பாரதியின் சுயஜாதி அபிமானம்

“நமக்கு சிறிது சுயஜாதி அபிமானம் ஜாஸ்திதான் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்” என்று 22.1.2.1906 தேதியிட்ட இந்தியா பத்திரிகையில் எழுதினார் பாரதி.

ஜாதிக் காழ்ப்பின் காரணமாக பாரதியை சிறுமைப்படுத்தி எழுதிவரும் அன்பர்கள் இந்த ஒரு வரியைப் பிடித்துக் கொண்டு அவரே சொல்லிவிட்டார் என்று உற்சாகம் கொண்டு, குதித்துக் கூத்தாடி மகிழ்ச்சி அடைந்து விட வேண்டாம். அவர் தான் பிறந்த ஜாதி வழக்கங்களைத் துறந்து  வாழ்ந்ததைப் பற்றி அவருடன் வாழ்ந்த செல்லம்மாவும், யதுகிரியும், பாரதிதாசனும் நிறையவே எழுதியிருக்கிறார்கள். அவர் இங்கு சுயஜாதி என்று சொல்வது தான் பிறந்த ஜாதியை அல்ல. அப்படி விபரீதப் புரிதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அடுத்த வரியிலேயே அதை விளக்கி விடுகிறார் பாரதி:.

“பத்திரிகைத் தொழில் நடத்தும் நமக்கு மேற்படி தொழிலைக் கொண்ட நமது சுயஜாதியாரிடம் எப்போதும் அன்பும் அபிமானமும் உண்டு. அதிலும் சுதேசமித்திரன் பத்திரிகை நெடுங்காலத்துப் பத்திரிகையானதால் அதிலே நமக்கு மிகுந்த பிரியம் உண்டு. ஆனால்…” என்று அவர் ‘புதிய கட்சியாரும் சுதேசமித்திரன் பத்திரிகையும்’ என்ற கட்டுரையிலே எழுதிக் கொண்டு போகிறார்.(22.12.1906)

பத்திரிகைத் தொழிலை தன் வாழ்வாக எடுத்துக் கொண்டவர் பாரதி என்பதும், மதுரை சேதுபதி பள்ளியில் சிறிது காலம் தற்காலிகமாக ஆசிரியராகப் பணியாற்றிய நான்கு மாதங்கள் தவிர, தன் கடைசி மூச்சுவரை பத்திரிகையாளராகவே வாழ்ந்தார் என்பதும், அவரது பத்திரிகைகள் ஏகாதிபத்தியங்களால் முடக்கப்பட்ட போதும் வேறு வேலை தேடிப் போகவில்லை என்பதும் பலரும் அறிந்த செய்தி என்பதால் அதை இங்கே விரிக்கப் போவதில்லை.

பத்திரிகைத் தொழிலைத் தன் வாழ்வாக எடுத்துக் கொண்ட பாரதி, ஒரு தொழில் முறைப் பத்திரிகையாளன் (professional) எப்படிச் செயல்படுவானோ, செயல்பட வேண்டுமோ, அப்படி ஆரம்பம் முதலே இயங்கத் தொடங்கி விட்டார் என்பதைச் சொல்லவே இங்கு முற்படுகிறேன். அதனை பத்திரிகைத் தொழிலின் ஆரம்ப நாட்களில் எழுதியவற்றை மட்டுமே (1906-1907) ஆதாரமாகக் கொண்டு எழுதுகிறேன். தெய்வ சித்தமும் ஆயுளும் இருந்தால் பின்னொருநாள் அவர் வாழ்க்கை முழுமையும் ஆதாரமாகக் கொண்டு எழுத முயல்வேன்

ஒரு நல்ல பத்திரிகை ஆசிரியரின் பலம், சிறப்பு எழுத்து (மட்டும்) அல்ல. வாசிப்பு. தனது பத்திரிகைக்கு அப்பால் தனது சமகாலத்துப் பத்திரிகைகள் என்ன எழுதுகின்றன, எப்படி எழுதுகின்றன,என்பதை ஒவ்வொரு நாளும் வாசித்து வர வேண்டும். பாரதி வாசித்த  பத்திரிகைகளின் சுருக்கமான பட்டியல் இது: (தமிழ்நாட்டில் வெளியான தமிழ்ப் பத்திரிகைகள் தவிர்த்து)

லண்டன் டைம்ஸ் (ஆங்கிலம்-லண்டன்). இங்லீஷ் மேன் (ஆங்கிலம்-லண்டன்), கமிங் டே (ஆங்கிலம் –லண்டன்), லிபரல் (ஆங்கிலம் –லண்டன்) கேலிக் அமெரிக்கன் (ஆங்கிலம்- அமெரிக்கா) வோவோலி ரெம்யா( ரஷ்யா) (தி ஹிண்டு (ஆங்கிலம்- சென்னை), மெட்றாஸ் மெயில் (ஆங்கிலம்-சென்னை) இந்தியன் ரிவ்யூ (ஆங்கிலம் –சென்னை), இந்தியன் பேட்ரியேட் (ஆங்கிலம்- சென்னை) இந்தியன் டெய்லி நியூஸ் (ஆங்கிலம்- கல்கத்தா), பயனீர் (ஆங்கிலம்-அலகாபாத்) அமிர்த பஜார் பத்திரிகா (ஆங்கிலம் –கல்கத்தா) மார்டன் ரிவியூ (ஆங்கிலம்-கல்கத்தா) காபிடல் (ஆங்கிலம் –கல்கத்தா) தி பஞ்சாபி (ஆங்கிலம்-லாகூர்), ஹிந்தி கேசரி (ஹிந்தி-நாக்பூர்) ஹிந்தி பஞ்ச்(ஹிந்தி-பம்பாய்) ஹிந்து ஸ்வ்ராஜ்யா (ஹிந்தி-பம்பாய்) விஹாரி (வங்கம் –கல்கத்தா) யுகாந்தர் (வங்கம் –கல்கத்தா) வந்தே மாதரம் (வங்கம்-கல்கத்தா) ஸந்தியா (வங்கம்-கல்கத்தா) ஸ்ஞ்ஜீவினி (வங்கம் –கல்கத்தா) அசாத் ( உருது- லாகூர்) இவற்றோடு சுதேச பரிபாலினி (தமிழ்- ரங்கூன்) இந்திய மித்திரன் (தமிழ்-ரங்கூன்)

இதில் கேலிக் அமெரிக்கன் அமரிக்காவில் வசித்த அயர்லாந்துக்காரர்கள் நடத்தி வந்த பத்திரிகை. அயர்லாந்தும் அப்போதும் பிரிட்டீஷாரிடமிருந்து விடுதலை கோரி வந்தது. அதனால் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை விமர்சித்து வந்தது. அதன் காரணமாக அது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதை ரகசியமாகத் தருவித்து அவர் வாசித்து வந்தார். அதற்குச் சான்று 1906ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி இந்தியா இதழில் எழுதிய கட்டுரை:

“அமெரிக்காவில் பிரசுரமாகும் கேலிக் அமெரிக்கன் பத்திரிகை கூறுகிறது: இந்தியாவிற்கு  சுய ஆட்சி முதலிய சுதந்திரங்களை சீக்கிரம் கொடுப்பதற்கு  முயல்வதாய் மிஸ்டர் ஜான் மார்லி, மிஸ்டர் கோகலேயை ஏமாற்றி  இந்தியாவிற்கு வழியனுப்பிவிட்டார். மிஸ்டர் கோகலேயும் அதை நம்பிக் கொண்டு இந்தியாவிற்கு  வந்து இந்தியருக்கு வீணான ஆசை வார்த்தை சொல்லி, பிரிட்டீஷ் கவர்ன்மெண்டாரிடம் நம்பிக்கை வைத்துக் காலம் வருகிறவரை காத்துக் கொண்டிருக்கும்படி புத்திமதி கூறப் போகிறார்.தவிரவும்  இந்தியரும் ஐர்லாந்துக்காரர்களும் ஒரேவிதமான கஷ்ட நிலமையில் இருப்பதாலும் ஐர்லாண்டிற்கு நிவாரணம் சீக்கிரம் வரப்போகிறபடியாலும், இந்தியாவிற்கும் சீக்கிரம் நன்மை உண்டாகுமென்று கோகலே பிரசங்கம் செய்யப் போகிறார். இது பெரிய பிழை. பிரிட்டீஷ் கவர்மெண்டார் ஐர்லாந்தரை இதுவரை ஏமாற்றியேயிருக்கிறார்கள். இனியும் ஏமாற்றவே போகிறார்கள். ஆகையால் அவர்கள் இந்தியாவை நிச்சயம் ஏமாற்றத்தான் எண்ணியிருக்கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  வீணாய்  கவர்மெண்டை நம்ப வேண்டாம்.ஏ! இந்தியர்களே நம்பிக்கை வைத்துக் கெட்டுப் போக வேண்டாம்.” 

இது இந்தப் பத்திரிகைகள் குறித்து அவர் வெறுமனே பெயர் உதிர்த்து விட்டுப் போய்விடவில்லை என்பதற்கான சான்று. அவர் இந்தப் பத்திரிகைகளை .வாசித்தற்கான பல தடயங்கள் அவர் கட்டுரைகளில் காணப்படுகின்றன. சிலவற்றிலிருந்து செய்திகளை மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறார். சிலவற்றிலிருந்து மேற்கோள் கொடுக்கிறார். சிலவற்றை விமர்சித்திருக்கிறார். சிலவற்றின் மீது சீறிப்பாய்ந்திருக்கிறார். சிலவற்றை ஏளனம் செய்து சிரிக்கிறார். இவற்றில் சில பத்திரிகைகள் அடக்கு முறைக்குள்ளான போது அந்த நடவடிக்கையைக் கண்டித்துச் சென்னையில் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். அவற்றின் வழக்கு நிதிக்குப் பணம் திரட்டி அனுப்பியிருக்கிறார்.

தி பஞ்சாபி என்றொரு பத்திரிகை லாகூரிலிருந்து வந்து கொண்டிருந்தது. அதன் உரிமையாளர் லாலா லஜபதி ராய்க்கு நெருக்கமான லாலா ஜஸ்வந்த் ராய்.அதன் ஆசிரியராகப் பணியாற்ற திலகர் அதாவலே என்பவரை அனுப்பி வைத்தார். இரு பெரும் தேசத் தலைவர்களால் அரவணைக்கப்பட்ட அந்தப் பத்திரிகை ஆங்கிலேயே அரசை விமர்சித்து எழுதிக் கொண்டிருந்தது. அதனால் ஆத்திரமடைந்திருந்த ஆங்கிலேயே அரசு அதை முடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.ஆனால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

அப்போது வெளியான ஒரு செய்தியைப் பழிவாங்கக் கையிலெடுத்துக் கொண்டது அரசு. அந்த செய்தி இதுதான்: “ சில மாதங்களின் முன்பு மிஸ்டர் ஸ்பென்ஸர் என்ற போலீஸ் அதிகாரி மற்றொரு ஐரோப்பியர் சகிதமாக வேட்டையாடச் சென்றான். அப்போது ஸ்பென்ஸர் தான் சுட்டு வீழ்த்திய பன்றியைத் தன் முகமதிய சேவகனை எடுத்துக் குதிரைச் சேணத்துடன் கட்டிக் கொண்டு போகச் சொல்லியதில், முகமதியனாதால் சேவகன் மறுத்தான். மறுத்ததின் பேரில் ஐரோப்பியனுக்கு கோபம் வந்து  முகமதியச் சேவகனைச் சுட்டுக் கொன்றான்.இப்படி வதந்தி ஊரிலிருப்பதாகவும்  கவர்மெண்டார் உண்மை இன்னதென்று பிரசுரம் செய்ய வேண்டும்”

இந்தச் செய்தி இரு வகுப்பாரிடையே வெறுப்பையும் விரோதத்தையும் தூண்டுவதாகச் சொல்லி அரசு ஜஸ்வந்ராய் மீதும், அதாவலே மீதும் வழக்குத் தொடுத்தது. கீழமை நீதி மன்றத்தில் ஜஸ்வந்த்ராய்க்கு இரண்டாண்டு கடுங்காவலும், ரூ 1000 அபராதமும், அதாவலேக்கு ஆறுமாதக் கடுங்காவலும் ரூ 200 அபராதமும் விதிக்கப்பட்டது.

அரசின் உள்நோக்கத்தை உணர்ந்த தேசபக்தர்கள் நாடு முழுக்க கிளர்ந்தெழுந்தார்கள். பாரதி இந்த பத்திரிகை குறித்தும், வழக்குக் குறித்தும் தொடர்ந்து (வழக்கு ப்ரீவி கவுன்சில் செல்லும் வரை) எழுதி வந்ததோடின்றி சென்னையில் இரண்டு கூட்டங்கள் நடத்தினார். ஒன்று அவர் நடத்தி வந்த பாலபாரதா சங்கம் (இதுதான் பாரதியை ஆசிரியராகக் கொண்ட பாலபாரதா என்ற ஆங்கில இதழை வெளியிட்டு வந்தது) 23.2.1907 அன்று ஏற்பாடு செய்த கூட்டம். மற்றொன்று நான்கு நாட்களுக்குப் பிறகு, 27.2.1907 அன்று பிரசிடென்சி கல்லூரிக்கு எதிரே, கடற்கரையில் சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய ஐயர் தலைமையில் நடந்த, பாரதி, சக்கரைச் செட்டியார் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம். இந்தக் கூட்டத்தில்தான் பாரதி பின்னாளில் பிரபலமான “வந்தேமாதரம்! ஜெய வந்தேமாதரம்!” என்ற பாடலைப் பாடினார். கூட்டத்தில் உண்டியல் மூலம் நிதி திரட்டப்பட்டது ரூ.20 அணா 8 பைசா 7 சேர்ந்தது என்று இந்தியாப் பத்திரிகை இதழ்கள் கூறுகின்றன.

இதே போல ஹிந்து ஸ்வராஜ்ய என்ற பத்திரிகை முடக்கப்பட்டபோதும் அதைக் கண்டித்து எழுதியிருக்கிறார் பாரதி.

பத்திரிகைகள் முடக்கப்பட்டபோது அவற்றிற்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாரதி அவை அறம் பிறழ்ந்த போது அவற்றை விமர்சிக்கவும் தயங்கவில்லை.

வங்காளத்தை இரண்டாகப் பிரித்த லார்ட் கர்ஸனின் மனைவி இளம் வயதில் இறந்து போனார். அதைக் குறித்து செய்தி வெளியிட்ட அமிருத பஜார் பத்திரிகை இது கர்ஸனுக்குக் தெய்வத்தால் கொடுக்கப்பட்ட சரியான தண்டனை என்றெழுதியது. அதைக் குறித்து பாரதி 28.7.1906 இதழில் பாரதி எழுதுகிறார்:

“தேசாபிமானத்திற்கும் நல்லறிவுக்கும் பெயர் படைத்ததாகிய கல்கத்தா அமிருத பஜார் பத்திரிகையைப் பற்றி கண்டனை வார்த்தை எழுதும்படி நேர்ந்து விட்டது பற்றி வருத்தமடைகிறோம்.ஆனால் கூடப்பிறந்த சகோதரனாய் இருந்த போதிலும் அவனுடைய குணங்களை மறைத்து வைப்பது அழகாக மாட்டாதல்லவா?ஆதலால் எத்தனையோ மதிப்பிடக்கிடமாகிய அமிருத பஜார் பத்திரிகை கூடப் பிழை செய்யும் பட்சத்தில் அதை எடுத்துக் காட்டுவது நமது கடமையாகிறது.லேடி கர்ஸான் சென்ற வாரம் இறந்து போய்விட்டதைப் பற்றி இந்தப் பத்திரிகை எழுதி வரும்போது சரியான தெய்வ தண்டனை என்று கூறுகிறது.இது சிறிதேனும் கவுரமற்ற மனிதர்கள் பேசுவது மாதிரியாக இருக்கிறதல்லவா? நமது பரம சத்ருவாக இருக்கும் போதிலும் அவனுக்கு மனைவி இறத்தல் போன்ற கஷடம் நேரிடும் போது நாம் அவன் செய்த தீமைகளை எடுத்துக் காட்டி சந்தோஷமடைவது பேடித்தனமான செய்கை. லார்டு கர்ஸான் நமக்குச் செய்த தீமைகளின் பொருட்டு அவரை வேண்டிய மட்டும் கண்டனை புரியலாம்.அவரைத் தக்கபடி சிக்ஷை செய்யாமல் நம்மை இம்சித்ததின் பொருட்டு மரியாதை செய்யும் பிரிட்டீஷ் கவர்மெண்டாரை கண்டனை செய்து பேசலாம். அதை விட்டு . “ஏ ஏ லார்டு கர்ஸான், நீ என்னைத் தொந்திரை செய்தாய் அல்லவா, அதனால்தான் உன் மனைவி செத்துப் போனாள் என்று குழந்தைத்தனமாக அமிருத பஜார் பத்திரிகை பேசுவது அதன் பெருமைக்கு முற்றிலும் விரோதமாகும். உண்மையான ஆசிரியன் தனது விரோதிகளுக்குக் கூட துக்கம் ஏற்பட்ட சமயத்தில் இரக்கமுடையவனாக ஆவானேயன்றி சந்தோஷமடைய மாட்டான்”

ஆனால் அயல்நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகள் (அவற்றைப் பரங்கிப் பத்திரிகைகள் என்று குறிக்கிறார் பாரதி) பொய்யான அரசியல் விமர்சனங்கள் செய்யும் போத் இது போலக் ‘கடிதோச்சி மெல்ல எறியும்’ மென்மையான நடையை அவர் கையாளுவதில்லை. மாறாகச் சீறுகிறார்.

லண்டன் டைம்ஸ் பத்திரிகை ஒரு முறை ‘இந்தியாவை நாம் வாள் பலத்தால் ஜெயித்தோம்’ என்று எழுதியது. அதை கண்ட பாரதி சினத்தில் சீறி எழுகிறார்.

“இந்தியாவை நாம் வாள் பலத்தால் ஜெயித்தோம்; மிஞ்சி வந்தால் அதை வாள் பலத்தினாலேயே அடக்குவோம்” என்று லண்டன் டைம்ஸ் பத்திரிகை எழுதுகிறது . இது பிரம்மாண்டமான பொய். வெறும் பொய்யாக மாத்திரம் இருக்கும் பட்சத்தில் நாம் இதை கவனித்திருக்க மாட்டோம். ஆனால் இது அக்கிரமானதும்  கோபம் உண்டாக்கத்தக்கதும் வெட்கமற்றதுமான பொய்.” என்று 26.01.1907 இதழில் தனது கட்டுரைத் தொடங்கும் பாரதி அது பொய் என்பதை ஸீலி என்ற ஆங்கில அறிஞர் எழுதியதிலிருந்து எடுத்துக் காட்டி மெய்ப்பிக்கிறார்:

“உள் நாட்டிலேயே குழப்பங் கொண்டிருந்த இத் தேசத்தை ஆங்கிலேய வர்த்தகக் கம்பெனியார்  இந்தியப் படைகளையும் இந்தியப் பணத்தையும் வைத்துக் கொண்டு தந்திரத்தினாலும் கபடத்தினாலும் ஜெயித்தார்களென்று  மேற்படி ஆங்கிலேயப் பண்டிதர் விஸ்தாரமாக நிரூபணம் செய்திருக்கிறார். அவருடைய விவகாரங்களையும் சித்தாந்தத்தையும் மற்றொரு முறை தமிழில் மொழிபெயர்த்து எழுத உத்தேசிக்கிறோம்”

திரைப்படங்களிலும் நாடகங்களிலும் பாரதி உறுமிக் கொண்டும் சிலிர்த்துக் கொண்டும் விழிகளை உருட்டிக் கொண்டும், எப்போதும் விரைப்பாக இருப்பதைப் போலவும் காட்டப்படுகிறார். ஆனால் அவர் அபரிமிதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதை அவரது எழுத்துக்கள் காட்டுகின்றன.

ஹிந்தி பஞ்ச் என்ற இந்திப் பத்திரிகையின் முத்திரைச் சின்னம் ஒரு கிழவர். (பின்னாளில் ஆனந்த விகடன் தாத்தா இதை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. முதலில் ஒரு கோமாளிதான் அதன் முத்திரைச் சின்னமாக இருந்தது) ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருந்த லண்டன் பஞ்ச் என்ற பத்திரிகையின் மாதிரியில் உருவாக்கப்பட்ட அந்தப் பத்திரிகை சுயாட்சி என்ற விருப்பம் இந்தியர்களின் இயல்புக்கு மாறானது என்றும் இந்தியர்களுக்கு அடிமையாக இருக்கவே விருப்பம் என்று எழுதியது. அதைக் குறித்து பாரதி எள்ளலுடன் எழுதுகிறார்: “எப்போதும் உல்லாச குணமுடைய பஞ்ச் தாத்தா, இந்தத் தடவையில் புதிய கட்சியாரைப் பற்றி எழுதும் போது சிறிது கடுங்குணத்துடன் எழுதியிருப்பது கண்டு விசனமடைகிறோம். சுயாதீன விருப்பம் இந்தியா தேசத்தின் இயற்கைக்கு மாறுபட்டதென்றும், அது மேற்குத் திசையார்களுக்கே சொந்தமென்றும், அது இந்த நாட்டிலே தழைக்காதென்றும், அடிமை விருப்பமே இந்நாட்டிற்கு உரியதென்றும் சில பேதைகள் கொண்டிருக்கும் கோட்பாடு பஞ்ச் தாத்தாவின் மூளைக்குள்ளேயும் தாவிவிட்டமை  பற்றி வருத்தமடைகிறோம்”.  (இந்தியா 20.10.1906)

பாரதியார் நடத்திய , ஆசிரியராக வழி நடத்திய பத்திரிகைகள் பற்றிய செய்திகளும் அவர் இந்த அயல் மொழி, அயல் நாட்டுப் பத்திரிகைகள் பற்றி எழுதியவற்றிலே காணக் கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக அவர் ஆசிரியராக இருந்த இந்தியா பத்திரிகைக்கு முதலில் சூட்ட எண்ணியிருந்த பெயர் வந்தேமாதரம். இந்தத் தகவலை அவரே வந்தேமாதரம் என்ற இதழைப் பற்றி எழுதும் போது குறிப்பிடுகிறார்.

பாரதி தனது பத்திரிகைப் பணி மூலம் பல கலைச் சொற்களைத் தமிழுக்குத் தந்தவர். பட்ஜெட் என்ற் சொல்லை நேரடியாக மொழிபெயர்க்காமல் (பட்ஜெட் என்றால் தோலால் ஆன பணப்பை) அதை முதன் முதலில் வரவு செலவுத் திட்டம் என்று குறிப்ப்பிட்டவர் அவர்தான். வரிகள் என்பதை அரசிறை என்றும் எழுதுகிறார்,

ஆனால் அவரே ‘சுய ஆட்சி’ என்று நல்ல தமிழில் எழுதி வந்ததை ஸ்வராஜ்யம் என்று மாற்றுகிறார். “இதுவரை நமது பத்திரிகையில் சுய ஆட்சி என்று சொல்லி வந்ததை இனி ஸ்வராஜ்யம் என மாற்றுகிறோம்” என்று 19.01.1907 இந்தியா இதழில் எழுதுகிறார். ஏன்? இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? அதையும் அவரே எழுதுகிறார்: “ ஸ்வராஜ்யம் என்ற அழகிய வார்த்தை பாரத நாட்டின் பிரதம குமாரராகிய ஸ்ரீ தாதாபாய் நவுரோஜியினால் காங்கிரஸ் உபந்நியாசத்திலே கூறப்பட்டது”

தென்கோடியில் இருக்கும் குலசேகரப்பட்டினக் கலவரத்திலிருந்து பிரிட்டீஷ் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வரவு செலவுத் திட்டம் வரை, தென்னாப்ரிக்காவில் இந்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டதிலிருந்து நவீன ருஷ்யாவின் விவாக விதிகள் வரை பாரதிக்கு எழுத முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அவரது பரந்த அதேசமயம் ஆழ்ந்த பத்திரிகை வாசிப்புத்தான்.

இங்கே கொடுத்துள்ளவை கடலுக்குள் உள்ள பனிமலையின் முனை மாத்திரம்தான், அவரது ஆரம்ப நாட்களில் எழுதியவற்றிலிருந்து சிலவற்றை இங்கு எடுத்துக்காட்டாகக் கொடுத்திருக்கிறேன். 1904ல் அவர் சுதேசமித்திரனில் சேர்ந்தார். இங்குள்ளவை 1906-1907 ஆண்டுகளில் எழுதியவை. பின்னாளில், அதுவும் பிரிட்டீஷ் இந்தியாவிலிருந்து அவரது இந்தியா பத்திரிகை புதுச்சேரிக்குப் பெயர்ந்த பின் அவரது எழுத்தும் பார்வையும் கூர்மையும் வீறுமடைந்தன. அவற்றை கட்டுரையாக எழுத இயலாது. நூலாகத்தான் எழுத வேண்டும்.                       

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these