இட ஒதுக்கீடா? முன்னுரிமையா?

அண்மையில் கோவையில் ’கருத்து’ அமைப்பு நடத்திய இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கில் வெளியிடப்பட்ட சில கருத்துக்கள் அரங்கில்  சலசலப்புக்களை ஏற்படுத்தின என்று செய்திகள் வெளியாயின.

இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் பெரும்பாலும் வாதங்கள் கடந்த காலத்தைச் சார்ந்து எழுப்பப்படுகின்றன. ‘2000 வருடத்து இழிவு’ பலமுறை வாதங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றன. நீதியற்ற வர்ணாசிரம தர்மம் என்ற சமூக ஏற்பாடு நிராகரிக்கத் தக்கது. அது ஏற்படுத்தியுள்ள சமூக பேதங்கள் சமன் செய்யப்பட வேண்டியவை என்பதில் சற்றும் சந்தேகமில்லை. கல்வி பெறுவதற்கான வாய்ப்பும், கல்வியின் மூலம் பொருளாதார மேம்பாட்டினை எட்டுவதற்கான வாய்ப்புக்களும் இந்த சமூக பேதங்களைக் குறைக்கப் பெரிதும் உதவும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் அவை மட்டுமே போதுமானவை அல்ல.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவரே ஆனாலும் அவரை அவரது ஜாதியைக் கொண்டு அடையாளப்படுத்துவது நம் சமூகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமூகத்தின் தீய வழக்கங்களைச் சட்டத்தைக் கொண்டு மட்டும் மாற்றி விட முடியாது. அதற்க்குக் கலாசார இயக்கங்கள் தேவை.

கடந்த காலத்தில் ஏற்பட்ட பிறழ்வுகளைச் சமன் செய்ய வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதற்குச் சற்றும் குறைந்ததல்ல, சமகாலப் பேதங்கள் களையப்பட வேண்டும் என்பதும். எனவே இட ஒதுக்கீடுப் பிரச்சினையை எதிர்காலப் பார்வையோடும், சமகால யதார்த்தங்களின் அடிப்படையிலும் அணுகுவதே முறையானது

இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அக்கறை கொண்ட திராவிடக் கடசிகளின் ஆட்சியிலேயே கூட தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி  நிலையங்களில் இருக்கும் இடங்களில் அனைத்தையும் இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டுவர முடியவில்லை.

உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கள் அதற்கு உதவும் வகையில் இல்லை என்பது ஒரு சமகால நிஜம். புதிய அரசு சட்ட மன்றத்தின் முன் வைத்த அதன் கொள்கை அறிக்கையான ஆளுநர் உரையில் அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை அமல் படுத்தும் விதமாகச் சட்டம் கொண்டுவரப் போவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது தனியார் கல்லூரி நிர்வாகிகளுடன் ’பேரம் பேசி’ (negotiate) 65 சதவீத இடங்களைப் பெற்றிருக்கிறது.

தரமான உயர்கல்வி என்பது இன்று தனியார் –அரசு கூட்டுறவில்தான் வழங்கப்பட முடியும். இது இன்னொரு கசப்பான யதார்த்தம்.தனியார் கூட்டுறவில்தான் வழங்கப்பட முடியும் என்னும் போது, அரசு ஆணைகள் இட முடியாது. பேரம்தான் பேச முடியும்.

அரசு விரும்பினால் கூட தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல் செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, அங்கு வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தையும் தீர்மானிக்க முடியாது.பல தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்கள் மாணவர் சேர்க்கை அறிக்கையிலேயே ஆண்டுக்கு 35 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கும் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய். நிர்வாக விஷயங்களில் அரசு தலையிட முடியாது என்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

இந்தச் சூழ்நிலையில் இடஒதுக்கீட்டின் மூலம் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் கூட பிற்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்புக்களைச் சார்ந்த மாணவர்கள், ஏழைகளாக இருந்தால், பொறியியல், மருத்துவக் கல்லூர்களில் சேர முடியாத நிலை எதிர்காலத்தில் ஏற்படும். இப்போதே அந்த நிலை இருந்து வருவதைப் பார்க்கிறோம்.ஆண்டுதோறும் தொழிற்கல்வியில் இடம் கிடைத்தும் சேர முடியாத ஏழை மாணவர்களைப் பற்றிய உருக்கமான செய்திகளை நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன.. சமூகத்தில் பிற்பட்டோர் மேம்படுவதற்கான சாதி ரீதியான இட ஒதுக்கீடு பொருளாதாரக் காரணங்களால் மறைமுகமாகத் தோற்கடிக்கப்பட்டுவிடுகிறது. வசதியுள்ளவர்கள்தான் அவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தொழிற்கல்விக்குச் செல்ல முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு வருகிறது.

இன்னும் சற்று ஆழ்ந்து நோக்கினால் இந்தியா முழுவதும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கிராமப்புற மக்கள் தரமான ஆரம்பக் கல்வியே பெற முடியாத நிலையில் இருக்கிறார்கள். இத்தனைக்கும் ஆரம்பக் கல்வி என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கிற ஓர் அடிப்படை உரிமை!

இட ஒதுக்கீடு விவாதங்களில் மேற்கோள் காட்டப்படுகிற உன்னி கிருஷ்ணன் வழக்கின் (உன்னிகிருஷ்ணன் Vs ஆந்திர அரசு 1993) விளைவுகளில் ஒன்று கல்வி பெறுவதற்கான உரிமைச் சட்டம். அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 83வது திருத்தம் இந்தியாவில் உள்ள 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் கட்டாயமாக இலவசக் கல்வி பெறுவதை ஓர் அடிப்படை உரிமையாக அறிவிக்கிறது.. ஆனால் நிஜம் என்னவெனில் 6 முதல் 14 வயதுவரை உள்ள லட்சக்கணக்கான குழந்தைகள், குடும்பப் பொருளாதாரக் காரணங்களால் கல்வி கற்பதில்லை. ஆரம்பக் கல்வியை எட்ட முடியாதவர்கள் பெரும்பாலும் கிராமப்புறப் பெண் குழந்தைகளாக இருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் முழுமையான சமூக நீதி கிட்ட நாம் சாதிகளின் அடிப்படையில் அமைந்த இட ஒதுக்கீட்டு முறையில், பொருளாதார அம்சங்களையும் கருத்தில் கொண்டு சிற்சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

உதாரணமாக முன்னுரிமை என்ற முறையை அறிமுகப்படுத்தலாம். அதாவது, சமூக யதார்த்தங்களைக் கணக்கில் கொண்டு, சில weightageகளை அறிமுகப்படுத்தலாம். அந்த weightageகளை ஒன்று முதல் 10 என்ற அளவுகோலில் (10 உச்சம், 1 ஆரம்பம்)  இப்படி அமைக்கலாம்

கிராமப்புற, ஏழை, முதல்தலைமுறைப் பட்டதாரி, தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்: 10

கிராமப்புற, ஏழை, முதல்தலைமுறைப் பட்டதாரி, தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆண்: 9

நகர, ஏழை, முதல்தலைமுறைப் பட்டதாரி, தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்: 8

நகர, ஏழை, முதல்தலைமுறைப் பட்டதாரி, தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆண்: 7

கிராமப்புற, ஏழை, முதல்தலைமுறைப் பட்டதாரி, பிற்படுத்தப் பட்ட வகுப்புப் பெண்: 7

கிராமப்புற, ஏழை, முதல்தலைமுறைப் பட்டதாரி, பிற்படுத்தப் பட்ட வகுப்பு ஆண்: 6

கிராமப்புற, ஏழை, தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்; குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் உயர்கல்வி பெற்றவர்: 6

கிராமப்புற, ஏழை, தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆண்; குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் உயர்கல்வி பெற்றவர்: 5

கிராமப்புற தலித் ஆண்/பெண்: 5

நகர்ப்புற பிற்படுத்தப்பட்ட ஆண்/பெண்: 4

இப்படிப் பல weightageகளை வகுத்துக் கொள்ளலாம். இங்கு கிராமப்புறம் என நான் குறிப்பிடுவது பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகள். நகர்ப்புறம் என்பவை பஞ்சாயத்துக்கள் அல்லாதவை. சென்னை போன்ற பெருநகரங்களின் அருகில் அமைந்துள்ள பஞ்சாயத்துக்களுக்கு அவற்றின் தொலைவின் அடிப்படையில் நகரத்திற்கு அல்லது பஞ்சாயத்திற்குரிய மதிப்பீட்டைத் தீர்மானிக்கலாம். ஏழ்மை என்பது குடும்பத்தின் ஆண்டு வருவாயின் அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம். தேவையானால் இந்த மதிப்பீட்டைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கும், அதற்குத் துணை போவோருக்கும் கடுமையான தண்டனைகளையும் அறிவிக்கலாம்.

முறை எதுவாக இருந்தாலும் சமூக நீதியின் பலன்கள் உரியவர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர வேண்டுமானால், வாழ்விடம், பொருளாதாரம், இவற்றின் அடிப்படையில் மதிப்பீடுகள் கொண்ட முன்னுரிமை முறை தேவை.

(தினமணி 15.7.2006).

 

 

 

 

 

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

One thought on “இட ஒதுக்கீடா? முன்னுரிமையா?

  1. Sorry, I don’t know Tamil Computing and hence sending this in English. You can include Economically backward, forward cast families in the above list. For example , ‘Savundi Brahmin” (those who come to carry the dead ) is a category, even regular Brahmins look down upon. Their families also suffer like anything. Some of them suffer, more than ST group. Reservation should include such groups in the forward casts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these