புல்மனம்

உடல் நடக்கும் போதெல்லாம்

நிழல் நடக்கும்-

ஆனால்

கனல் சுமக்கும் மனம் மட்டும்

விழித்திருக்கும்

 

மலை நடந்து போவது போல்

மழை நடக்கும்; செடி ஒடுங்கும்

மரம் நடுக்கித் தரையெங்கும்

மலர் சிதறும்

ஆனால்

ஊர் பார்க்க ஒருபோதும் பூத்திராத

புற்கள் மட்டும் மல்லாந்து சிரித்திருக்கும்

 

*நடப்பதுவே வாழ்க்கையென்று நம்பிச் சொன்ன

நாட்களிலும் நடைபழகக் கற்கவில்லை

ஆனால்

நடனங்கள் புரிந்ததுண்டு அரங்கமேறி

 

ஜெயிப்பதுவே வாழ்க்கையென்று புரிந்த போது

சிறகு வர, கனம் தொலைய, கவிதை தோன்றும்

 

நடப்பதுவோ, ஜெயிப்பதுவோ கவிதை வேண்டும்

மல்லாந்த புல் போன்ற மனது வேன்டும்.

பொய்யின்றிச் சிரிக்கின்ற பெண்ணைப் போல

புதுப் புதிதாய்க் கவியூறும் மனது வேண்டும்

 

*எந்த இடத்தையும் அடைய அல்ல, சும்மா நடக்கவே விரும்புகிறோம் நாம்

-வாசகன் என்ற என் சிற்றிதழின் கொள்கை அறிவிப்பு

குமுதம்

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *