புதிய வருணங்கள்

     இது அசுர சாதனைதான் ; வீட்டில் இரண்டு பேர் பெயருக்குப் பின்னால் பட்டம் ; அக்காவின் கழுத்தில் தாலி ; அதில் தொற்றிக் கொண்டு வரும் தீபாவளி, கார்த்திகை சீர்கள் …  ஒரு  செகண்டரி  கிரேட்  தமிழ் வாத்தியார் உத்தியோகத்தில் இது அசுர சாதனை  தான்.  இது  அப்பாவிற்குத்தான்  முடியும்.

       தன்னால் ஒரு போதும் இந்த அப்பாவாக இருக்க முடியாது என்று இவன் நினைத்தான். பற்றாக்குறை  பட்ஜெட்டில்  இழுத்துப்  பறித்துக்  கொண்டு  காலம்  முழுக்க ஓட்ட முடியாது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று பள்ளிக்கூடத்திற்குள்  முழங்கிவிட்டு, படிப்பு வாசனை இல்லாமல் பண வாசனை வீசுகின்ற  கிராமத்துப் பெரியதனத்தின் முன்னால் ஓடிப் போய்த் துண்டைக் கட்டிக்கொண்டு  நிற்க  முடியாது.

       ஆனால் இதற்கெல்லாம் இந்த மண்ணை விட்டுப் போக வேண்டும். இங்கே இழுத்துப்  பிடித்துக்  கொண்டு  இருப்பது  இந்த  மண்ணின்  ஈரமில்லை. இப்போதெல்லாம் பாதி நாள் காவேரி மணலாய் ஓடுகிறது. இந்தப் பசுமையெல்லாம் போலி.  இதற்குப்  பின்னால்  எரிகிறது  தீ.

       இந்தத்  தீயின்  தகிப்புத்தான்  அம்மாவின் சத்தம். கருகிப் போன கனவுகளின் சத்தம். கடன்களுக்குத்  தவணை  கேட்கும்  எரிச்சல்களின்  சத்தம்.  அடுத்த கடன்களுக்குப்  போய்  நிற்கும்) அவமானத்தின் சத்தம். சமையலறையில் எப்போதும் நிறைந்து இருப்பது அதுதான். அப்பா வந்ததும் முணுமுணுப்பாய் இறங்கிக் கொள்ளும். இவனுடைய வீட்டில் இந்தச் சத்தம் கேட்கக் கூடாது. விடமாட்டான். இவனும் வாத்தியாராகி, கையில் சாக்பீஸ் புழுதியோடு வீடு திரும்பும்  அப்பாவாக  மாட்டான்.

       ஆனால், இந்தக் குக்கிராமத்தில் கிடைக்கக் கூடியதெல்லாம் இதுதான். மாசம் தொண்ணூத்தஞ்சு ரூபாய்க்கு டைப் மிஷினில் விரலை மேய்க்கிற வேலை. ஏதாவது பலசரக்கு  மொத்தக் கடையில் சிட்டையில் பெயர்த்து எழுதும் வேலை. இல்லையென்றால்  ஒரு  கூரை  ஸ்கூலில்  உத்தியோகம்.

       அம்மாவின்  சத்தம்  பொறுக்க  முடியவில்லை.  எழுந்து  எங்கேயாவது  வெளியில் போய்விட வேண்டும்  போல்  இருந்தது.  வெளியே  வந்து  நிலையில்  சாய்ந்து கொண்டு தெருவைப் பார்த்தான். ஏழு மணிக்கே நடமாட்டம் ஓய்ந்து போய் நிசப்தமாய்  சலனமில்லாமல்  இருந்தது.

       ஸ்ரீநிவாசன், ஊரை விட்டுப் போனதற்குப் பின் அநேகமாய் இப்படி நிசப்தம்தான். அவன்  ரத்தத்தில் வியாபாரம் ஊறவில்லைதான். ஆனால் அவன் அப்பா, வியாபாரத்திற்குக் கடன் கொடுக்கும் பொருளாதார நிறுவனம் ஒன்றில் எக்ஸிக்யூட்டிவாக இருந்தார். ஸ்ரீநிவாசன் இங்கே தாத்தா வீட்டில் இருந்து படித்தான். அடுத்த ஊரிலிருந்த கல்லூரிக்கு இரண்டு பேரும் ஒன்றாய் ரயில் பிடித்துப் போய் வந்தார்கள். பரீட்சை எழுதிவிட்டு, கிராமத்துப் பசுமைதான் அழகு, அதுதான் சந்தோஷம், நகரத்தில் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலும் இந்த நிம்மதி வராது என்று பேசிக் கொண்டிருந்தான். அவனுடைய அப்பா ‘ ஒரு ஜுனியர் எக்ஸிக்யூடிவ் வேலை பார்த்து வைத்திருக்கிறேன். உடனே வா என்று எழுதிப் போட்டவுடன், எல்லாவற்றையும் உதறிப் போனான். அது வெறும் ரயில் சிநேகிதம்.

       தூரத்தில்  அப்பா வருவது தெரிந்தது. மெதுவாய் தளர்ச்சியான நடை. அப்பா ரொம்ப தழண்டுதான்  போய்விட்டார்.  அசுர  சாதனைகள்  நிறைய  கிழித்து இருக்கின்றன.

       ‘ போறும்பா, நீங்க ஒதுங்கிக்கோங்கோ   என்று  சொல்லி இவனுக்கு இன்னும் நிழல் கிடைக்கவில்லை.

       நிழல்தான், இப்படி சௌகரியமாய் சாய்ந்து கொள்ள ஒரு தூண்தான் வேண்டும், கொஞ்ச நாளைக்கு, அது சென்னையிலோ பம்பாயிலோ வேண்டும். ஸ்ரீநிவாசன் மாதிரி கைதூக்கிவிட ஆள் இல்லாத போனாலும் காலூன்றிக் கொள்ள அங்குதான் முடியும். சென்னையில் தங்கியிருந்தால், கையில் ஃபைலுடன், காலில் வலியுடன் நாயாய்ச் சுற்றலாம்.  எங்கேயாவது  ஒரு  வேலையில்  தொற்றிக் கொள்ள முடியும். பின், கொஞ்சம்  கொஞ்சமாய்  மேலே  போவதற்கு ஈவ்னிங் காலேஜில் டிப்ளமா. இப்படி மெல்ல மெல்ல உயர்ந்து நாற்பது வயதில் ஃபேன் அடியில் உட்கார்ந்து அடுத்தவனைக் கேள்வி கேட்கும் எக்ஸிக்யூட்டிவ்… ஆனால் அதற்கு முதலில் இந்த வேலை தேடும் படலத்தின் போது சோறும் நிழலும் கொடுக்கும் ஓர் இடம் வேண்டும். சொந்தத்தில், நண்பர்களில்  எவ்வளவு  துழாவிப்  பார்த்தும்  அதுதான்  கிட்டவில்லை…

       அப்பா சாப்பிட்டுக் கையலம்பும் சத்தம் கேட்டது. கை நிறைய வெற்றிலையை எடுத்துக்  கொண்டு  திண்ணையில்  வந்து  உட்கார்ந்து  கொண்டார்.

       “ என்னடா  ராஜு,  ஆகாசத்திலே  என்ன  பாத்துண்டு  இருக்கே … ? ’‘

                இவன் திரும்பிப் பார்த்தான். நிலைக் கதவைப் பிடித்துக் கொண்டு அம்மாவும் நின்று கொண்டிருந்தாள். இந்த அக்கறையான குரல், நிதானம், அம்மாவும் வந்து நின்று கொண்டிருப்பது எல்லாம் ஏதோ ஒரு பெரிய விஷயத்திற்கான ஆயத்தம் என்று தோன்றியது. ஒன்றும் பேசாமல் மீண்டும் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். நிலா வெளிச்சத்தில்  ஒரு  மேகக்  கப்பல்  மிதந்து  கொண்டிருந்தது.

       “ ஏன்  தனிச்சுப்  போய்  நிக்கற ?  இப்படி  வாடா …

                அப்பா  ரிடையர்  ஆயிட்டார்டா,  ராஜு.

       நெஞ்சு ஒரு  கணம்  திக்கென்று  அடித்துக்  கொண்டது. இவன் திரும்பி அப்பாவைப் பார்த்தான். நிதானமாய் வெற்றிலையை மடியில் துடைத்துக் கொண்டிருந்த கை நின்றிருந்தது. அம்மாவை முறைத்துக் கொண்டிருந்தார்.  நிதானமாய்,  நைச்சியமாய்ச் சொல்ல  இருந்த விஷயத்தை இப்படி ‘ தடால்   என்று போட்டு விட்டாயே என்னும் முறைப்பு.

       இவன்  அப்பாவின்  அருகே  வந்தான்.

       “ எப்போலேர்ந்துப்பா … ?

                இன்னிலேர்ந்துதான். போன வருஷமே வயசாயிடுத்து. வெளியிலே போயிடுங்கோன்னா.  அப்புறம் கரெஸ்பாண்டெண்டே போயி, உன் படிப்பு முடிஞ்சிடட்டும்னு கேட்டுண்டவுடன் ஒரு வருஷம் எக்ஸ்டென்ஷன் தந்தா. இதெல்லாம் யாரண்டையும் நான் சொல்லிக்கலை.  சொல்லி  என்ன  ஆகப்  போறது … ?

                இனிமேல்  இந்த  வண்டி  எப்படி ஓடப் போகிறது ? சுமைகள் ஏறி அழுந்த ஓடி ஓடிச்  சுற்றிய  அச்சு,  நாள்பட்டு  இன்று  முறிந்து  போய்விட்டது.

       அம்மா  வாய்விட்டே  கேட்டு  விட்டாள்.

       “ இனிமே எப்படிக் காலம் தள்றது … என்னமோ … அந்த பகவான்தான் வழி காட்டணும் …

                “ … பகவான்  நம்மைக்  கைவிடலேடி.  அதுக்கு  ஒரு  ஏற்பாடு  பண்ணியிருக்கேன்.

       “ நான் பாத்துண்டு இருந்த உத்தியோகத்தை நம்ப ராஜுவுக்குப் போட்டுக் கொடுக்கறேன்னு கரஸ்பாண்டெண்ட் ஒத்துண்டிருக்கார். இவன் போய் ஏத்துக்க வேண்டியதுதான் … என்னடா ராஜு … ?

                இவன் அதிர்ந்து போனான். ‘ குலை தள்ளின வாழை சரியும் போது கீழ் நிற்கும் கன்றையும் பெயர்த்துக் கொண்டு நிற்பது மாதிரி இது என்ன அப்பா …  தானும் ஒரு வாத்தியாரா ?  கடைசி மூச்சு வரை வாழ்க்கையோடு இழுபறி ஆடும்  வாத்தியாரா ? குடும்ப எந்திரத்தில் நசுங்கி எல்லாத்தையும் அடமானம் வைக்கும் ‘ எழுத்தறிவிக்கும் இறைவனாக   வா ?

       தானும் ஓர் அப்பாவா ?

       அப்பாவைக் கூர்ந்து பார்த்தான். இப்போது அப்பா மீது கோபம் வரவில்லை. தன்னுடைய படிப்பு பாதியில் சிதறக்கூடாது என்று தன் நிழலிலேயே இடறிக்கொண்ட அப்பா … யோசித்துப் பார்க்கும்போது அப்பா எதையுமே சிதற விடவில்லை. அக்கா கல்யாணம், குடும்ப வண்டி, தன் படிப்பு …  எதையுமே,  வேண்டுதலுக்காய் தெருவில் தலை மோதித் தெறித்துப் போகும் விடலைத் தேங்காயாய் அவர்தான் சிதறிப் போயிருக்கிறார்.  தன்னாலும்  ஓர்  அப்பாவாய்  இருக்க  முடியும்.

       “ அவன் என்ன சொல்றது ? வேலைக்கு அவனவன் நாயாய் அலையறான். வாத்தியார் வேலைன்னா வலிக்கிறதா ? ” – அம்மா வழக்கம் போல் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

       “ நான்  போய்  மரியாதைக்கு  கரண்பாண்டெண்டைப்   பார்த்துட்டு  வந்திடறேன்பா …

                உள்ளே போய் ஸ்லாக்கை மாட்டிக் கொண்டு வந்தான். இவனுடைய எக்ஸிக்யூட்டிவ் ஆசை … ?  இங்கே  அதெல்லாம்  முடியாது.  இங்கு எக்ஸிக்யூடிவ் பையன் வியாபாரி.  வாத்தியார் பையன் வாத்தியார்.  இது  இன்றைய புதிய வருணாசிரமம்.

 

ஆனந்த விகடன்

      

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these