கலகமா? மகுடமா?

மோடியின் அரசியல் பயணம் எதில் போய் முடியும்?

 

பழைய கதைதான். ஆனால் சுவையானது

வெள்ளையர்கள் நம்மை ஆண்டு கொண்டிருந்த காலம். சிம்லாவிற்குப் போன வைஸ்ராய். அங்கே தங்கியிருந்த மாளிகையின் முன்புறம் இருந்த புல்வெளியில் தன் நண்பர்களுக்கு விருந்தளிக்க விரும்பினார். திறந்த வெளியில் நடக்கும் பார்ட்டி என்பதால் மழை வந்து அதைக் கெடுத்துவிடக் கூடாதே என்றும் யோசனையாய் இருந்தது. வானிலை நிலைய அதிகாரிகளை அழைத்து மழை வருமா என்று கேட்டார்.அவர்கள் ஆராய்ந்து பார்த்து விட்டு வர வாய்ப்பில்லை என்று சொன்னார்கள். என்றாலும் நிச்சயமாக? உறுதியாக? என்று இரண்டு மூன்று முறை கேட்டு, அவர்களைக் குடைந்தெடுத்தார் வைஸ்ராய். அவர்களும் கடந்த கால வரலாறு நிகழ்கால வானியல் என்று என்னவெல்லமோ கணக்குப் போட்டுப் பார்த்து  மழை வரவே வராது என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள்.

அன்றையப் பகல் பொழுதில் உலாவப் போனபோது, வயலில் வேலை முடிந்து தனது கழுதையை ஓட்டிக் கொண்டு எதிரே வந்து கொண்டிருந்த ஒரு படிப்பறிவில்லா விவசாயியைச் சந்தித்தார். என்ன சொல்கிறான் பார்ப்போம் என்று நினைத்து அவரிடம், “மழை வருமா?” என்று கேட்டார். விவசாயி கழுதையைப் பார்த்து, “நீ சொல்லு, மழை வருமா?” என்று கேட்டார். அது தலையை இட வலமாக ஆட்டியது. வைஸ்ராயைப் பார்த்து விவசாயி சொன்னார்: “என் கழுதை இப்படித் தலையாட்டினால், நிச்சியம் மழை வரும்” என்றார்.

ஒரு ஏளனப் புன்னகையோடு வைஸ்ராய் நகர்ந்து விட்டார். அறிவியல் ரீதியாக ஆராய்ந்து சொல்கிற வல்லுநர்கள் எங்கே, இந்தக் கழுதை எங்கே என்பது அந்தப் புன்னகைக்குப் பொருள்.

மாலை பார்ட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று வானம் கருத்து மழை கொட்டித் தீர்த்து விட்டது. பார்ட்டி பாழாய் போனது. பயங்கர கடுப்பான வைஸ்ராய் வானிலை அதிகாரிகளை அழைத்து வைத்து விளாசிவிட்டார். அப்படியும் அவரது ஆத்திரம் தணியவில்லை. சிம்லாவில் இருந்த வானிலை அலுவலகத்தை புனேக்கு மாற்ற உத்தரவிட்டார்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே கருத்துக் கணிப்புகள் நடத்துபவர்களை கிண்டல் செய்வதற்காக இந்தக் கதையைச் சிலர் சொல்வது உண்டு. இந்தக் கதை யாருக்குப் பொருந்துமோ பொருந்தாதோ மோடியைப் பற்றிக் கருத்துக் கணிப்புகள் நடத்துபவர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்.

இடைத்தேர்தல்களில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து அப்போது குஜராத் முதல்வராக கேசுபாய் படேல் பதவி விலக, 2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் ஆண்டு அந்தப் பதவியில் மோடியை கட்சி நியமித்தது. 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி கரசேவை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த 58 பேர் (அவர்களில் 25 பெண்கள், 15 குழந்தைகள்) கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரசின் பெட்டி ஒன்றில் உயிரோடு எரிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கியிருக்க வேண்டிய அன்றைய ஐமூகூ அரசு, குறிப்பாக அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் ஒரு கண்துடைப்புக் கமிஷனை நியமித்து, ரயில் பெட்டிக்குள் சமையல் செய்து கொண்டிருந்தார்கள் அதனால்தான் தீப்பற்றியது என்று அறிக்கை கொடுக்கச் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அந்தப் பெட்டி மீது வெளியிலிருந்த 2000 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதால்தான் அந்தத் துயர சம்பவம் நடந்தது என்று கண்டறிந்தது. விரைவு நீதிமன்றம் 21 பேருக்கு தண்டனை அளித்தது.

கோத்ரா சம்வததையடுத்து பழிக்குப் பழி வாங்கும் வெறி குஜராத்தில் தாண்டவமாடியது. மதக் கலவரம் மூண்டு அப்பாவிப் பொதுமக்கள், ஆயிரக்கணக்கான பேர் (790 இஸ்லாமியர்கள், 254 இந்துக்கள்), கொடுரமாகக் கொல்லப்பட்டனர். காவல்துறை உள்ளிட்ட நிர்வாக இயந்திரம் ஸ்தம்பித்துப் போயிற்று. காவல்துறை அப்போது முதல்வராக இருந்த மோடியின் வாய்மொழி ஆணையின் காரணமாக வன்முறைச் சம்பவங்களைக் கை கட்டி வேடிக்கை பார்த்தது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. (இதைக் குறித்து விசாரிக்க உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்த அறிக்கையில் மோடி வேண்டுமென்றே கலவரத்தை நிகழ்த்தியதற்கான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளது)

மோடி மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல்கள் உரத்து எழுந்தன. நாடாளுமன்றத்தில் அமளி மூண்டது. காங்கிரஸ் அல்லாத கட்சித் தலைவர்கள், கருணாநிதி, சந்திரபாபு நாயுடு, ஏன் ஜெயலலிதா கூட மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என அறிக்கைகள் விடுத்தனர். மோடி பதவியை ராஜினாமா செய்தார். சட்ட மன்றத்திற்குத் தேர்தல்கள் நடந்தன. மோடியின் அரசியல் வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டன என்று பத்திரிகைகள் எழுதின. காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்ற கருத்துக் கணிப்புக்களைத் தவிடு பொடியாக்கினார் மோடி. சட்டமன்றத்தில் உள்ள 182 இடங்களில் 127 இடங்களை மோடி கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்,

அரசியல் கட்சிகளும் ஆருடம் சொன்ன பத்திரிகையாளர்களும் திகைத்தார்கள். ஆனால் சற்று ஆழ்ந்து நோக்கினால் இந்திய அரசியலில் இது புதிது அல்ல என்பதப் புரிந்து கொண்டிருப்பார்கள். 1984ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து தில்லியில் சீக்கியர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டார்கள்.அப்பாவிப் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்கள். ”ஒரு பெரிய மரம் சாயும் போது பூமி அதிரத்தான் செய்யும்: என்று அப்போது ராஜீவ் காந்தி சொன்னார். ஆனால் அந்தத் தேர்தலில் அதுவரை இல்லாத அளவிற்கு- நேரு காலத்தையும் விடக் கூடுதலாக- காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் இடங்கள் பெற்று (மொத்தம் உள்ள 542 இடங்களில் 411 இடங்கள்) ராஜீவ் பிரதமரானார்,

மோடி சந்தித்த இரண்டாவது சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றார். 2007ல் நடந்த அந்தத் தேர்தலில் அவரை மரண வியாபாரி என்று விமர்சித்தார் சோனியா காந்தி. ஆனால் அந்த மரண வியாபாரிக்கு 182 இடங்களில் 122 இடங்களைக் கொடுத்து மறுபடியும் ஆட்சியில் அமர்த்தினார்கள் குஜராத் மக்கள். 2012 தேர்தலிலும் இதே கதை. 2001 லிருந்து இன்று வரை குஜராத்தில் தொடர்ந்து நீண்டகாலம் ஆட்சியில் இருக்கும் முதல்வராக மோடி விளங்குகிறார்.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஆங்கிலப் பத்திரிகைகளும், வட இந்திய தொலைக்காட்சி சானல்களும், மோடி அடுத்த பிரதமராவதற்கு மக்கள் ஆதரவிருப்பதாகச் சொல்லி வருகின்றன, மே இறுதி வாரத்தில், ஐ.மு.கூ. அரசு நான்காண்டுகளை நிறைவு செய்ததையடுத்து CNN –IBN தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பு அடுத்த பிரதமராவதற்கு மன்மோகன் சிங்கிற்கோ, ராகுல் காந்திக்கோ இருப்பதைவிட இரண்டு மடங்கு ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஹெட்லைன்ஸ் டுடே தொலைகாட்சி  சி வோட்டர் நிறுவனத்தோடு இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஐமூகூவிற்கு அது பெறக்கூடிய இடங்களைவிட கூடுதலாக 23 இடங்களைப் பெறும் ஆனால் பாஜகவிற்குக் கிடைக்ககூடிய ஆதாயம் அதை விட சுமார் இரண்டு மடங்காக அதாவது 41 இடங்களாக இருக்கும் என்கிறது.. மோடியை எதிர்ப்பதால் நிதிஷ் குமாருக்குத்தான் இழப்பு என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு. பாஜக கூட்டணியிலிருந்து விலகி அவரது கட்சி போட்டியிட்டால் அது இப்போதிருக்கும் இடங்களில் பாதியைத்தான் பெறும் என்கிறது. ஆனால் இப்போது 12 இடங்களை வைத்திருக்கும் பாஜக 18 இடங்களைப் பெறும் என்கிறது. ABP News நீல்சனுடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி காணும் எனவும் (136 இடங்கள்) பாஜக தலைமையிலான தேஜகூ 206 இடங்களைப் பெறும் என்றும் தெரிவிக்கிறது.

இந்த வானிலை அதிகாரிகளை நம்பி குடையை எடுத்துக் கொண்டு கிளம்ப முடியாதுதான் ஆனால் அண்மையில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் இந்தக் கணிப்புகளை அலட்சியப்படுத்த முடியாது என்றே உணர்த்துகின்றன. ஜூன் ஐந்தாம் தேதி குஜராத்தில் நடந்த இந்த இடைத்தேர்தலில் இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி மோடி சிக்ஸர் அடித்திருக்கிறார். அந்த இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்தவை. அதிலும் ஒரு தொகுதி- போர்பந்தர்- காந்தி பிறந்த ஊர். இந்த சிக்ஸரை விட மோடிக்கு இனிப்பான செய்தி அவரை எதிர்க்கும் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பீகார் இடைத் தேர்தலில் தோற்றதுதாகத்தான் இருக்கும்.   

தொடர்ந்து மோடி அடைந்து வரும் தேர்தல் வெற்றிகளும், ஊடகங்கள் அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதும் அவரது கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் குறித்த உத்திகளை வகுப்பதற்காக அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கோவாவில் கூடியது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி வழி நடத்துவார் என்று காங்கிரஸ் அறிவித்ததைப் போல பாஜக அந்தக் கூட்டத்தில் மோடியை அறிவிக்கும் என ஊகங்கள் உலவின. அந்தக்  கூட்டத்தில் மூத்த தலைவர்கள் அத்வானியும் யஷ்வந்த் சின்காவும், ஜஸ்வந்சிங்கும்  கலந்து கொள்ளவில்லை.அத்வானிக்கு உடல் நலம் இல்லை என பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜாவேகர் விளக்கமளித்தார். ஆனால் உடனடியாக ”நான் நன்றாகத்தான் இருக்கிறேன். என் சொந்தக் காரணங்களால் நான் கலந்து கொள்ளவில்லை” என்று யஷ்வந்த் சின்கா தெரிவிக்கிறார் ஆனால்  கட்சியில்- குறிப்பாக இளைஞர்களிடம்- மோடிக்கு ஆதரவு இருக்கிறது. சங்பரிவார் அமைப்புகளில் ஒன்றான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால், மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று மறைமுகமாக அத்வானியைச் சாடியிருக்கிறார். அகாலி தளம், சிவசேனா, பிஜூ ஜனதாளம் ஆகியவையும் மோடியை ஆதரிக்கின்றன.  

அவருக்கு தேசிய அரசியலில் அனுபவம் இல்லை என்று அவரை விமர்சிப்பவர்கள் சொல்கிறார். ஆனால் அத்தகைய விமர்சனங்கள் அவருக்குப் புதிது அல்ல. 2001ல் கேசுபாய்படேல் ராஜினாமா செய்த போது முதன் முறையாக மோடி முதல்வராக நியமிக்கப்பட்டபோது, அவருக்கு நிர்வாக அனுபவம் இல்லை எனவே அவர் முதல்வராக நியமிக்கப்படும் ஒரு மூத்த தலைவரின் கீழ் துணை முதல்வராக பணியாற்றட்டும் என்ற யோசனை முன் வைக்கப்பட்டது.அந்த யோசனையைச் சொன்னவர் வாஜ்பாய். ஆனால் மோடி, முழுமையாக நிர்வாகத்தை என்னிடம் கொடுத்தால் ஏற்கிறேன். இயலாதென்றால் என்னை விட்டுவிடுங்கள் என்றார். வேறு வழியில்லாமல் அவரிடம் முதல்வர் பொறுப்பு ஒப்டைக்கப்பட்டது.

அதே போல கட்சிக்குள்ளும் வெளியிலும் உள்ள எதிர்ப்புக்களைத் தாண்டி, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட கட்சியைக் கைப்பற்றிவிட்டார் என்பது மட்டுமல்ல, பாஜக வாஜ்பாய் அத்வானி சகாப்தத்திலிருந்து அடுத்த தலைமுறைத் தலைமையை நோக்கி நகர்கிறது என்பதையும் இது காட்டுகிறது.

அதிகார ஏணியில் மோடி முன்னேறுவதன் காரணமாக கட்சிக்குள் கலகம் மூளலாம். அல்லது அவருக்கு மகுடம் வாய்க்கலாம். எது என்பதைக் காண காலம் காத்திருக்கிறது, தன் புன்னகையைக் கடைவாயில் மறைத்துக் கொண்டு. 

——————–

பாக்ஸ்-2

கம்பீரமா? கற்பனையா?

மோடியின் தலைமையில் குஜராத் கம்பீரமாக நடை போடுகிறது என்றுதான் பரவலாக எழுதவும் பேசவும்படுகிறது. ஆனால் பாலச்சந்திர முன்கேகர் என்ற முன்னாள் திட்டக் கமிஷன் உறுப்பினர் தெரிவிக்கும் தகவல்கள் வேறு விதமாக இருக்கின்றன (டைம்ஸ் ஆஃப் இந்தியா ஜூன் 12 2012)

1995-2000ல் 8.01% இருந்த குஜராத்த்தின் பொருளாதார வளர்ச்சி 2001-2010ல் (மோடி பதவியேற்ற பிறகு) 8.68% ஆக உயர்ந்தது உண்மைதான். ஆனால் அந்தக் கால கட்டத்தில் ஆந்திரம், தமிழ்நாடு, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், போன்ற மற்ற மாநிலங்களின் வளர்ச்சியும் கணிசமாக இருந்திருக்கிறது

மோடியின் முதல் ஆட்சிக் காலத்தில் 3.95% இருந்த குஜராத்தின் தொழில் வளர்ச்சி அவரது இரண்டாவது ஆட்சியின் போது 12.6% ஆக உயர்ந்தது உண்மைதான். அந்தக் கால கட்டத்தில் (2006-2009) ஒரிசாவின் வளர்ச்சி 17.53% (6.4%லிருந்து) சத்தீஸ்கரின் வளர்ச்சி 13,3% (8.10%லிருந்து) உத்தரகண்ட் 18.84(11.63%லிருந்து) என்கிறார் முன்கேகர்

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் மற்ற மாநிலங்கள் சோடை போகவில்லை என்பது அவர் வாதம்.2006-10 காலகட்டத்தில் 5.35 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அதன் மூலம் 6.47 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனச் சொன்னது. அதே காலகட்டத்தில் தமிழ்நாடு 1.63லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் அதன் மூலம் உருவாகக்கூடிய வேலை வாய்ப்புகள் 13.09 லட்சம்!  

தனிநபர் வருமானக் குறியீட்டைப் பொறுத்தவரை 2011ல் குஜராத்திற்கு ஆறாம் இடம்.(ரூ.63,996) ஆனால் ஐந்து மாநிலங்கள் அதை விஞ்சி முன்னணியில் இருக்கின்றன. (அதில் தமிழ்நாடும் ஒன்று ரூ72993 ஐந்தாம் இடம்)

குஜராத் பொருளாதார வளர்ச்சியில் வளர்ந்திருக்கலாம். ஆனால் வருமானம், ஆரோக்கியம், கல்வி இந்த மூன்றின் அடிப்படையில் அளவிடப்படும் மனித வளர்ச்சிக் குறியீட்டில் (Human Development Index) அது மிகவும் பின் தங்கியிருக்கிறது. 2011ல் இந்தக் குறியீட்டில் அது 0.527 புள்ளிகள் பெற்று 11வது இடத்தில் இருக்கிறது (தமிழ்நாட்டிற்கு 8ம் இடம் 0.570 புள்ளிகள்)

 

பாலச்சந்திர முன்கேகர் காங்கிரஸ்காரர், அந்தக் கட்சியின் ஆதரவில் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டவர், என்னும் மோடியின் ஆதரவாளர்கள் ஆனால் அவரால் கூட குஜராத்தின் வளரவில்லை எனச் சொல்ல முடியவில்லை பாருங்கள் என்கிறார்கள்! புள்ளி விபரங்களை எப்படி வேண்டுமானாலும் திரிக்கலாம். மோடி பொறுப்பேற்ற போது 2001 ஜனவரியில் ரிக்டர் ஸ்கேலில் 7.7 அளவிற்கு மிகப் பெரும் நில நடுக்கம் ஏற்பட்டு, ஆறு லட்சம் மக்கள் வீடிழந்து குஜராத்தின் 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. தவிடுபொடியான அந்த நிலையில் இருந்த மாநிலத்தைத் தலைநிமிரச் செய்தது சாதனை இல்லையா? என்கிறார்கள்

-புதிய தலைமுறை 20 ஜூன் 2013

எழுதியது: ஜூன் 9 2013        

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *