வேணாம் இந்த வெ(ட்)டி வேலை!

தீபாவளிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை

எதிர்பாராத நேரத்தில், இரண்டு தெரு தள்ளி, தீபாவளிக்குப் பட்டாசு வைத்தாலே எனக்குப் பதறும். காலடியிலேயே ஒரு கைக்குண்டை வீசி எறிந்தால் எப்படி இருக்கும்?

அப்படி ஒரு குண்டைத் தூக்கி வீசினார் நண்பர். நமக்கு நண்பர்களைத் தவிர வெடி வைப்பவர்கள் வேறு யார்?

தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன், நூலாக வெளியிடப் போகிறேன் நீங்கள் முன்னுரை ஒன்று எழுதித் தர முடியுமா எனக் கேட்டு நண்பர் மின்னஞ்சல் அனுப்பிய போது எனக்குத் திகைப்பும்  பின் மெலிதாக ஒருமகிழ்ச்சியும் ஏற்பட்டன.

என் திகைப்பிற்குக் காரணங்கள் பல. கீதாஞ்சலி என்ற பெயரில் இன்று நமக்கு ஆங்கிலத்தில் கிடைக்கப்படும் பாடல்கள், தாகூர் ஒரே மூச்சில், ஒரு நூலாக எழுதியவை அல்ல. அவற்றில் உள்ள 52 பாடல்களை மட்டும் அவர் வங்கமொழியில் கீதாஞ்சலி என்ற பெயரிலேயே எழுதினார். மற்ற பாடல்கள் அவர் எழுதிய வேறு மூன்று நூல்களிலிருந்து தொகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

1912ம் வருடம் தாகூர் இங்கிலாந்திற்கு ஓர் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்திற்கு முன், அவரே தனது பாடல்களை மொழி பெயர்த்தார். மொழி பெயர்க்கும் போது, அவர் எழுதிய வரிகளில் சிலவற்றை அவரே ஒதுக்கித் தள்ளினார். தன்னுடைய வேறு சில கவிதைகளை ஒருங்கிணைத்து ஒரு பாடலாகச் செய்து கொண்டார். வங்க மொழியில் கவித்துவம் நிரம்பித் ததும்பும் சில வரிகள் மொழிபெயர்ப்பின் போது தட்டையாகப் போய்விடும் எனக் கருதி அவர் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கலாம். மொழி தெரிந்தால், கவிதைகளில் உள்ள வார்த்தைகளை மொழிபெயர்த்து விடலாம். ஆனால் அந்த வார்த்தைகளுக்குள் உறைந்து நிற்கும் உணர்வை. கவி மனத்தை, அதன் முனைப்பை மொழி பெயர்க்க முடியுமா?

இப்போதும் கூட என் வங்காள நண்பர்கள், “கீதாஞ்சலியை நீங்கள் வங்காளத்தில் படிக்க வேண்டும். அது தரும் அனுபவத்தை, தாகூருடையதேயானலும், மொழிபெயர்ப்புத் தருவதில்லை. ஆகா! வங்காளத்தில் உள்ள அந்த சந்தம்!” என்று சொல்கிறார்கள்.

என்றாலும் தமிழில் சிலர் ஏற்கனவே கீதாஞலியை மொழிபெயர்த்திருக்கிறார்கள். நான் படித்தவற்றில் இளங்கம்பனுடைய மொழிபெயர்ப்பு சிறப்பானது. பாண்டியன் என்பவரும் கூட மரபுக் கவிதை வடிவிலேயே கீதாஞ்சலியை மொழிபெயர்த்திருப்பது இப்போது நினைவுக்கு வருகிறது.

ஆனால்கீதாஞ்சலியை மொழிபெயர்ப்பது எளிதான வேலை அல்ல. தாகூருக்கே அது எளிதான வேலையாக இருந்ததில்லை. கீதாஞ்சலி முதன்முதலில் 1913ம் ஆண்டு ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தது. அப்போது தாகூர்தான் அதை மொழிபெயர்த்தாரா என்று ஐரோப்பியர்களுக்கு சந்தேகம். ஏனெனில்  ஆங்கிலேயரல்லாத தாகூருக்கு, கவிதையை மொழிபெயர்க்கும் அளவிற்கு ஆங்கிலத்தில் போதுமான மொழிவளம் இருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் எண்ணினார்கள். (ஆனால் அவர்கள் முகத்தில் எல்லாம் தாகூர் கரியைப் பூசினார். இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஐரோப்பியரல்லாத முதல் கவிஞர் தாகூர்தான்) அதை டபிள்யூ பி. ஏட்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞர் மொழி பெயர்த்திருக்கலாம் எனப் பலர் சந்தேகப்பட்டார்கள். ஏனெனில்  ஏட்ஸிடம் அந்த நூலின் பிரதிகள் பலகாலம் இருந்தன. ” நான் இந்த மொழி பெயர்ப்பின் பிரதிகளை பலநாட்கள் வைத்திருந்தேன். ரயிலிலாலோ, ஆம்னி பஸ்களிலோ பயணம் செய்யும் போதும், உணவு விடுதிகளில் அமர்ந்திருக்கும் போதும் அதைப் படித்து வந்தேன்” என்கிறார் ஏட்ஸ். 

அன்று ஆங்கிலேயர்கள் ரவீந்திரநாத்திற்கு ஆங்கிலம் தெரியுமா என்று சந்தேகப்பட்டதற்கு ஆணவம் மட்டும் காரணம் இல்லை.அன்று அவர்களுக்கு ரவீந்திரநாத்தைத் தெரியாது. அவரது நூலுக்கு முன்னுரை எழுதிய ஏட்ஸ் எழுதுகிறார்: ” சில நாட்களுக்கு முன் நான் ஒரு புகழ் பெற்ற வங்காள மருத்துவரிடம் சொன்னேன்.எனக்கு ஜெர்மன் மொழி தெரியாது. ஆனால். நான் மொழிபெயர்ப்பில் படிக்க நேர்ந்த ஒரு ஜெர்மன் கவிஞன் என்னை நெகிழச் செய்திருந்தால், நான் நேரே பிரிட்டீஷ் அருங்காட்சியகத்திற்குச் சென்று, அங்கு அவனது வாழ்க்கையைப் பற்றி, அவனது சிந்தனைத் தடத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்கள் ஏதாவது இருக்கிறதா எனத் தேடிப்பார்ப்பேன். ஆனால் சமீபகாலமாக எனக்கு ஏற்பட்டிராத ஒரு கிளர்ச்சியை என் ரத்தத்தில் ஏற்படுத்திய ரவீந்திரநாத்துடைய உரைநடையின் இந்த மொழிபெயர்ப்பைப் படித்த போதிலும் எனக்கு அவரது வாழ்க்கையைப் பற்றியோ, இந்தப் படைப்புக்களுக்குக் காரணமான அவரது எண்ண ஓட்டத்தைப் பற்றியோ பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை.” என்று சொன்னேன்.

தாகூரைப் படித்த ஒருவன், மனதைப் பறி கொடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் என்பதைப் போல், அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அந்த டாக்டர் சொன்னார், ” எங்கள் மொழியில் வேறு பல கவிஞர்களும் இருக்கிறார்கள், ஆனால் இவரைப் போல ஒரு சகாப்தம் யாரும் கிடையாது. அவர் கவிதையில் மட்டுமல்ல, இசையிலும் பெரிய ஆள். அவரது பாடல்கள், இந்தியாவின் மேற்குப் பகுதி முழுவதும் வங்காளத்திலிருந்து , பர்மா வரை, வங்க மொழி பேசும் பகுதி முழுக்கப் பாடப்படுகின்றன. அவரது முதல் நாவல் வெளியான போது அவருக்கு வயது 19. அப்போதே அவர் மிகவும் பிரபலமான ஆள். அவரது சிறு வயதில் அவர் இயற்கையைப் பற்றி எழுதினார். 20 வயதிலிருந்து கொஞ்ச காலத்திற்கு, 35 வயது வரை இருக்கலாம், ஆழ்ந்த சோகத்தில் இருந்த போது, மிக அழகான காதல் கவிதைகளை எழுதினார்” என்று சொல்லியவர், குரலில் உணர்ச்சி பொங்க, “அந்தக் காதல் கவிதைகள் எனது 17 வயதில்  என்னைப் படுத்திய பாட்டை வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்றார்”

ரத்தத்தில் கிளர்ச்சி ஏற்படுத்தும் கவிதைகள், சகாப்தம் என்று வர்ணிக்கப்படும் ஒருவரது கவிதைகள், படிக்கிற இளைஞர்களைப் பாடாய்ப்படுத்துகிற கவிதைகள் எனப் பலப் பெருமைகள் கொண்ட கவிதைகளை மொழிபெயர்த்துவிடுவது முடிகிற காரியமா?

என்றாலும் தாகூர் பேசுகிற செய்திகள், அவருக்குப் பின் தமிழர்களுக்கு வேறு ஏதேதோ வடிவங்களில் வந்து சேர்ந்திருக்கின்றன.அந்தக் கருத்தாங்கங்கள் தமிழ்ச் சமூகத்தின் மேடைகளில் அநேக முறை பேசப்பட்டு இன்று அவற்றின் மேல் தூசு படிந்து கிடக்கின்றன. எனவே தாகூரின் கவிமனதைப் புரிந்து கொள்ள நமக்கு முடியாமல் போனாலும் கூட அவரது கருத்துக்களை நம்மால் நன்றாகவே விளங்கிக் கொள்ள முடியும்.

நிறுத்து

மந்திரம் சொல்லி, தோத்திரம் பாடி

ஜெபமாலை உருட்டுவதை நிறுத்து.

கோவில் கதவுகளடைத்து

இருட்டு மூலையில் நீ

கும்பிடுவது யாரை?

கண் திறந்து பார்

கடவுள் அங்கில்லை

இறுகிய மண்ணைக்

கீறி விதைக்கும் உழவன்

பாதை அமைக்கக்

கதிரில், மழையில்.

கல்லுடைக்கும் தொழிலாளி

இவர்களோடு இருக்கிறான்

இறைவன்

புழுதிபடிந்த ஆடை சூடி

 (கீதாஞ்சலி: 11ம் கவிதை.)

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம் என்ற முழக்கத்தின் ஊற்றுக்கண்கள் எவை என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

 இன்னொரு  உதாரணமும் பார்க்கலம்.

அன்பு காட்டுகிறோம் என்ற பெயரில் தங்கமும் வைரமும் கொண்டு குழந்தைகளை அலங்கரித்து அவர்களை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைப்பதும், ந்தக் குழந்தைகள் ஜன்னல் வழியே வீதிப் புழுதியில் விளையாடிக் களிக்கும் குழந்தைகளை ஏக்கப்பார்வை பர்க்கும் காட்சிகளை எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதைகளாக எழுதிக் குவித்திருக்கிறார்கள். தாகூர் எழுதுகிறார்:

கழுத்தில் ஒளிரும் பொன்நகை

உடலைச் சுற்றிய பட்டாடை

இளவரசன் போலிருக்கிறான்

என்ன பயன்

இழந்துவிட்டான்

விளையாட்டின் சிரிப்பொலியை

 

பட்டாடை படியில் தடுக்கும்

கசங்கும், கறைபடும் என்றஞ்சி

வீட்டுக்குள் முடங்கி விட்டான்

அசையக் கூட அச்சம்

ஆரோக்கியமான தெருப்புழுதிக்கும்

சாதாரணமனிதனின் சந்தோஷங்களுக்கும்

அனுமதியின்றி அடைத்து வைத்தால்

அம்மா!

உங்கள் பொன்விலங்கிற்குப்

பொருளில்லை

(கீதாஞ்சலி8ம் கவிதை)

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படத்தின் பாடல் ஒன்று, சகியே… உன் முன் என் கர்வம் அழிந்ததடி என்று முழங்குகிறது. அதுவும்கூட கீதாஞ்சலியிலிருந்து கிளைத்த வரிதான். My poet’s vanity dies in shame before thy sight என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு அது

கீதாஞ்சலியின் சில வரிகள் கடவுளைக் குறிக்கிறதா, அல்லது காதலியைக் குறிக்கிறதா என்று பலகாலமாகவே ஒரு சர்ச்சை உண்டு.

முகில் மேல் முகில்

கவியச் சூழ்கிறது இருள்

அன்பே

என்னைத் தனியே தவிக்கவிட்டு

கதவருகில் காக்க வைப்பது ஏன்?

(கீதாஞ்சலி::18ம் கவிதை )

பேசாவிட்டால் போ

உன் மெளனத்தால்

இதயம் நிரப்பி

அத் துயரம்

பொறுத்திருப்பேன்

தாரைகை போல் விழித்திருந்து

தலை கவிழ்ந்து

இரவைப் போல் உறைந்திருப்பேன்

 

நிச்சயம் விடியும்

இருள் விலகும்

வானத்தைப் பொத்துக் கொண்டோடும்

பொன்னோடை போல

உன குரல் பொழியும்

(கீதாஞ்சலி 19ம் கவிதை)

இந்தியத் தத்துவ மரபை அறிந்தவர்களுக்கு இந்தக் குழப்பங்கள் அதிகம் எழாது. மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை, வைணவ மரபில், நாயகன் நாயகி உறவாக, காதலன் காதலி உறவாக சித்தரித்துப் பாடுவது உண்டு. ஜெயதேவரின் பாடல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.பாரதியின் கண்ணன் பாட்டுக்களை இந்தக் கோணத்தில் பார்த்தால் பல புதிய வெளிச்சங்கள் கிடைக்கும்.வங்காளத்தில் பெளல் (baul) என்ற ஒரு இசைமரபு உண்டு. காதல் பாட்டுக்கள் மூலம் இறைவனை எண்ணிப் பாடும் துறவிகளின் மரபு அது. வங்கக் கலை இலக்கியத்தில் அந்த மரபின் செல்வாக்கு கணிசமாக உண்டு. தாகூரும் அதன் பாதிப்பிற்கு உள்ளானவர் என்பதற்கு அவரது பல பாடல்கள் சான்றாக நிற்கின்றன. இந்த மரபைப் பற்றி தாகூர் 1940களில் ஐரோப்பாவில் விரிவாக உரைகள் நிகழத்தினார் (அவற்றை அவரது Religon of Man என்ற கட்டுரைத் தொகுப்பில் காணலாம்) இப்போதும் ஹோலிப் பண்டிகையின் போது சாந்திநிகேதனில் பெளல் பாடகர்கள் இசை நிகழ்சிகள் நடத்துகிறார்கள்.

நடு வயதிற்குப் பின் தாகூர் இறை நம்பிக்கை, தத்துவச் சிந்தனைகள் இவை செறிந்த கவிதைகளை இயற்றினார் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் அவரது இறை உணர்வு என்பது மனிதனுக்கும் இறைவனுக்குமான உறவைப் பற்றியதாக இருந்தது. மனிதனை நிராகரித்து இறைவனைத் துதிக்கிற கவிதைகளை அவரிடம் காண முடியாது. வாழ்க்கையை நிராகரிக்காத துறவி அவர்.

தாகூரின் இத்தனை பரிமாணங்களையும் சுமந்து நிற்கிறது கீதாஞ்சலி. இவை அனைத்தையும் வெளிப்படுத்தாத மொழிபெயர்ப்பு, தட்டையாக அமைந்துவிடும் என்பது மட்டுமல்ல, தமிழ் மட்டும் அறிந்த வாசகனுக்குத் தாகூரை சரியாக அறிமுகப்படுத்தவும் செய்யாது.

கீதாஞ்சலியை மொழி பெயர்ப்பதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. தாகூர் அதில் பயன்படுத்தியுள்ள கவிதை மொழி, அவர் அதை எழுதிய காலத்தில் வழக்கில் இருந்த ஆங்கிலத்தை ஒட்டி அமைந்தது. Thou-Thy-Thee-Thine என்ற சொற்கள் தாராளமாகப் புழங்கும் பழங்கால ஆங்கிலம். Thou இன்று you ஆகி விட்டது. (டெக்னிகலாகப் பார்த்தால் thou என்பது ஒருமை, you என்பது பன்மை.நீ, நீங்கள் போல. ஆனால் தற்கால ஆங்கிலத்தில் இரண்டும் ஒன்றாகி விட்டது) இன்று கீதாஞ்சலியை மொழிபெயர்க்க முற்படும் போது எழும் முதல் கேள்வி, மொழிபெயர்ப்பில் எத்தகைய கவிதை மொழியை பின்பற்றப் போகிறோம் என்பது. தாகூரின் பழங்கால கவிதை மொழியையா? அல்லது தற்காலக் கவிதை மொழியையா?

மொழிபெயர்ப்பாளர்கள், தங்கள் சொந்த விழுமியங்களை அறிந்தோ அல்லது அறியாமலோ, மொழிபெயர்ப்பில் கொண்டு வந்து விடுவது தமிழில் நெடுங்காலமாக நடந்து வந்திருக்கிறது உமர்கயாமின் கவிதைகளை மொழிபெயர்த்த ஒரு காந்தியக் கவிஞர், கோப்பை மதுவால் வழிகிறது என்று பொருள் தரும் ஒரு வரியை கலயம் நிறைய அமுதுண்டு என்று மொழிபெயர்த்துக் கொண்டார். காந்திய வாதியான அவருக்கு மது அமுதாகிவிட்டது!.

இத்தனைக்கும் பிறகும் கூட கீதாஞ்சலியை மொழி பெயர்க்கிறேன் என்று கிளம்பினால், இந்த விளையாட்டுக்கு நான் வரலை என்று விலகி நின்றாலும் நிற்பேனே தவிர நிச்சியம் மறித்துக் கொண்டு நிற்கமாட்டேன். ஏன்?

இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஒரேஇந்தியர் தாகூர்.என்றாலும் வங்கத்தை தாய்மொழியாகக் கொள்ளாத பல இந்தியர்களுக்கு அவரது ஜனகணமனவைத் தவிர வேறு பாடல்கள் எதுவும் தெரியாது. அயல் மொழி இலக்கியங்களை அறிந்து கொள்ள வேண்டும், பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு, வாசக அனுபவத்தை செழுமைப்படுத்தும்என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

தவிர்க்க முடியாத பின் குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் கீதாஞ்சலிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு என்னுடையது. கைக் குண்டிலிருந்து தப்பிக்க நினைத்து கண்ணி வெடிமேலேயே கால் வைத்து விட்டேன்! J

 தினமணி தீபாவளிச் சிறப்பிதழ் 2013

 

 

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *