கயல் பருகிய கடல்-மஹா கவிதை விமர்சனம்

எழுத்துக்குள் இனந்தெரியாத நெருப்பொன்று கனன்று கொண்டிருக்கின்றதா? அப்படியானால், அது பாரதியை ஆதர்சமாகக் கொண்ட யாரோ ஒரு உண்மைக் கலைஞனின் படைப்புதான் என்று அறுதியிட்டுச் சொல்லிவிடலாம். அம் மகாகவிஞனின் அகவெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு மென்மையாக நடை இடுவது தான், மாலனின் படைப்புகள். மருட்சி ஏற்படுத்தாத நட்புநடை, புதிய சிந்தனைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும் தீவிரம், தேடல் உணர்வு ஆகியவையே மாலன் எழுத்துக்களின் தனித்தன்மை. இக்கூறுகளை உள்ளடக்கி வெளிவந்துள்ள மாலன் அண்மை வெளியீடு, “கயல் பருகிய கடல்” கட்டுரைத்தொகுப்பு.

கட்டுரை வடிவில் கவிதையைப் பற்றி அதிகம் பேசுவது தான், இந்நூலின் சிறப்பம்சம். “உப்புக்கடலில் உழன்றுத் திரியும் சிறுமீன்’ என்று அவையடக்கமாக மாலன் தொடங்கும் செய்திகள் ஆழமானவை. பாரதி படைப்புகள் குறித்த தேடல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஆய்வாளர்களுக்கும் சமகால இலக்கிய உலகுக்கும் முற்றிலும் புதிய தகவல்களை இந்நூல் கொண்டு வந்து சேர்ந்துள்ளது

வரலாற்றில் இதுவரை நம்பப்பட்டச் செய்தியினை மறுத்து, உண்மையான செய்தியை நிலைநிறுத்தும் போது தேவைப்படும் வலுவான ஆதாரங்களை நழுவல் இன்றித் தந்து தமிழாய்வுத்துறைக்கு வலு சேர்த்துள்ளார், மாலன்

 

“ ஒரு சாதி ஓருயிர்” என பாரதநாட்டு மக்கள் குறித்து பாரதியார் கண்ட கனவை உள் விதைத்து, இந்நூலும் ஒரு பெரும்பயணத்தை முன்னெடுத்துள்ளது. தமிழின் நெடிய வரலாற்றை முழுக்க அளக்கும் முயற்சியில் இந்நூல் தன் வாசகர்களையும் இணைத்துக் கொண்டு செல்வது, இந்நூலின் வெற்றி. நம்மால் சட்டென்று ஏற்க மறுக்கும் இடங்களும் இந்நூலில் உண்டு. ஆனால் இப்படைப்பு முழுக்கச் சுடும் உண்மைகளையும், பார்க்க மறந்த/மறுத்த செய்திகளையும் நிச்சயமாகத் தரிசிக்க முடியும். பெண் எழுத்துக்கு இடமளிக்க மறுத்த மணிக்கொடி இயக்கம் பற்றிய விமர்சனங்கள் கூட அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த இருநூற்றாண்டு கால தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமையாகப் பதிவு செய்துள்ள இந்நூலை எவரும் காயம்படாமல் வாசிக்க இயல்வது தான், வருங்காலத்திற்கு மாலன் சொல்லாமல் சொல்லும் செய்தி.

பெரும்பாலும் தமிழ்க்கவிதை, கவிஞர்கள் குறித்துப் பேசும் ‘கயல் பருகிய கடல்’ நூல், வாசித்து மூடி வைத்த பின்பும், நம் இதயத்தில் இறங்கிக் கொண்டே இருக்கின்றது, மறக்கவியலாத ஒரு கவிதையைப் போல!

 

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *