மாலன் சிறுகதைகள் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்

மாலனின் சிறுகதைத் தொகுப்பை மறுபடி படித்துக் கொண்டிருந்தேன், நுட்பமாகவும், தனித்துவமிக்கதாகவும் உள்ள இவரது சிறுகதைகள் மறுவாசிப்பில் மிகவும் நெருக்கமாக இருந்தன, மாலனின் கதைகளில் வரும் மனிதர்கள் பெரும்பகுதி நடுத்தர வர்க்கம், அவர்களின் அக,புற பிரச்சனைகளும் அது உருவாகி வெளிப்படும் விதமும் விசித்திரமாக இருக்கின்றன, அசோகமித்ரன் காட்டிய மத்தியதர உலகம் ஒரு பக்கம், ஆதவன் காட்டிய உலகம் இன்னொரு பக்கம் என்றால் இரண்டின் சாயலுமின்றி நடுத்தர வர்க்க உலகின் திண்டாட்டங்களை, சின்னஞசிறு சந்தோஷங்களை. வெளிப்படுத்த முடியாத துக்கங்களை தனது எழுத்தில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் மாலன், ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் தன்னைச் சுற்றிய சமகாலப் பிரச்சனைகளின் மீதான எதிர்வினையும், அது தனிநபர்கள் மீது உருவாக்கும் பாதிப்புகளும் அவரது கதைகளில் இடைவெட்டாக வந்து போகின்றன, அது கதைகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்குகின்றன. வண்ணநிலவன், வண்ணதாசன், ஆதவன், மாலன் என எழுபதுகளில் உருவான சிறுகதை ஆசிரியர்கள் எல்லோரிடமும் கவித்துவமான கதை சொல்லும் முறை இருக்கிறது, சிறுகதையின் வடிவத்தைப் புத்துருவாக்கம் செய்வதிலும், மொழியின் வீச்சிலும் ஒவ்வொருவரும் ஒரு ரகம், வண்ணநிலவனின் கதைகளை வாசிக்கையில் அவர் எவ்வளவு கச்சிதமாகச் சிறுகதையைக் கையாண்டு இருக்கிறார் என வியப்பாகவே உள்ளது, மாலனிடம் புதுமைப்பித்தனின் கதை சொல்லும் முறையும் பகடியும் ஒன்று கலந்திருப்பதை மறுவாசிப்பில் உணர முடிகிறது, சின்னஞ்சிறிய வாக்கியங்கள், கூர்மையான உரையாடல்கள், நினைவோட்டத்தை எடுத்துச் செல்லும் தேர்ந்த விவரிப்புகள், சட்டென ஒரு இடத்தில் கதை வாசகனைத் தனக்குள் முழுமையாக இழுத்துக் கொணடு விடுகிறது, வாசகனுடன் தோழமையான கதை சொல்லும் முறையை கைக்கொள்வதே இவரது தனிபலம் என்பேன் குறிப்பாக புதுமைபித்தனின் எக்ஸ்ரே என்ற இந்தச் சிறுகதையை வாசித்த போது ஆதவன் புதுமைபித்தனின் துரோகம் என்றொரு சிறுகதை எழுதியிருப்பது நினைவில் வந்து போனது, அது வேறுவகை, மாலனின் கதையில் புதுமைபித்தன் ஒரு கதாபாத்திரமாக வருகிறார், கடவுளும் கந்தசாமி பிள்ளையும் கதையில் எந்த ஹோட்டலில் காபி குடித்தார்களோ அதே ஹோட்டலில் காபி குடிக்கிறார்கள், புதுமைபித்தனை தனது வீட்டிற்கு அழைத்துப் போகிறார், டிவி பார்க்க வைக்கிறார், இயந்திர உலகை புதுமைபித்தன் எப்படி எதிர்கொள்கிறார் என்பது புதுமைப்பித்தனின் பாணியிலே வெளிப்படுத்தபடுகிறது, இக்கதையில் புதுமைபித்தன் ஹோட்டலில் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வீதியில் ஒரு கலவரம் நடந்து சிலர் உள்ளே புகுந்து பெரியவரே உனக்கு காபி கேட்குதா என அவரை மிரட்டுகிறார்கள், கண்முன்னே உலகம் வன்முறையின் களமாகிப் போய்விட்டதை புதுமைப்பித்தன் பார்க்கிறார், எதற்காக இந்த கலவரம், யார் இவர்கள் எதுவும் அவருக்குப் புரியவில்லை, இந்த பத்தியை படித்தபோது நமது அன்றாட வாழ்வு எந்த அளவு சீர்கெட்டுப்போயிருக்கிறது என்பது துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருப்பதை உணர முடிந்தது, கதையில் புதுமைப்பிதத்ன் ஒரு எழுத்தாளர் என்பதாக மட்டுமின்றி காலத்தின் குறியீடு போல மாறியிருக்கிறார், கதையின் முடிவில் உள்ள புதுமைபித்தனின் ஆதங்கம் மிக இயல்பாக வெளிப்படுகிறது, இக்கதை வெளியாகி குறைந்தது இருபது வருஷங்கள் இருக்க கூடும், இன்று நவீன தொழில்நுட்பம் இன்னும் அதிகமாக வளர்ந்திருக்கிறது, ஆனால் கதையின் கடைசி வரியில் உள்ள புதுமைப்பித்தனின் ஆதங்கம் இன்றைக்குமிருக்கிறது எனக்கு கதையில் மிகவும் பிடித்த வரி புதுமைப்பித்தனின் எக்ஸரே தன்னிடமிருப்பதாக கதை சொல்லி முடிப்பது, புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே இலக்கியத்திற்காகவே வாழ்ந்து அழிந்த ஒரு கலைஞனின் குறியீடு, தமிழின் மகத்தான காதல் கதை என புதுமைபித்தனின் செல்லம்மாள் சிறுகதையை எப்போதும் குறிப்பிடுவேன், எண்ணிக்கையற்ற சிறந்த சிறுகதைகளை எழுதி தன் எழுத்தின் வழியே என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் புதுமைபித்தனுக்கு மாலனின் சிறுகதை ஒரு புத்துயிர்ப்பை தருகிறது, அதற்காக மாலன் மிகுந்த பாராட்டிற்குரியவர்,

http://www.sramakrishnan.com/?p=3551

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *