தியாகமா? துரோகமா?

வாசலில்  வந்து நின்றது அந்த வாடகைக் கார். என் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்த போது அருணனும் கவிதாவும் அதிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அருணன் என் பள்ளித் தோழன்.பாண்டிச்சேரியில் பணியில் இருக்கிறான். கவிதா கல்லூரிப் பேராசிரியை. அவன் மனைவி.

 பாக்கு வெற்றிலை, பழக்கூடை இவற்றிற்கு நடுவில் பத்திரிகை ஒன்றை வைத்து நீட்டினார்கள். மகளுக்குத் திருமணம். “காதல் கல்யாணமா?” என்று அழைப்பிதழைப் பிரித்துக் கொண்டே நான் அவனைப் பார்த்தேன்.

 அவன் கல்யாணம் நடந்த தினம் ஞாபகத்தில் வந்து போனது. அச்சத்திற்கும் அமளிக்கும் நடுவில் அது நடந்தது. எந்த நிமிடமும் எதுவும் நேரலாம் என்ற பதற்றத்தின் நடுவே பத்திரப் பதிவு அலுவலகத்தில் அது நடந்தது. அந்தப் பதற்றத்திற்குக் காரணம் அது காதல் கல்யாணம்.

காற்றில் மிதக்கும் சரிகை நூலைப் போல கடந்த காலத்தின் அந்த நிமிடம் நினைவை நீந்திக் கடந்தது.அன்று காதல் கல்யாணங்கள் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படவில்லை. உள்ளத்தின் நெருக்கமல்ல, உடற்பசிதான் காதலுக்கு ஆதாரம் என்று எளிமைப்படுத்தப்பட்ட எண்ணங்கள் எங்கும் இறைந்து கிடந்த காலம் அது.  

அன்று காதலர்கள் எளிதாகச் சந்தித்துக் கொள்ள காபிக் கடைகள் இல்லை, எப்போது வேண்டுமானாலும் செய்தி பரிமாறிக் கொள்ள எஸ்.எம்.எஸ்.கள் இல்லை. கடைக் கண்களால் பேசி, கல்லூரி வகுப்பறையில் பாட நோட்டின் பக்கங்களில் கடிதங்கள் எழுதி எவரும் அறியாமல் அவற்றை பரிமாறிக் கொள்ளும் கறுப்பு வெள்ளைப் படக் காதல்கள் அவை, அன்று காதல்கள் கல்யாணம் வரை வர வேண்டுமானால் அதற்குப் பின் முரண்டு பிடிக்கும் இதயங்கள் இரண்டு இருக்க வேண்டும். அந்த அளவிற்கு இளைஞர்கள் மேல் குடும்பம் நிழலிட்டிருந்தது.

 காதல் கல்யாணம் என்பதே குடும்பத்திற்குச் செய்யும் துரோகம் என்றொரு கற்பிதம் இருந்தது. எதிரிகளைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம், துரோகிகளைத் தொலைத்துக் கட்ட வேண்டும் என்ற வன்மம். குளத்தில் படிந்த பாசியைப் போல சில குடும்பங்களிலும் படர்ந்து கிடந்தது.

 அதன் காரணமாக உரக்கப் பேசாமல், உள்ளுக்குள்ளேயே உறங்கிக் கிடந்த காதல்கள் அநேகமாக அந்தத் தலைமுறையின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ளே இருந்தது அந்தக் காலத்தில்தான் அருணன் கவிதாவைக் காதலித்துக் கைப்பிடித்தான்.

காதல் கல்யாணமா என்ற என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் புன்னகைத்தான். அசட்டுப் புன்னகை. உயிரற்ற ஒளியற்ற புன்னகை. கவிதாதான் பட்டென்று போட்டுடைத்தாள். “இல்லண்ணா, நாங்க பார்த்த பையன்தான்!” அதற்கப்புறம் அவள் சொன்னதில் ஓர் அதிர்வெடி ஒளிந்திருந்தது. “இந்தக் காலத்தில் காதல் எல்லாம் சரியாய் வராதண்ணா. பார்க்கும் போதே எந்தப் பெண்ணையும் காதலியாகத்தான் பார்க்கிறாங்க. அடுத்த பத்தாவது நிமிடத்தில ஐ லவ் யூங்கிறான். ஒண்ணாச் சில மாசம் ஊரைச் சுத்தறாங்க. அப்புறம் ஒரு நாள் ஒத்து வராதுனு பிரிஞ்சிர்றாங்க.காதலுக்கு நம்ப காலத்தில் இருந்த அர்த்தம் எல்லாம் காணாமல் போயிருச்சு!” என்றாள்.

“நிறைய சினிமா பார்க்கிறியா கவிதா?”

“இல்லண்ணா, நான்தான் கல்லூரில கண்ணெதிரே பார்க்கிறேனே?”

அருணன் மகள் கல்யாணத்திற்குப் போயிருந்தேன். கல்லூரிக் கால நண்பர்கள் வந்திருந்தார்கள்.சடங்குகள் முடிந்து விட்டன, சாப்பாட்டிற்கு இன்னும் நேரமிருந்தது. அருகருகே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்தோம். காலக் காற்றில் கசங்கிப் போன நடுத்தர வயதுக்காரனைப் போல அன்றைய நாளிதழ் ஒரு நாற்காலியில் உருக்குலைந்து கிடந்தது. எல்லா நாளிதழ்களிலும் இடம் பெற்றிருந்த இளவரசன் திவ்யா பிரிந்து விட்ட செய்தி எங்கள் அரட்டைக்கு நடுவில் அரைபட்டது.

 “என்ன கடைசில இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணிடுச்சே?” என்று ஆரம்பித்தான் ஒருவன்.

 “குற்ற உணர்வு காரணமா இருந்திருக்கலாம் இல்லியா?” என்றாள் ஒரு தோழி.”அப்பாதான் போயிட்டாரு. அம்மாவையாவது நாம காப்பாத்தணும்னு அந்தப் பொண்ணு நினைச்சிருக்கக் கூடாதா?” என்பது அவள் வாதம்.

 “ஊர் எரிஞ்சிருக்கு. இத்தனை பேர் உதைபட்டிருக்கான், உசிரைப் பணயம் வைச்சு ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருக்கான். இதையெல்லாம் ஒரு நிமிஷம் நினைச்சுப் பார்க்காம, உதறிட்டுப் போயிருச்சே!. அப்ப குற்ற உணர்வு வரலையா? இது துரோகங்க!” எனப் பொருமினன் விவாதத்தை ஆரம்பித்த சண்முகம்.

 “எங்கள் மீது பெரும் அழுத்தம் இருந்தது. ஊர் நலனுக்காக, சமூக நலனுக்காக, என் கணவரை, காதலை, வாழ்வைத் துறக்கிறேன்னு அந்தப் பொண்ணு சொல்லியிருக்கிறதைப் பார்க்கலையா சண்முகம்” இது துரோகம் இல்ல, தியாகம்”  என்றேன் நான் அவனிடம்.

தனக்காக சமூகத்தைப் பகைத்துக் கொள்கிற அந்தக் காலத்து காதலைவிட சமூகத்திற்காகத் தன்னைப் பகைத்துக் கொள்கிற இந்தக் காதல் எனக்கு மகத்தானதாகத் தெரிந்தது. கண்ணால் கண்டதாகக் கவிதா சொன்னதெல்லாம் அபத்தம் என்று இந்தச் செய்தியில் நிரூபணம் ஆயிற்று

 “கடைசியில் ஜாதிதானே ஜெயிச்சது? காதல் தோத்திருச்சே!” என்றான் சண்முகம் சளைக்காமல்

அவனுக்குநான்பதில்சொல்லவில்லை. கல்யாணத்தில்முடிவதுதான்காதலின்வெற்றிஎனக்கருதும்மூடனிடம்நான்என்னபேச? அப்படிநினைப்பதேகூடகாதல்உடலைமையமாகக்கொண்டதுஎன்றகருத்தைஉறுதிப்படுத்துவதுஅல்லவா? காதல் உடலால் வாழ்வதில்லை அது மனதால் வாழ்வது. உடம்புக்குத்தான் சடங்கு. மனதுக்கு எப்போதும் நினைவுதான். நினைவில் வாழ்கிற காதலை ஜாதியோ சமூகமோ சிதைத்துவிட முடியுமா?

ஒரு கணத்தில் ஈர்ப்பு ஏற்படலாம். உன்னைப் பிடிக்கிறது எனச் சொல்ல ஒரு நாள் ஆகலாம். காதலிக்கிறேன் எனச் சொல்ல காலம் சிறிது தேவைப்படும். ஆனால் மறக்க ஒரு ஆயுசு போதாது.

 அதுதான் காதல் 

2 thoughts on “தியாகமா? துரோகமா?

  1. கோ.புண்ணியவான்

    தனக்காகச் ச்மூகத்தைப் பகைத்துக் கொள்கிற அந்தக் காலத்து காதலைவிட, சமூகத்துக்காகத் தன்னைப் பகைத்துக் கொள்கிற இந்தக் காலத்துக் காதலை நான் மகத்தானதாகக் க்ருதுகிறேன். பஞ்ச் சார்

    Reply

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *