சந்திரனுக்குப் போகும் முன்னால். . .

இரண்டு நாள்களுக்கு முன் வீட்டிற்குள் வெள்ளம் வரத் துவங்கியது. இன்று வந்து பாருங்கள். அடுக்களை, படுக்கையறை என எல்லா இடத்திலும் ஓரடி உயரத்திற்குத் தண்ணீர் நிற்கிறது என்றார் வள்ளுவர் வீதியில் வசிக்கும் சேவியர்

அவரை விட, அடுத்த வீட்டில் வசிக்கும் ஆனந்த் கெட்டிக்காரர். முதல் நாளே, மோசமாகும் நிலைமை என ஊகித்து, மாடிக்குக் குடிபெயர்ந்து விட்டார். வயதான அம்மாவையும், வளரும் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வேறு என்ன செய்ய? இன்றைக்கு இறங்கி வந்து பார்த்தால், மழைத் தண்ணீரோடு சாக்கடையும் வீட்டிற்குள் நுழைந்து விரவிக் கிடக்கிறது. நாற்றம்!

அப்துல்லாவின் பாடு இதை விடக் கொடுமை. கடந்த இரு நாட்களாக கட்டிலின் மீது நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். கழிப்பறைக்குக் கூடப் போக முடியவில்லை. காரணம் வீடு முழுக்கக் கணுக்கால் அளவுத் தண்ணீர்.

விரித்த குடையும், மடக்கிய கால்சாராயுமாக முட்டியைத் தொட்டுக் கொண்டு ஓடும் தண்ணீரில் நின்றபடி தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அசோசியேஷன் செயலாளர்.

இவையெல்லாம் இந்த மழையின் காட்சிகள் அல்ல. 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி ஹிண்டு ஆங்கில நாளிதழைப் பிரித்தால் இதைப் போன்ற ஏராளமான செய்திகளைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது இது போன்ற காட்சிகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால் காட்சிகள் மாறுவதில்லை.

நாலு தூறல் விழுந்தால் போதும் நம் நகரங்களில் நதிகள் பெருக்கெடுக்கின்றன. அப்படிப் பெருக்கெடுக்கின்றன என்பதை அனுபவ பூர்வமாக நாம் அறிந்திருந்த போதும் அடுத்த மழை வரை நாம் அதைப் பற்றிக் கவலைப்படுவதுமில்லை

காரணங்களை ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: அலட்சியம்.

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டு, துல்லியமாக இல்லையெனினும் என்றைக்கு மழை பெய்யும் என்பதைக் கணித்து விட முடியும்.செவ்வாய்க்குச் செயற்கைக்கோள் அனுப்புமளவு பணமும், திறனும் கொண்ட நமக்கு இந்தத் தொழில்நுட்பம் எட்டாத கனி அல்ல. என்றாலும் அரசுகள் அதில் ஆர்வம் காட்ட விரும்பவில்லை.

வரும் முன் காக்கும் நடவடிக்கையாக வடிகால்களைத் தயார் நிலையில் வைத்திருப்பதற்கு நகர நிர்வாகிகளுக்குத் தேவைப்படுவதெல்லாம் சிறிது முன்யோசனையும் நிறைய அக்கறையும்தான். இதைக் கூடவா நாம் இறக்குமதி செய்ய வேண்டும்?

எப்படியாவது ஒரு கூரை கிடைத்தால் போதும் என்ற தவிப்பில் ஏரிக்குள் வீடு கட்டுகிற மூடத்தனத்திலிருந்து என்றைக்கு விடுபடுவோம்?

ஐயா ஆட்சியாளர்களே, சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புங்கள் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. அதற்கு முன்னால் மழைநாளில் நாங்கள் சாலையைக் கடக்க சற்றே மனது வையுங்கள்.

29.நவம்பர் 2015

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *