இலவசத்தால் இலவசங்களை எதிர்ப்போம்!

நாற்பது வயதிற்குட்பட்டவர்களுக்கு இவரை நன்றாகத் தெரியும். முப்பது வயதிற்குக் கீழ் இருப்பவர்களுக்கு பெயர் சொல்லி அழைக்குமளவிற்கு மானசீகத் தோழர்.இருபது வயதுக்காரர்களுக்கோ இவர் கடவுள். அவர் மார்க் எலியட் சர்கர்பெர்க். சர்ச்சைக்குரிய ’பேஸ்புக்’ நிறுவனர்.

இந்த சர்ச்சைக்குரிய என்ற முன்னொட்டு பேஸ்புக்கைக் குறிக்கிறதா, அல்லது அதன் நிறுவனர் மார்க்கைக் குறிக்கிறதா எனக் கேட்பவர்களுக்கு எனது பதில்: இரண்டையும்தான்

பேஸ்புக் தொடங்கப்பட்ட நாளிலேயே சர்ச்சை முகிழ்த்து விட்டது. அவரது கல்லூரி சீனியர்கள் தங்களுடைய ஐடியாக்களைத் மார்க் திருடிவிட்டதாக வழக்குத் தொடுத்தார்கள். (அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திவ்ய நரேந்திரா) 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் கொடுத்து அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளப்பட்டது. மார்க்கும் சர்ச்சைகளுக்குத் தப்பவில்லை. அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய படத்திலிருந்து – (தி சோஷியல் நெட்ஒர்க்- கோல்டன் குளோப் விருது பெற்றது). யாரோ ஒரு ஜெர்மானியப் பெண்மணி முகமது நபியின் படத்தை வரையும் போட்டியை பேஸ்புக்கில் அறிவித்ததற்காக பாகிஸ்தான் அரசு அவர் மீது குற்ற வழக்குத் தொடர்ந்தது வரை அவர் எதிர் கொண்ட சர்ச்சைகள் ஏராளம்.

இளைஞர்களின் இந்தக் கடவுள் அண்மையில் இந்தியா வந்திருந்தார். தில்லி ஐஐடியில் பேசும் போது ஒரு சர்ச்சைக்கு அல்ல அல்ல விவாதத்திற்கு விதை போட்டிருக்கிறார். கொஞ்சநாளாக வலைவாசிகளிடம் நடந்து கொண்டிருக்கும் பட்டிமன்றம் நெட் நியூட்ராலிட்டியா? ஜீரோ ரேட்டிங்கா?  அதாவது கைபேசி மூலம் இணையத்தில் (இண்டர்நெட்) உலாவ காசு ‘அழ’ வேண்டுமா? அல்லது அது இலவசமாக இருக்க வேண்டுமா?

குறிப்பிட்ட சில இணைய தளங்களை (உதாரணமாக விக்கிப்பீடியா, பேஸ்புக், கூகுள்) சில குறிப்பிட்ட மொபைல் நிறுவனங்கள் வழியாக இலவசமாகப் பெற வகை செய்வது ஜீரோ ரேட்டிங்.. இதற்காகும் செலவை பயனாளர்களிடமிருந்து கட்டணமாகப் பெறாமல் இணைய தள நிறுவனங்களும், மொபைல் நிறுவனங்களும் தங்களுக்குள் பேசி முடித்துக் கொள்வார்கள் இதன் மூலம் வளரும் நாடுகளில் இருக்கும் ஏராளமானோர் இணையத்தைப் பயன்படுத்துவார்கள், அவர்களது படிப்புக்கு இது உதவியாக இருக்கும் என்பது இதனை ஆதரிப்பவர்களது வாதம்

இது ஒரு சில இணையதளங்களுக்கும், சில மொபைல் நிறுவனங்களுக்கும் சாதகமாகவும் மற்றவர்களுக்கு, குறிப்பாக சிறு நிறுவனங்களுக்கு எதிராகவும் அமைந்து விடும். மொபைல் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொட்டி அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியுள்ளன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பலருக்கு வேலை வாய்ப்பளிக்கின்றன. எல்லாம் இலவசம் என்றால் வருவாய்க்கு எங்கு போவது? வருவாய் இல்லாமல் வளர்ச்சி இல்லை என்பது நியூட்ராலிட்டிக்காரர்கள் வாதம்.

மார்க் இலவச கட்சியை ஆதரிக்கிறார். (அவரது நிறுவனம் ரிலையன்ஸோடு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது) ஆனால் நெட் நியூட்ராலிட்டியை எதிர்க்கவில்லை. அது இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் இலவசத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் என்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்தை உதாரணம் காட்டி.

இணையத்தைப் பயன்படுத்தினால், மின்னஞ்சலோ, பத்திரிகையோ, புத்தகமோ, பாட்டோ, சினிமாவோ, தொலைபேசி அழைப்போ, வெற்று அரட்டையோ எதற்கும் பைசா கொடுக்க வேண்டியதில்லை என்பதால் ஆரம்பத்திலிருந்தே இணையம் என்றால் இலவசம் என்று மனதில் விழுந்து விட்டது

கிடக்கட்டும். இந்த இணையம் மட்டும் இலவசமாக இல்லையென்றால் அரசாங்கம் கொடுக்கும் இலவசங்களை எதிர்த்து நம் அறச் சீற்றங்களை எப்படித்தான் வெளிப்படுத்துவதாம்?

15 நவம்பர் 2015

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these