்றுமை தேர்தல் களத்தில் உதிரிகளாகப் பிரிந்துவிடும் என்கிற யதார்த்தத்தை அதிமுக நம்புகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவும் என்பது தெளிவாகத் தெரிகிறது. நான்கு அல்லது ஐந்து முனைப் போட்டி நிலவலாம். அப்படி ஒரு சூழ்நிலை, ஆளும் கட்சிக்கு எதிராக பெரும் அலை ஏதும் இல்லை என்றால், அதிமுகவிற்கு சாதகமாக அமையும். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 44.3% வாக்குகளைப் பெற்றது. திமுக 23.6% சதவீத வாக்குகளைப் பெற்றது. பாஜக தலைமையிலான பாமக, மதிமுக இடம் பெற்ற கூட்டணி 18.5 சதவீத வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் 4.3%சதவீத வாக்குகளைப் பெற்றது. இதே போன்ற சூழ்நிலையில் அதிமுகவை வீழ்த்த எல்லாக் கட்சிகளும் இணைந்தால்தான் முடியும். அது நடப்பதற்கு சுயமோகம் இடமளிக்குமா என்பதுதான் கேள்வி.

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *